வியாழன், 15 அக்டோபர், 2020

ல்.கே.ஜி-யிலும் தலையிடும் மத்திய அரசு: உங்கள் குழந்தையின் கல்வி என்னாகும்?

 எல்.கே.ஜி-யிலும் தலையிடும் மத்திய அரசு:  உங்கள் குழந்தையின் கல்வி என்னாகும்?

minnambalam : புதிய கல்விக் கொள்கை பற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் இன்னும் முடிவுறாத நிலையில், அதன் அடிப்படையில் மூன்று வயது முதல் எட்டு வயது வரையிலான மழலைக் கல்வி முறையிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை முடிவெடுத்து ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதைத் தெரிவித்துள்ளார். 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளிடையே அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக ஜவடேகர் கூறினார். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பள்ளி கல்வியில் சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்கும், தேசிய அளவில் தரவு மற்றும் மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போதைய கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்டிருக்கும் பள்ளி மூடுதல், கற்றல் இழப்பை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகள் கல்வியில் சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் அங்கமாகவே இது கருதப்படுகிறது.

இந்த திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக PARAKH (செயல்திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவின் பகுப்பாய்வு) ஒரு தேசிய மதிப்பீட்டு மையமாக நிறுவப்படுகிறது. இந்த தன்னாட்சி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வாரியங்களுக்கும் மாணவர் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டிற்கான விதிமுறைகளை அமைக்கும். அவற்றில் பெரும்பாலானவை தற்போது மாநில அரசுகள் வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. மாநில மற்றும் தேசிய மட்டங்களில் கற்றல் விளைவுகளை கண்காணிக்க தரப்படுத்தப்பட்ட சோதனைக்கு இது வழிகாட்டும்.

மழலைக் குழந்தைகளின் கல்வியில் இப்படி தர சோதனைகளை நிறுவுவதை கல்வியாளர்கள் கவலையோடு எதிர்க்கின்றார்கள்.

3 முதல் 8 வயதுக்குள் தரப்படுத்தப்பட்ட சோதனைக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் கற்பிப்பதில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: