சனி, 17 அக்டோபர், 2020

வெகுஜன அரசியல் சிந்தனைசார்புகளில் ஒன்று பூமராங் விளைவு!

Karthikeyan Fastura : வெகுஜன மார்க்கெட்டிங் உளவியல் பற்றி ஒரு

குறும்புத்தகம் எழுதி வருகிறேன். அதில் மனதின் சிந்தனைசார்புகள் குறித்து இரண்டு அத்தியாயங்கள் எழுதியிருப்பேன். எண்ணிலடங்கா சிந்தனை சார்புகள் குறித்த உளவியல் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. 

அதில் வெகுஜன அரசியல் சிந்தனைசார்புகளில் ஒன்று பூமராங் விளைவு. எதிரிகளின் மீது வீசுவதாக எண்ணி கருத்தியல் தாக்குதலை வன்மமான மொழியாடலில் செய்யும்போது அது எதிரியை தாக்குவதற்கு பதில் தாக்குதல் தொடுத்த அணியினரை நோக்கி திரும்பி வந்து தாக்கும்.   இது எதிரி ஏற்படுத்தும் சேதாரத்தை விட மிக அதிகமாக இருக்கும்.     மக்களை எளிதாக மடைமாற்றும். இதை ஏற்படுத்த எதிரியின் கூடாரத்திற்கு சிலரை அனுப்பி அவர்கள் தரப்பில் இருந்து பேசுவது போல பேசி சாதாரண கருத்தாடலை அநாகரிகமான மொழிக்கு எடுத்துச்சென்று அல்லது கைவிட்ட பிரச்சனையை இழுத்து வைத்து பேசி பெருத்த சேதாரத்தை கொண்டுவருவார்கள். 

செம்ம ஸ்ட்ராடெஜி. சில சமயம் எதிரிகள் இதை திட்டமிட்டு செய்யாவிட்டாலும், இயக்கத்திற்குள் ஒரு சிலர் செய்யும் ஒரு காரியம் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் அவப்பெயரை கொண்டுவந்து சேர்க்கும். தலைமை இதை உணர்ந்து கட்டுபடுத்தவேண்டும். அல்லது விலக்கி வைக்கவேண்டும். பெயர் கெட்ட பிறகு என்ன செய்தாலும் மக்கள் மனதில் விழுந்த பிம்பம் அவ்வளவு எளிதில் போகாது. 

இந்த இயக்கத்தவர் இப்படி பேசமாட்டார்கள். அப்படி பேசினால் அவர்கள் இயக்கத்தவர்களாக இருக்க முடியாது என்ற பிம்பத்தை கட்டி எழுப்பவேண்டியது தலைமையின் பொறுப்பு. இதை செய்யாமல் மக்களின் செல்வாக்கை பெற போராடுவது ஓட்டைபானையில் தண்ணீர் நிரப்புவது போலத்தான். எல்லா கட்சியிலும் இப்படி சிலர் இருக்கவே செய்கிறார்கள். 

ஆனால் அவர்கள் போரில் வெற்றி பெற்றபிறகு செய்வார்கள். அல்லது வெற்றி/தோல்வி பற்றி அக்கறையில்லாத சிறியகட்சிகளில் நடக்கலாம். போரில் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு கட்சியில் திரும்ப திரும்ப நடைபெறுவது எங்கே பிரச்சனை என்று யோசிக்கவைக்கிறது

கருத்துகள் இல்லை: