சனி, 17 அக்டோபர், 2020

பாஜகவின் ‘பி டீம்’ பாஸ்வான் மகன்?

minnambalam : மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் அண்மையில் காலமான நிலையில்... பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் குழப்பம் ஏற்படுத்த முயல்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாஜகவின்  ‘பி டீம்’  பாஸ்வான் மகன்?

அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டு கட்டமாக பிகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில்.. பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறார்.

இதற்கிடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி கட்சி சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மோடி ஆதரவு நிதிஷ்குமார் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி தாங்கள் தேசிய அளவில் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும் ஆனால் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். .

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் ராம்விலாஸ் பாஸ்வான் மகனுமான சிராக் பாஸ்வான் அளித்த பேட்டியில்.. "என்னையும் பாஜகவையும் பிரிக்க முடியாது. எனக்கு முழு முதல் குரு பிரதமர் மோடி தான். பிகாரில் சில தொகுதிகளில் பாஜகவும் லோக் ஜனசக்தியும் எதிர்த்துப் போட்டியிடுகின்றன. இது ஒரு நட்பு ரீதியான போட்டி. நாங்கள் பிகார் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையிலான லோக் ஜனசக்தி பங்குபெறும் ஆட்சி அமைவதை விரும்புகிறோம். நாங்கள் வெற்றி பெற்றால் பாஜகவை ஆதரிப்போம். பாஜக வெற்றி பெற்றால் எங்களை ஆதரிக்கும். நித்திஷ்குமார் பாஜக உள்ளிட்ட யாரையும் நம்ப மாட்டார்” என்று பேட்டி அளித்துள்ளார்.

இதற்கு உடனடியாக பதில் கொடுத்துள்ள பாஜக சிராக் பாஸ்வான் பீகார் மக்களை குழப்புவதாக குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்துள்ள பேட்டியில்... "சிராக் பாஸ்வான் பிகார் மக்களை குழப்பி அதில் தனது கட்சியை வெற்றிபெற வைக்க நினைக்கிறார். குறுக்கு வழியில் அவரால் கனி பறிக்க இயலாது. எங்களுக்கும் நிதீஷ் குமாருக்கும் இடையில் எந்த குழப்பமும் இல்லை. பாஜகவுக்கு பீகாரில் பி டீம் அல்லது சிடி என எதுவும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

பாஸ்வானின் மகன் தன் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக சூசகமாக சொல்லிவரும் நிலையில், நித்திஷ்குமாருக்கும் பாஜகவுக்கும் இடையேயான கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: