புதன், 14 அக்டோபர், 2020

தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் விழாவில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை

அறிஞர் அண்ணா :வீரத் தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் - தமிழர் சமுதாயச் சீர்கேடு - (தமிழ்நாடு - பெயர் வைத்தல்). "தம்பி "நடு நிசி. தூக்கம் வரவில்லை, துக்கம் துளைக்கிறது ...பலகோடி மாந்தரில் ஒருவருக்கு மட்டுமே கிட்டக் கூடியது அந்த வீரத் தியாக உள்ளம் என்று

தொடங்கி அண்ணா ஒரு இரங்கல் உரை எழுதுகிறார். யாருக்காக?? காங்கிரசு இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்குப் பெயர் சுட்ட வேண்டும் என்று கோரி உண்ணாதிருந்து உயிர்துறந்த சங்கரலிங்கனாரைப் பற்றித்தான் அண்ணா இப்படி எழுதினார். சங்கரலிங்கனாரின் போராட்டம் இறுதிக்கட்டத்தை அடையும் நிலையில் விருது நகரில் அவர் வசித்த ஓலைக்குடிசைக்குச் சென்று காங்கிரஸ் கொடி பறந்த அந்த குடிசையில் இரண்டு மாதங்களாக உணவு உட்கொள்ள மறுத்து உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் நிலையில் அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை சந்தித்த காட்சி அவரை எப்படி அலைக்கழித்தது என்பதை படிப்பவர்களின் மனமே பதறும் படியாக அண்ணா பதிவு செய்கிறார்.“அந்த தியாகியை, விருதுநகர் மாரியம்மன் கோயில் திடலில் ஒரு சிறு ஓலை கொத்து குடில் அமைத்த ஒரு கயிற்று கட்டிலின் மீது அவர் படுத்துக்கொண்டிருக்கக் கண்டேன். அந்தக் குடிலின் மீது காங்கிரஸ் கொடி பறந்து கொண்டிருந்தது. ...நடு நிசி. அங்கு நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர். ...... கயிற்றுக்கட்டிலின் மீது சுருண்டு படுத்திருந்த உருவம் தெரிந்தது…
"ஐயா! அண்ணாதுரை ..." என்றார் அந்த நண்பர், ஒரு வினாடி அவர் என்னைப் பார்த்தார்- அந்தப் பார்வையின் முழுப் பொருளை “பாவி” நான், அன்று சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை! செத்துக் கொண்டு இருக்கிறேனடா, செயலறியாதவனே! என்பதல்லவா அந்தப் பார்வையின், பொருள்.
ஐயா! அண்ணாதுரை, என்று அந்த நண்பர் சொன்னதும் என் இரு கரங்களையும் பற்றிக் கொண்டார். அவருடைய முகத்தருகே என் கரங்கள் - கண்ணீர் கரத்தில் தட்டுப்பட்டது, என் கண்கள் இருண்டு விடுவது போன்றதோர் நிலை ஏற்பட்டது. தலை மாட்டிலே நான் உட்கார அவர் சிறிது நகர்ந்தார். அவருடைய போர்வை கலைந்தது. எலும்புக்கூடாகத் தெரிந்தார்.……. உண்ணாவிரதம் மேற்கொண்டு அறுபது நாட்களுக்கு மேலாகி விட்டன. பச்சைத் தமிழர் தான் பரிபாலனம் செய்கிறார், பாதி உயிர் போய்விட்டது என்று கூறாமற் கூறிக்கொண்டு குமுறிக் கிடக்கிறார், காங்கிரசு ஆட்சியைக் காண வேண்டும் என்பதற்காக, கடமை உணர்ச்சியுடன் தொண்டாற்றித் தொண்டு கிழமான அந்தத் தூயவர்.
"ஐயா! இன்றைய ஆட்சி கருணைக்குக் கட்டுப்படுவதாகக் காணோமே. ஆட்சியை நடத்தும் கட்சி, இது பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே. எத்துணை பயங்கரமான பலி கொடுத்தாலும், திருந்தும் என்று தோன்றவில்லையே. இந்த ஆட்சியிலே, உண்ணாவிரதம் இத்துணை உறுதியுடன் இருக்கிறீரே ..பலன் இராதே.
தம்பி! அவர் சொன்ன பதில், என்னைத் திடுக்கிட வைத்தது அப்போது; இப்போது கண்களைக் கலங்கச் செய்கிறது; ‘இல்லை - நான் செத்துவிடுகிறேன். பிறகாவது பாப்போம்’ .. என்று அவர் சொன்னார்.
நான் கண்டேனா, நாடாள வந்தவர்கள், மனதை இரும்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை, காமராஜர், அது போலவே மலைக்குலைந்தாலும் மனம் குலையாத தமிழன்னல்லவா! அதனால், பிணமானதாலும் பரவாயில்லை, கோரிக்கைகளுக்கு இணங்குவதாகக் கூற மாட்டேன், கூறினால் 'கௌரவம்' என்ன ஆவது, என்று கருதுபவர் போலத் தம் போக்கால் காட்டிக் கொண்டார் ; சங்கரலிங்கனார், எழுபது நாட்களுக்கு மேல் உண்ணாவிரதமிருந்து, மூர்ச்சையாகிவிட்ட பிறகு, மதுரை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறைந்து போனார்.
ஒரே நோக்கத்திற்காகப் போராடி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த ஒரு போராளியை காப்பாற்ற முடியாமல் போன குற்ற உணர்ச்சி அண்ணாவின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகிறது.
​​தியாகி சங்கரலிங்கனாரின் கொடுமையான மரணத்திற்குப் பின்னால் பேசப்படாத ஒரு வரலாறு இருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்து ஆண்டவர் பச்சைத் தமிழர் காமராசர். நம் தாய் நாட்டிற்கு “தமிழ் நாடு” என்று பெயர் சூட்டக்கோரி 2 மாதங்களுக்கு மேல் உண்ணாமல் போராடிய சங்கரலிங்கனார், காங்கிரசு இயக்கத்தை சேர்ந்த தேசியவாதியாவர். ஆனால் அவரது போராட்டத்தை காங்கிரசு இயக்கமும் அப்போது முதல்வராக இருந்த காமராசரும் கண்டு கொள்ளவே இல்லை.
நிராகரிக்கப்பட்ட கோரிக்கையுடன் கைவிடப்பட்ட தியாகி சங்கரலிங்கனாரின் உயிர் துடித்து அடங்கிய பிறகு காமராசர் அவர்கள் சங்கரலிங்கனாரின் மறைவு குறித்து கொடுத்த விளக்கம் மிகக் கொடுமையானது என்று அந்த விளக்கத்தைப் பற்றி அண்ணா அவர்கள் மனம் குமுறி எழுதுகிறார்.
"அவர் கோரிக்கை மொத்தம் 12, அதிலே 10, மத்திய சர்க்காரைப் பொறுத்தது. இரண்டே இரண்டு தான் மாகாண சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று திருப்பூரில் முதலமைச்சர் என்ற முறையில் காமராஜர், விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் பேசினார், காங்கிரஸ்காரர் பேச வில்லை! மந்திரிப் பதவி பேசிற்று. மனிதாபிமானம் பேச வில்லை!. விளக்கம் தரப்பட்டது. இதயம் திறக்கப் படவில்லை. கேட்டது 12 அதில் 10 மத்திய சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று சட்ட நுணுக்கம் காட்டும் முதலமைச்சர் செய்தது என்ன? சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை டெல்லிக்கு அறிவித்தாரா? அறிவித்து ஆவன செய்வதாக, அந்தப் பெரியவருக்குத் தெரிவித்தாரா? தெரிவித்துவிட்டு, என்னால் ஆனதைச் செய்வேன் என்று வாக்களித்தாரா? இல்லை ! இல்லை ! இப்போது விளக்கம் அளிக்கிறார்”.
​​அண்ணாஅவர்கள் இந்தவரலாற்றைப் பதிவு செய்யாமல் விட்டிருந்தால், இன்றைய தலைமுறைக்கு பல உண்மைகள் தெரியாமலே போயிருக்கும்.
அத்துடன்“தியாகி
சங்கரலிங்கனாரின் வீரத் தியாகம் வென்றே தீரும்” என்று அண்ணா உரைத்த சூளுரை கட்சிகளைத் தாண்டி தமிழ் இனமொழி உரிமைப் போராளிகளின் மீது அண்ணா கொண்டிருந்த பேரன்பைக் காட்டியது.
அதனால் அண்ணா அவர்கள் முதல்வரான பின்பு 14.1.1969 அன்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் இனி , நம் தாய்நாடு ‘தமிழ்நாடு’ என்று அழைக்கப்படும் என பெயர் மாற்றத்தீர்மானத்தை நிறைவேற்றியபோது தியாகி சங்கரலிங்கனார் அவர்களை உருக்கத்துடன் நினைவு கூர்ந்தார்.
( அண்ணா அவர்களின் இரங்கல் கட்டுரை தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் அய்யா இளவழகனார் அவர்கள் வெளியிட்ட அண்ணா அறிவுக்கொடையின் “ இரங்கல் இலக்கியம்” தொகுதியில் உள்ளது.)
படம் தோழர் நாகரகோயில் தமிழரசன் அவர்கள் பகிர்ந்தது)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

https://youtu.be/RmgSUC75VNY