வெள்ளி, 16 அக்டோபர், 2020

முருங்கையில் சாதிக்கும் மதுரை நிறுவனம்! 18 நாடுகளுக்கு 32 பொருள்கள் ஏற்றுமதி..!

vikatan - செ.சல்மான் பாரிஸ் - என்.ஜி.மணிகண்டன் : உணவுப்பொருள்களின் பேக்கிங் “உடலுக்கு நலம் தரும் முருங்கை ஆயில், சருமத்தைப் பாதுகாக்கும் பொருள்களும் தயாரிக்கிறோம்.” பிரீமியம் ஸ்டோரி முருங்கை மூலம் 32 வகையான உணவுப் பொருள்களை இயற்கையான முறையில் தயாரித்து உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது மதுரையிலிருந்து செயல்படும் ‘‘மிராகிள் ட்ரீ’ என்ற நிறுவனம். முருங்கைக் கீரை, முருங்கைக் காய், விதைகளை நேரடியாகச் சமையலில் சேர்த்துக்கொள்ளாதவர்கள், சாப்பிட மறுக்கும் குழந்தைகள் ஆகியோர் அதை வேறு வகையில் பயன்படுத்தும் வகையில் முருங்கையிலிருந்து 32 பொருள்களைத் தயாரித்து சந்தைப்படுத்திவரும் ‘மிராகிள் ட்ரீ’ சி.இ.ஓ சரவணக்குமரனுடன் பேசினோம். “1992-ல் இன்ஜினீயரிங் டிப்ளமோ படித்துமுடித்தவுடன் சண்டிகாரிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் மதுரையை விட்டுக் கிளம்பினேன். அதன்பின் நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் பணியாற்றிவிட்டு, 2001-ல் மதுரை திரும்பினேன். வேலை செய்த இடங்களில் கிடைத்த அனுபவம் சொந்த ஊரில் சொந்தத் தொழில் செய்ய காரணமாக அமைந்தது. என்னதான் இன்ஜினீயரிங் படித்திருந்தாலும் காலம் காலமாக முன்னோர் செய்து வந்த விவசாயத்தை லாபகரமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. முதுகலை பட்டம் பெற்ற என் மனைவிக்கும் விவசாயத்தில் நல்ல ஈடுபாடு இருந்தது. விவசாயத்தில் இறங்கலாம் என முடிவு செய்தபோது, மதுரை மாவட்டத்தில் விவசாயம் செய்து பெரிய லாபம் சம்பாதிக்க முடியாது என்று சிலர் சொன்னபோது கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் தொடர்பு ஏற்பட்டது.

“முருங்கை ஒரு முக்கியமான உணவுப்பொருள்; உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது. அதை இயற்கை முறையில் வளர்க்கலாமே!’’ என்று அவர் யோசனை சொன்னார்.


சரவணக்குமார்

எங்களுக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. நம்மூரில் முருங்கை மரம் எல்லா வீடுகளிலும் இருந்தாலும், இக்காலத் தலைமுறையினர், குழந்தைகள் அதை விரும்பி உண்ணுவதில்லை. உடல்நலனுக்குத் தேவையில்லாத உணவுகளை அதிக விலை கொடுத்து சாப்பிடுகிறவர்கள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் முருங்கைக் கீரை, முருங்கைக் காய்களை எப்போதாவதுதான் சாப்பிடுகிறார்கள். இதை மாற்றி, அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் தர வேண்டும் என்று நினைத்து, இதில் ஆர்வமாக இருந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் முருகேசன், வாசன் ஹோட்டல் ரகு, சுஜாதா ஆகியோர் இணைந்து 2014-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம்.

எடுத்தவுடன் முருங்கைத் தொழிலை ஆரம்பித்துவிடவில்லை. முருங்கை பற்றி ஸ்டெடி பண்ணினோம். முருங்கை பற்றி ஆழமான ஆய்வு மேற்கொண்டோம். மனித உடல் முழுமையாகச் செயல்பட முருங்கை முக்கியமானது என்பதை நூற்றுக்கும் மேற்பட்ட லேப் சோதனைகளில் தெரிந்துகொண்டோம். அனைத்து வகையான விட்டமினும், 18 வகை அமினோ ஆசிட்டும், மூளையை இயங்கச் செய்யும் ஜியாட்டின் கார்போனைட்டும் (zeatin carbonite) முருங்கையில் உள்ளது.

எங்களுக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில் முருங்கையை வளர்த்தோம். முருங்கைக் கீரையை அதன் சத்துகள் போய்விடாத வகையில் காயவைத்து பவுடராக்கி அதில் எந்தவொரு வேதிப்பொருளும் கலக்காமல் பேக்கிங் செய்து கீரை பவுடரை முதலில் சந்தைப்படுத்தினோம். 14 கிலோ கீரையை ட்ரை பண்ணி பிராசஸ் பண்ணினால் ஒரு கிலோ பவுடர் கிடைக்கும். கீரை சாப்பிட முடியாத அதே நேரம் அதன் சத்துகள் வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பவுடரை ஒரு ஸ்பூன் எடுத்து சூப்பாகவோ, ரசம் அல்லது சாப்பிடும் டிபனில் கலந்து சாப்பிடலாம். இந்த பவுடரை ஏற்கெனவே ஃபீல்டில் இருக்கும் பெரிய நிறுவனங்களில் கொடுத்து சந்தைப்படுத்தினால் பெரிய அளவுக்குக் கொண்டு செல்ல முடியும் என்றாலும், அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் நாங்களாவே நேரடியாக மார்க்கெட்டிங் செய்தோம். பெரிய பொருள்காட்சிகளில் கலந்துகொண்டு மக்களிடம் விளக்கிச் சொன்னோம். அது ஓரளவு சக்சஸ் ஆனது.

முருங்கை தேவைக்காக எங்களைப்போல இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ள டாக்டர் காமராஜின் 70 ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்யத் தொடங்கினோம். எங்கள் சொந்த விவசாயத்துடன் தேவை ஏற்படும்போது வெளியில் கொள்முதல் செய்கிறோம்.

அடுத்ததாக முருங்கைக் காயின் சதையை தனியாக எடுத்து பவுடராகத் தயாரித்தோம். மக்களிடம் கிரீன் டீ பழக்கம் அதிகரித்துவரும் நிலையில் முருங்கை பவுடர் கலந்த டீயை அறிமுகப்படுத்தினோம்.

18 நாடுகளுக்கு 32 பொருள்கள் ஏற்றுமதி..! - முருங்கையில் சாதிக்கும் மதுரை நிறுவனம்!

இப்படி முருங்கையிலிருந்து ஒவ்வொரு பொருளாகத் தயாரிக்க ஆரம்பித்த நிலையில்தான் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு வந்தது. எங்கள் முருங்கை பவுடரை திருச்செந்தூர் ஹோட்டலில் பார்த்த மலேசியக்காரர் ஒருவர், அதைச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு எங்களைத் தேடி வந்தார். அவர் கொடுத்த ஆர்டரின் பேரில் முதலில் மலேசியாவுக்கு அனுப்ப ஆரம்பித்தோம். தற்போது கனடா உட்பட 18 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். சில நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட பொருள்களைத் தயாரித்துக் கொடுக்கிறோம்.

முருங்கையின் பயன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்த நாங்கள், அவர்கள் விரும்பும் வகையில் சாக்லேட்டைத் தயாரித்தோம். இந்த சாக்லேட்டில் நாட்டுச் சர்க்கரை, பாதாம் தவிர, வேறு எந்த வேதிப் பொருளும் சேர்க்கவில்லை. இந்த சாக்லேட் தற்போது இரண்டு விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.

ஏற்றுமதி செய்யும் உணவுப்பொருள்களின் பேக்கிங் நன்றாக இருக்க வேண்டும். அதே நேரம் அது சூழலைக் கெடுக்காத வகையிலும் இருக்க வேண்டும் என்பதால், 65 மைக்ரேன் உள்ள கவரில்தான் பேக்கிங் செய்கிறோம்.

உணவுப்பொருள் மட்டுமல்ல, முருங்கை மாத்திரைகளும் தயாரிக்கிறோம். உடலுக்கு நலன் தரும் முருங்கை ஆயில், சருமத்தைப் பாதுகாக்கும் பொருள்களும் தயாரிக்கிறோம்.

அடுத்து இதை விரிவுபடுத்தி குழந்தை களுக்கான கீரையுடன் சத்துப் பொருள்களைச் சேர்த்து ஆர்கானிக் ஊட்டச்சத்து தயாரித்து வருகிறோம். இணையம் மூலமும் பொருள்களை விற்பனை செய்கிறோம். இந்தப் பொருள்களை எல்லாம் தயாரிக்க இரண்டு இடங்களில் எங்கள் தொழிற்கூடம் உள்ளது. ஆண்டுக்கு ரூ.2 - 2.5 கோடிக்கு டேர்ன் ஓவர் செய்கிறோம். இதை இன்னும் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும். முருங்கையின் பலனை உலக மக்களுக்குத் தர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்’’ என்று முடித்தார் சரவணக்குமார்.

வித்தியாசமான பிசினஸ்தான்!

விகடன் 

கருத்துகள் இல்லை: