சனி, 17 அக்டோபர், 2020

கொரானாவே இல்லாதவர்கள் கூட அலப்பறையிலும் ஆஸ்பிட்டல் சூழல்களிலும் மரணித்து போவதும் நடக்கிறது!சாவித்திரி கண்ணன்

சாவித்திரி கண்ணன் : · கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…! முதலில் நம்ப மறுத்தேன்! ஆனால், மீண்டும்,மீண்டும் நாலா பக்கங்களிலுமிருந்து இந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன! ஆள் தூக்கும் அரசியல் மாபாதகங்கள், சதிச் செயல்கள்…போன்றவற்றை பயங்கரவாத இயக்கங்கள் அல்லது பாசிஸ அரசுகள் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்! ஆனால்,ஜனநாயகத்திற்கு பேர் போன இந்தியா போன்ற அதுவும் அமைதி பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழ் நாட்டிலா?
கொரோனாவைக் காரணம் காட்டி வீடுவீடாக வந்து அதட்டி,உருட்டி டெஸ்டுக்கு வா என்று நிர்பந்தித்து அழைத்துச் செல்லும் செய்திகளை முதலில் வடசென்னையில் பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் கூறினார்! இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இது போன்ற செய்திகள் கடந்த ஒரு மாதமாக வந்தவண்ணம் உள்ளன!
முதலில் தனியார் மருத்துவமனைகள் தான் டெஸ்ட்டுக்கு யாராவது வந்தாலே போதும் அவர்களுக்கு பாசிட்டிவ் என்று படுக்க வைத்து ’லம்ப்’பாக பணம் பார்த்தார்கள்! இதையடுத்து தான் அரசு மருத்துவமனைகளுக்காக ஆள்பிடிக்கும் அதிகேவலமான, அநீதியான அராஜகங்கள் நடந்து கொண்டுள்ளன!
கொரானாவே இல்லாதவர்கள் கூட இவர்கள் செய்யும் அலப்பறையிலும் ஆஸ்பிட்டல் சூழல்களிலும் மரணித்து போவதும் நடக்கிறது! அப்படி மரணித்தவர்களை வீட்டார் பார்க்கவும் வழியின்றி புதைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை!
முந்தாநாள் தேனீ சென்று வந்த பத்திரிகையாளர் ராஜபாண்டியன் அங்கும் இந்த கொரானாவுக்கு ஆள்தூக்கும் அராஜகத்தை கண் கூடாகக் கண்டதாகக் கூறினார்! ’’உங்களுக்கு பாசிடிவ்’’ என்று சொன்னால் சொன்னது தான்! ரிசல்ட் கூட பல இடங்களில் காட்டப்படுவதில்லையாம்!
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இந்த மாதிரி நடப்பதாக தகவல்கள் இல்லை! மாகாராஷ்டிராவைத் தவிர்த்து, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரானா நோயாளிகள் அப்நார்மலான விதத்தில் கூடுதலாக அதிகரிப்பதன் பின்னணியில் ஏதோ தீய நோக்கம் இருக்கிறது என்ற சந்தேகம் அனேகமாக அனைவருக்கும் வரத் தொடங்கிவிட்டது.
எப்படி தமிழ் நாட்டில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரானா நோயாளிகள்…? ஐயாரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள்! இந்த பாதிப்புகளிலும் ,மரணங்களிலும் லாபம் பார்க்கும் அந்த தீய சக்திகள் யார்? யார்? இவர்களின் தகிடுதத்தங்கள் என்னென்ன..? இதை அம்பலப்படுத்த வேண்டும்.
# நம்மை விட மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திரபிரதேசத்தில் – அதுவும் ஒரு கோடிக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை வெளி மாநிலங்களிலிருந்து உள் வாங்கிக் கொண்ட நிலையிலும் - ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் தான் பாதிப்பு! 2,100 தான் சாவு!
# நம்மை விட நெரிசலான அதிக மக்கள் உள்ள மேற்கு வங்கத்தில் இன்னும் ஒரு லட்சத்தை கூட கொரானா பாதிப்பு தொடவில்லை! சாவும் 2,100 தான்!
# நம்மை விட பெருமளவு பின்தங்கிய – தமிழ் நாட்டிலிருந்து வெளியேறிய அதிக புலம்பெயர் தொழிலாளர்களை பெற்றுள்ள - பீகாரில் கூட பாதிப்பு 82,000 தான்! சாவோ 450 தான்!
இது போல மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்,அவ்வளவு ஏன் பக்கத்தில் உள்ள கேரளாவில் கூட மிக மிக குறைவானோர்களே பாதிப்பு!
உலக அளவில் பார்த்தால் கூட, நம்மை விட அதிக பாதிப்புக்கும்,இழப்புக்கும் ஆளாகியுள்ள அமெரிக்காவில் கூட எந்த கெடுபிடிகளும் இல்லை! இன்னும் பல ஐரோப்பிய நாடுகளைக் கூட உதாரணம் காட்டுவேன்! உலகின் பல பாகங்களில் கொரானா இருந்தாலும் கூட ஒரளவு கட்டுப்பாடுடன் கூடிய சகஜ வாழ்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டளவுக்கு வேறெங்குமே கெடுபிடிகள், அபராதங்கள், அச்சுறுத்தல்கள், அவமானங்கள் இல்லை! இ பாஸ் ஊழல்கள், கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி சந்தைகள் பல திறக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது, பொது போக்குவரத்தை முற்றிலும் முடக்கி போட்டிருப்பது, அனைத்து வகையிலும் பொருளாதார வளர்ச்சியை முடக்கி வைத்திருப்பது, எதற்கெடுத்தாலும் அபராதம் என பணம் புடுங்குவது.. என இப்படி சொந்த மண்ணின் மக்களையே சுரண்டி,துன்புறுத்தி, கொன்று…தின்று கொழுக்கும் ஒரு அதிகார அமைப்பு பேராபதானது!
இதை விடவும், ஒரு ஜனநாயக நாட்டின் ஊடகங்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் கண்டும் காணாமல் அல்லது உரிய முக்கியத்துவம் தராமல் வாளாவிருப்பது பெரும் பேராபத்தாகும்!
சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிக்கையாளர்

கருத்துகள் இல்லை: