செவ்வாய், 13 அக்டோபர், 2020

BBC : குஷ்புவின் வருகை பா.ஜ.கவுக்கு உதவுமா? ஆய்வாளர்களின் பார்வை என்ன?

முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் : 8 மணி நேரங்களுக்கு முன்னர் திரைப்பட நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார். குஷ்புவின் இந்த முடிவு அவருக்கோ பாரதிய ஜனதா கட்சிக்கோ பலன் அளிக்குமா? 2007வாக்கில் தமிழ் இதழ் ஒன்றில் குஷ்புவின் பேட்டி ஒன்று வெளியானது. அந்த பேட்டி தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் விளக்கமளித்த குஷ்பு, தான் பேட்டியளித்ததை மறுக்கவோ, பின்வாங்கவோ செய்யாமல் தான் சொன்னதைத் தெளிவாகப் புரியவைக்க முயன்றார். அவரது கருத்துகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை உறுதியாகச் சந்தித்தார். திரைக்கலைஞரான குஷ்பு குறித்த பிம்பத்தை அந்த நிகழ்வு வெகுவாக மாற்றியது. தெளிவு, துணிச்சல், அரசியல் பார்வை ஆகியவை கொண்டவராக உருவெடுத்திருந்த குஷ்பு, 2010வாக்கில் தி.மு.கவில் இணைந்தார். அதற்குப் பிறகு காங்கிரஸ், இப்போது பா.ஜ.க என பத்தாண்டுகளுக்குள் 3வது கட்சிக்குத் தாவியிருக்கிறார் அவர்.

2021ல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சி அமைப்புகளை வலுப்படுத்தியிருப்பதோடு, புதிய நிர்வாகிகள் நியமனம், பல கட்சிகளிலிருந்தும் தொண்டர்கள், தலைவர்களைச் சேர்ப்பது என பரபரப்பாக இருக்கிறது மாநில தலைமை.

ஏற்கனவே தி.மு.கவிலிருந்து வி.பி. துரைசாமி, கு.க. செல்வம் ஆகியோர் பா.ஜ.கவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது காங்கிரசில் இருந்து குஷ்புவும் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

குஷ்பு

தங்கள் கட்சியை விட்டு விலகி, குஷ்பு பா.ஜ.கவில் இணைந்திருப்பதை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது போல காட்டிக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “குஷ்பு விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை. குஷ்பு கட்சியில் இருந்தபோதும் கொள்கைப் பிடிப்புடன் செயல்படவில்லை,” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பா.ஜ.கவில் அவர் சேர்ந்திருப்பது அக்கட்சி குறித்த நேர்மறையான பார்வையை உருவாக்க உதவும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான மாலன்.

“வாக்காளர்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமான ஒரு பார்வையின் அடிப்படையில்தான் வாக்களிக்கிறார்கள். அம்மாதிரி ஒரு பார்வையை உருவாக்க பிரபலமான முகங்கள் தேவை. அரசியல் கட்சிகளில் சினிமா நட்சத்திரங்கள் அந்த இடத்தைத்தான் நிரப்புகிறார்கள். சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்தவரை, மற்றவர்களை விட அவர்களுக்கு மக்களிடம் அதிக நெருக்கம் இருக்கிறது. அந்த நெருக்கமும் மரியாதையும் அறிவாளிகளுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ கிடையாது. ஆகவே குஷ்பு போன்ற ஒரு பிரபல நட்சத்திரம் பா.ஜ.கவில் இணைவது, அந்த கட்சிக்கு ஒரு பெரிய வரவுதான்” என்கிறார் மாலன்.


குஷ்பு பிரபல நட்சத்திரமாக இருப்பதால், பா.ஜ.கவால் இதுவரை அணுக முடியாத இடங்களை அணுக முடியும்.

“பா.ஜ.கவுக்கு ஒரு நகர்ப்புற கட்சி என்ற இமேஜ் இருக்கிறது. குஷ்புவால் கிராமப்புறங்களுக்குச் சென்று அந்த இமேஜை மாற்ற முடியும். மேலும் அவரால் பெண்களை எளிதில் அணுக முடியும். தவிர, இந்துத்துவா கட்சி என்ற பெயரை சமன்படுத்தவும் குஷ்புவின் வருகை உதவும்” என்கிறார் மாலன்.

ஆனால், ஊடக கவனத்தைத் தவிர பெரிதாக எந்த பலத்தையும் பா.ஜ.கவுக்கு இது அளிக்காது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

“தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு இன்னொரு முகம் கிடைத்திருக்கிறது. கு.க. செல்வம் வந்து சேர்ந்தார்; வி.பி. துரைசாமி வந்து சேர்ந்தார், அணண்ணாமலை வந்து சேர்ந்துவிட்டார், குஷ்புவும் வந்துவிட்டார் என்பது போன்ற ஒரு பேச்சை ஏற்படுத்த இந்த வருகை உதவும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி இதனால் மாறும் என நான் கருதவில்லை” என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தனிநபர் செல்வாக்குமிக்க தலைவர்கள் மிகக் குறைவு என்று சுட்டிக்காட்டும் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் செய்த காரியங்களால் பலனடைந்த மக்கள் அக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். ஆகவே, பெரிய தலைவர்கள் விலகிச் சென்றால்கூட, அக்கட்சியின் வாக்கு வங்கி சேதமடையாது. வாக்கு ரீதியாக பா.ஜ.கவுக்கு பெரிய பலனும் கிடைக்காது என்கிறார் அவர்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் செயல்படும் குஷ்புவுக்கு இது எந்த விதத்தில் உதவும்? “தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலில் தற்போது தமிழ்நாட்டில் இருந்து யாரும் இல்லை. அதனை மாற்றியமைக்கும்போது அதில் இவர் இடம்பெறலாம். தவிர, குஷ்பு பதவிக்காக சென்றிருப்பார் என தோன்றவில்லை. அப்படியிருந்தால் பா.ஜ.க. 2014ல் வெற்றிபெற்றபோதே அங்கு சென்றிருக்கலாம்” என்கிறார் மாலன்.

ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ பிரச்சனைகள் சார்ந்தே தனது அரசியல் முடிவுகளை குஷ்பு மேற்கொள்வதாகச் சொல்லும் ராதாகிருஷ்ணன், அவர் தி.மு.கவிலிருந்து விலகி, அதன் இயல்பான தோழமை கட்சியான காங்கிரஸில் சேர்ந்ததே தவறு என்கிறார். இப்போது பா.ஜ.கவில் என்ன காரணத்திற்காக இணைந்திருக்கிறார் என்பது 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே தெளிவாகிவிடும் என்கிறார்.

ராதாகிருஷ்ணன்
படக்குறிப்பு, பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்

“குஷ்பு காங்கிரஸில் இருந்தபோது தீவிரமாக செயல்பட்டவரில்லை. பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான செய்தித் தொடர்பாளர்கள் மிகவும் பரபரப்பாக, எப்போது பிஸியாக இருப்பார்கள். ஆனால், குஷ்பு மிகவும் தேர்வு செய்துதான் பேசுவார். கூட்டங்களுக்கு எப்போதாவதுதான் வருவார். 2016, 2019 தேர்தலில் இடம் கிடைக்காதபோதெல்லாம் அவர் பெரிதாக வருந்திய மாதிரி தெரியவில்லை. அரசியலில் உள்ள ஒருவருக்கு தேர்தலில் போட்டியிடுவதே பெரிய விஷயமில்லையென்றால் அவர் எதற்காக அரசியலில் இருந்தார் என்பதே புரியவில்லை. ஜோதிமணி போன்றவர்கள் மிகவும் கீழ்மட்டத்திலிருந்து மேலே வந்தவர்கள். உழைப்புதான் அதற்குக் காரணம். அப்படியிருக்கும்போது கட்சியை குறைசொல்வதில் பலனே இல்லை. அவர் எதற்கு காங்கிரசிற்கு வந்தார், எதற்கு சென்றார் எனத் தெரியவில்லை” என்கிறார் தமிழ்நாடு மஹிளா காங்கிரஸின் பொதுச் செயலாளர் லக்ஷ்மி.

ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வரும்போது கட்சி குறித்த இமேஜை மாற்ற அவர் உதவக்கூடும் என்று கருதுகிறார் மாலன்.

“பா.ஜ.கவைப் பொறுத்தவரை, அது ஒரு பிராமணர் கட்சி என்ற தோற்றம் உண்டு. அகில இந்திய அளவில் இந்தப் பார்வையை மாற்றும் நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டன. தமிழ்நாட்டில் தற்போதுதான் அது துவங்கியிருக்கிறது. வி.பி. துரைசாமி, குஷ்பு போன்றவர்களின் வருகை அதனை மாற்ற உதவும்” என்கிறார் மாலன்.

தமிழ்நாட்டில் இருந்து பிரபல தலைவர்கள் பா.ஜ.கவில் இணைவது புதிதல்ல. ஏற்கனவே காங்கிரசைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், தனிக்கட்சி நடத்திக் கொண்டிருந்த சு. திருநாவுக்கரசர் போன்றவர்கள் பா.ஜ.கவில் இணைந்து அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களது வருகையால் தமிழ்நாடு பா.ஜ.க. பெரும் வளர்ச்சியைக் கண்டதாகச் சொல்ல முடியாது.

குஷ்புவுக்கு முன்பே, திரைத்துறையைச் சேர்ந்த நமீதா, காயத்ரி ரகுராம், ராதாரவி போன்றவர்கள் பா.ஜ.கவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 2021இல் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திரைத்துறையினரின் பிரபலம், பா.ஜ.கவுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை பா.ஜ.கவினரிடம் இருக்கிறது

கருத்துகள் இல்லை: