வெள்ளி, 16 அக்டோபர், 2020

எஸ்ஆர்எம், எம்ஜிஎம்: கூடுதல் கட்டணம் - கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து!

minnambalam :உலகமே கொரோனா வைரசிலிருந்து மீண்டு வரப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் வசூலிக்கப்படுவது கடந்த மே மாதத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. கொரோனா பெயரைச் சொல்லி, பிபிஇ கிட், ஐசியு வார்டு, அட்மிஷன், மருந்து செலவு என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக ஒரு சில தனியார் மருத்துவமனைகள் கொள்ளை கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. எனவே அதிகளவு கட்டணத்தை வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு, கொரோனா நோயாளிகளில் லேசான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7500 மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் இதனை மீறி அதிகளவு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலித்து வந்தன. இதுகுறித்து மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்துக்குப் புகார்கள் சென்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை தரப்பில், நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து 27 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், பீ வெல் மருத்துவமனை- கீழ்பாக்கம், அப்பாசுவாமி மருத்துவமனை-அரும்பாக்கம், எஸ்ஆர்எம் மருத்துவமனை-திருச்சி, இந்து மிஷன் மருத்துவமனை -தாம்பரம், சிட்டி மருத்துவமனை-விருதுநகர், பிரியம் மருத்துவமனை- சேலம், ஸ்ரீ லட்சுமி மருத்துவமனை -கோவை, சிட்டி மருத்துவமனை- தூத்துக்குடி, ஸ்கடர் மெமோரியல் மருத்துவமனை-ராணிப்பேட்டை ஆகிய 9 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம், செட்டிநாடு மருத்துவமனை, டாக்டர் காமாட்சி மெமோரியல் மருத்துவமனை, டாக்டர் மேதாஸ், ஹைகேர் மருத்துவமனை, எம்எம்ஆர்வி, பிரசாந்த் மருத்துவமனை , வெங்கடேஸ்வரா, அப்பல்லோ- கிரிம்ஸ் சாலை, அப்பல்லோ - வானகரம், அப்பாசுவாமி அரும்பாக்கம், சென்னை தேசிய மருத்துவமனை, எம்ஜிஎம் மருத்துவமனை, கே.எம்.சி.ஹெச்- கோவை, ஜி.கே.என்.எம் - கோவை, விஜயா மருத்துவமனை -வடபழனி, ஸ்ரீனிவாஸ் பிரியா மருத்துவமனை- பெரம்பூர் ஆகிய மருத்துவமனைகள் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை நோயாளிகளிடம் திருப்பி ஒப்படைத்துள்ளன.

-கவி

கருத்துகள் இல்லை: