திங்கள், 12 அக்டோபர், 2020

பரூக் அப்துல்லா : சீனா ஆதரவுடன் காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவு அமலுக்கு வரும்...

Mathivanan Maran tamil.oneindia.com : ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சீனாவின் ஆதரவுடன் மீண்டும் அமலுக்கு வரும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. 

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு மற்றும் அதனுடன் இணைந்த 35ஏ ஆகியவை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகளை வழங்கி வந்தன. இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்தது முதல் இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு அமலில் இருக்கிறது. பல்வேறு கட்டங்களில் இந்த அரசியல் சாசனப் பிரிவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி இப்பிரிவு முற்று முழுதாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்கிற மாநிலமே 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. மேலும் அம்மாநிலத்தின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசியல் தலைவர்கள் சிறை அண்மையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஓராண்டு கால வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இன்னமும் மற்றொரு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இதனிடையே ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக இந்தியா டுடே டிவிக்கு பரூக் அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

370வது பிரிவு நீக்கத்தால் கோபம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியதை சீனா ஏற்கவில்லை. தற்போது லடாக் எல்லையில் சீனா ஊடுருவல் முயற்சிகள் உள்ளிட்டவைகளை மேற்கொள்வது அனைத்துமே 370-வது பிரிவு நீக்கப்பட்டதால்தான். என்னைப் பொறுத்தவரையில் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவு சீனாவின் ஆதரவுடன் அமலுக்கு வரும் என்கிற நம்பிக்கை உள்ளது 

மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் நான் ஒருபோதும் சீனாவின் அதிபரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்ததே இல்லை. பிரதமர் மோடிதான் சீனா அதிபரை அழைத்து அவருடன் படகு சவாரி செய்தார். 

சென்னைக்கு அழைத்துப் போய் விருந்து கொடுத்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது ஏற்புடையதே அல்ல என்பதுதான் எங்களது நிலைப்பாடு. நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இவ்வாறு பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: