வெள்ளி, 16 அக்டோபர், 2020

வெற்றிவேல் படத் திறப்பு: விம்மியழுத தினகரன்

 வெற்றிவேல் படத் திறப்பு:  விம்மியழுத தினகரன்

minnambalam : அமமுக பொருளாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து நேற்று (அக்டோபர் 15) காலமானார்.    60 வயதான வெற்றிவேல் அமமுகவுக்காக துடிப்புடன் செயல்பட்டவர். தினகரனுக்கும் பல நிர்வாகிகளுக்கும் பாலமாக இருந்த வெற்றிவேலின் மரணச் செய்தி அக்டோபர் 15 ஆம் தேதி மாலை தினகரனுக்கு மருத்துவமனையில் இருந்து தெரியப்படுத்தப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தார் தினகரன்.

வெற்றிவேலின் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில தினங்கள் முன்பு டிஸ்சார்ஜ் ஆனார். அவரைத் தொடர்புகொண்டு பேசிய தினகரன் ஆறுதல் கூறினார். மறுநாளான இன்று (அக்டோபர் 16) காலை 7.45 மணிக்கெல்லாம் அமமுக அலுவலகம் வந்துவிட்டார் தினகரன். தகவல் சொல்லிவிட்டு வந்தால் தொண்டர்களும், நிர்வாகிகளும் கூடிவிடுவார்கள் என்பதால் சி.ஆர். சரஸ்வதி, செந்தமிழன், கரிகாலன் உள்ளிட்ட சில நிர்வாகிகளை மட்டும் வரச் சொல்லியிருந்தார். அங்கே வெற்றிவேலின் படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

மாஸ்க் அணிந்தபடி வந்த தினகரன் வெற்றிவேலின் படத்தைத் திறந்து வைத்தபோது தன்னையும் மீறி விம்மியழுதுவிட்டார். முகக் கவசத்துக்குள் இருந்து அவர் கதறிய சத்தம் அங்கிருந்த நிர்வாகிகளை உருக்கியது.

வெற்றிவேலின் வீட்டுக்குச் செல்லலாமென்று தினகரன் திட்டமிட்ட நிலையில் மருத்துவர்கள் வேண்டாமென்று தடுத்துவிட்டனர்.

இன்று காலை வெற்றிவேல் மறைவை ஒட்டி தினகரன் வெளியிட்ட செய்தியில், "துணிச்சலின் இருப்பிடமாகவும்,தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த கழகத்தின் பொருளாளரும்,என் அருமை நண்பருமான வெற்றிவேல் நம்மை கலங்கவைத்து,சென்றுவிட்ட பெருந்துயரத்தோடு இந்த மடலை எழுதுகிறேன். நண்பர் வெற்றி இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என்மனம் நம்ப மறுக்கிறது

அம்மா அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஏதுவாக 2015ல் தமது MLA பதவியைத் துறந்தார். அம்மா அவர்கள் வாகை சூடுவதற்கு உழைத்த தொண்டர் படையின் தளகர்த்தராக நின்று எந்த மனத்தயக்கமும் இல்லாமல் வெற்றி பணியாற்றினார்.அதுதான் வெற்றிவேல் எனும் விசுவாசத்தின் போற்றுதலுக்குரிய குணம்.தமிழக வரலாறு பார்த்திராத அளவுக்கு அதிகாரத்தின் அத்தனை முனைகளின் வழியாகவும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை எல்லாம் தாண்டி 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் பெற்ற அசாத்தியமான வெற்றிக்கு முழுமுதற்காரணமே என் அருமை நண்பர் வெற்றிதான்! .

எதிரிகளும் துரோகிகளும் ஏற்படுத்துகிற தடைகளை உடைத்து தூள்,தூளாக்கி வெற்றி பெறும் சக்தியை வெற்றி போன்றவர்கள் நமக்குத்தந்திருக்கிறார்கள்.அந்த உணர்வு மாறாமல்,லட்சியப்பாதையில் இன்னும் பிடிப்போடும்,வேகத்தோடும் செயல்பட்டு வெற்றி பெறுவதே வெற்றிவேலுக்கு செலுத்துகிற உண்மையான அஞ்சலி

எதற்கும் அஞ்சாத லட்சோபலட்சம் வெற்றிவேல்கள் கட்டி எழுப்பிய பேரியக்கமிது.வெற்றிவேல் போன்ற தன்னலமில்லாத தளபதிகளால் போற்றி பாதுகாக்கப்படுகிற இயக்கமிது.அதனால் நாம் நிச்சயம் வெற்றிக்கோட்டையை எட்டிப்பிடிப்போம்!நம்முடைய வெற்றிவேல் போன்றோரின் தியாகமும் உழைப்பும் ஒரு நாளும் வீண்போகாது" என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார் தினகரன்.

காலை 10 மணியளவில் வெற்றிவேலின் உடல் அவரது அயனாவரம் செகரட்டரியேட் காலனி வீட்டில் கொஞ்ச நேரமே வைக்கப்பட்டு ஒட்டேரி மயானத்துக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்பதால் இறுதி ஊர்வலம் உள்ளிட்ட விஷயங்களை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சோடு தொடர்புகொண்டு செந்தமிழன் பார்த்துக் கொண்டார். இன்னொரு மாவட்டச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றை கவனித்துக் கொண்டார். பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வெற்றிவேலின் வீட்டில் கூடிவிட்டார்கள்.

அவர்களையெல்லாம் தாண்டி மாடியில் இருந்து வெற்றிவேலின் உடலைப் பார்த்து கதறியழுத அவர் மனைவியின் குரல் அந்த பகுதியையே கரைத்தது.

’காஞ்சிபுரம், திருவள்ளூர்னு சென்னை, சென்னையை சுத்தியிருக்கிற சுவர்கள்ல அமமுக விளம்பரங்கள் அதிகமா இருக்குன்னா அதுக்கு காரணம் வெற்றிவேல்தான். அவரை மீறி யாரும் எழுத மாட்டாங்க. அமமுகவோட நெடுஞ்சுவர் இன்னிக்கு சாய்ஞ்சுடுச்சு” என்று வெற்றிவேலை நினைவுகூர்ந்து நடந்தனர் நிர்வாகிகள்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: