புதன், 14 அக்டோபர், 2020

கன்னியாகுமரி தொகுதிக்கு தேர்தல் எப்போது?. பிப்ரவரி மாதத்திற்குள்..

minnambalm : கன்னியாகுமரி தேர்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தொழிலதிபருமான ஹெச்.வசந்தகுமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், கன்னியாகுமரி இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 14) செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு, “விதிப்படி ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதிக்கு பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வி.வி.பேட் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தல் பற்றி பேசிய சாஹு, “தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரை கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பீகார் தேர்தலில் கடைபிடிக்கப்படும் பல நடைமுறைகளை தமிழகத்திலும் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

தற்போது தமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 3 சதவிகிதம் பேர்தான் இருக்கிறார்கள் எனவும், சட்டமன்றத் தேர்தல் வரை பாதிப்பு தொடர்ந்தால், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

எழில்

கருத்துகள் இல்லை: