செவ்வாய், 26 மே, 2020

14 வயது சிறுவனால் 9 வயது சிறுமி கொலை: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!


 மின்னம்பலம் : திருச்சி சி மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி கொலை செய்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் இருக்கும் மல்லிகைத் தோட்டத்தில், உடலில் பலத்த காயங்களுடன் 9 வயது சிறுமி அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தலையில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஞாயிறு அன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன், பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.
சிறுமியின் உறவினரும் பக்கத்து வீட்டுக்காரருமான அந்த சிறுவன் வலுக்கட்டாயமாகச் சிறுமியை அந்த மல்லிகை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியிடம் தவறுதலாக நடக்க முயன்றதால் அதற்குச் சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சிறுமியின் தலையில் கல்லால் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பித்து வந்துள்ளார். அதோடு, அக்கம்பக்கத்தினரிடம் சிறுமி இவ்வாறு ரத்த காயங்களுடன் கிடப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் கிடந்த ரத்தக்கறை படிந்த பேன்ட் மற்றும் சட்டை ஆகியவற்றை கைப்பற்றிபோலீசார் விசாரித்துள்ளனர். அப்போது சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிறுவன் நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சிறுவன் படிக்கும் பள்ளியிலேயே சிறுமியும் படித்து வந்தது தெரியவந்துள்ளது.
சிறுவன், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போது அதற்குச் சிறுமி உடன்படாததால் பெற்றோரிடம் கூறி விட்டால் பிரச்சினை ஆகிவிடும் என பயந்து இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்கூறுகின்றன. மேலும் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், குழந்தைகள் சமூக ஊடகங்கள் யூடியூப் சேனல்களில் பார்க்கக்கூடாத தவறான காட்சிகளைப் பார்ப்பதால் தான் இது போன்ற குற்றச் செயல்கள் நடக்கின்றன. எனவே குழந்தைகள் செல்போனை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுப்பதற்காக ஆபாச வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் பகிர்பவர்கள் மீது ஏடிஜிபி ரவி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த சூழலில் 14 வயது சிறுவன், 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி கொலை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சிறுவர்கள் தவறான வீடியோக்கள் பார்ப்பதைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
கவிபிரியா

கருத்துகள் இல்லை: