வெள்ளி, 16 அக்டோபர், 2020

7.5% உள் ஒதுக்கீடு: கிராமப்புற மாணவர்களை எண்ணி கண்கலங்கிய நீதிபதி!

7.5% உள் ஒதுக்கீடு: கிராமப்புற மாணவர்களை எண்ணி  கண்கலங்கிய நீதிபதி!
Add caption
  minnambalam : அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித  உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்  கிளை நீதிபதி  கிருபாகரன், கிராமப்புற மாணவர்களின் நிலையை எண்ணி கண் கலங்கியுள்ளார்.  நடப்பு கல்வியாண்டு இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, செப்டம்பர் 13ஆம் தேதி  நடைபெற்ற நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று (அக்டோபர் 16) மாலை வெளியாகவுள்ளது. இதனிடையே தமிழகச் சட்டமன்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து அமலுக்கு வரும் வரை நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி  அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த போது தமிழக  அரசு சார்பில், நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவிகிதத்திலிருந்து 0.1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.  கடந்த 2 ஆண்டுகளில், 11 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழக அரசின் அவசர சட்டம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால் முடிவெடுக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதமாகியும் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் முடிவெடுக்க வேண்டும். 2 வார கால அவகாசம் வழங்கமுடியாது. உள் ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவை எடுக்கத் தாமதம் செய்வதை ஏற்க முடியாது. வழக்கில் ஆளுநரின் தனி செயலாளரிடம் விளக்கம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கைச் செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,  “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்கவோ, உத்தரவிடவோ முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு பதிலை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், உணவில்லாத சமூக ரீதியாக பின்தங்கிய ஏழை மாணவர்களே பெரும்பாலும் அரசு பள்ளியில் பயில்கின்றனர். இம்மசோதா தொடர்பாக முடிவெடுக்க ஒரு மாத காலம் போதாதா? தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் முடிவெடுத்து என்ன பயன்? உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம் பெறுவது அதிகரிக்கும் என்று குறிப்பிட்டனர்.

அப்போது, கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும் வேதனைகளும் அளவிட முடியாதது என கூறிய நீதிபதி கிருபாகரன் கண்கலங்கியுள்ளார்.

இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை பற்றிய விபரத்தை அரசு எப்போது வெளியிடும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக அரசிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

இன்று மாலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், கிராமப்புற மாணவர்கள் 7.5 உள் ஒதுக்கீடு குறித்து மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால்  அரசின் பதிலால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 சதவிகித  இட ஒதுக்கீட்டை  2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை: