புதன், 27 மே, 2020

சிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகசியம்!

சிறப்புக் கட்டுரை: சிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகசியம்!மின்னம்பலம் : - கோமல் அன்பரசன்
மன்னராட்சி முடிந்து எத்தனை ஆண்டுகளானாலும் ராஜாக்களைப் பற்றிய செய்திகள் என்றாலே நமக்குத் தனி ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் சமீபத்தில் மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் குறித்த செய்திகள் ஆர்வமுடன் பேசப்படுகின்றன. ஆனால், அந்த சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றி சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் மாய்ந்து மாய்ந்து பேசிய வரலாற்றுச் சம்பவம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காலத்தின் காலடியில் மறைந்து கிடைக்கும் அந்த ரகசியத்தைத் தோண்டி எடுத்துப் பார்க்கலாம்.
இரண்டு பக்கங்களும் மரங்கள் அடர்ந்த சென்னை மவுன்ட் ரோட்டின் மையப்பகுதியான தேனாம்பேட்டை. மழைக்கால இரவு நேரம். மணி எட்டரையைத் தாண்டி இருந்தது. அந்த உயர் ரக உறைவிட பள்ளிக்கூடத்தின் முதல்வரான டே லா ஹே (De la Haye), தன் மனைவியுடன் வெளியில் சென்றுவிட்டு ,மீண்டும் பள்ளிக்குத் திரும்பினார். அங்கே படிக்கும் சென்னை மாகாணத்தின் குறுநில மன்னர்கள், ஜமீன் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் எல்லாம் பெரிய கூடத்தில் ஒன்று கூடி இருந்தனர்.

வழக்கம்போல அவர்களுக்கு “குட் நைட்” சொல்லிவிட்டு முதல் மாடியிலுள்ள தனது அறைக்குத் தூங்கப்போனார் முதல்வர் ஹே. துரையும் அவர் மனைவியும் படியேறிப் போவதைப் பார்த்தபடியே மாணவர்களும் தூங்கப் போனார்கள். அவர் வெள்ளைக்காரர் அல்லவா, அதனால் முதல்வராக இருந்தாலும் “சார்” என்று சொல்லாமல் “துரை” என்றுதான் மாணவர்கள் அழைப்பார்கள்.
மாடிக்குப்போன கொஞ்ச நேரத்திலேயே துரை அசந்து தூங்கிவிட்டார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாடியில் கேட்ட சத்தம் அந்தக் கட்டடத்தை உலுக்கியது. தூங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர் என்னவோ, ஏதோவென்று அடித்துப்பிடித்து மாடிக்கு ஓடினர். அங்கே தலையின் வலப்பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் வழிந்த நிலையில் கிடந்தார் துரை. தூக்கத்திலிருந்து அலறி எழுந்து, நடந்ததைப் பார்த்து, ”திக்” பிரமை பிடித்தவளைப்போல நின்றிருந்தார் அவர் மனைவி. மாணவர்களில் ஒருவர் பதறியபடி கீழே இறங்கி வந்து போலீசுக்கும் டாக்டருக்கும் போன் அடித்தார். டாக்டர் மேஜர். ஹிங்ஸ்டன் அடுத்த 10ஆவது நிமிடத்தில் அங்கே இருந்தார். துரையைச் சோதித்துப் பார்த்தார். அவர் இறந்து போயிருந்தார். போலீசும் வந்தது.12 தோட்டாக்கள் போடும் துப்பாக்கி ஒன்றை அங்கிருந்தும், மாடிக்கு கீழே பக்கவாட்டு பகுதியில் இன்னொரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டன.
1919ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பொழுது விடிந்தது. அன்றைக்கு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த மெட்ராஸ் நகரமே பரபரத்தது.
“அடப்பாவிங்களா…பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரையே இப்படி பண்ணிட்டானுங்களே…”
“ஜமீனுலயும் சமஸ்தானத்திலும் கிடந்து அட்டூழியம் பண்ணுறாங்கன்னு இங்கே கொண்டுவந்து படிக்க வெச்சா, மைனருங்க செஞ்ச கூத்த பார்த்தீங்களா…”
“அந்த துரை வயசானவரு. கொஞ்சமும் பொருந்தாத அவர் பொஞ்சாதிக்கு இளம்வயசு. அதனால மைனர்களோடு அப்படி, இப்படி இருந்திருக்கு. அதுலே ஏற்பட்ட பிரச்சினைலதான் துரையவே போட்டுத்தள்ளிட்டானுங்க...”
“துரசாணி ( துரையின் மனைவி)தான் மைனர் பசங்கள கையில வெச்சுக்கிட்டு, இந்த பாதகத்தை செஞ்சுபுட்டாளாமே...”
இப்படி பத்து, இருபது விதமாக கதைகள். இவற்றில் உண்மைகளோடு அவரவர் திறமைப்படி கற்பனைகளும் கலந்தே இருந்தன.
நியூயிங்டன் ஹவுஸ் (Newington House) என்ற பெயரிலான பள்ளிக்கூடத்தில் படித்தவர்களைப் பற்றி யாருக்கும் அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. தற்போது தேனாம்பேட்டையில் DMS இருக்கிறதே அங்கேதான் அந்தப் பள்ளி இருந்தது.
நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களாகவும் குறுநிலப்பரப்புகளாகவும் அப்போது இந்தியா பிரிந்து கிடந்தது. நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஆங்கிலேயரிடம் இருந்தது. குட்டி ராஜாக்களும் ஜமீன்களும் அந்தந்த பகுதிகளில் ஆட்சி நடத்தி, வரி வசூலித்து, வெள்ளையருக்குக் கப்பம் கட்டி வந்தனர். அவர்களுக்காக ஆங்கிலேயரும் பல சலுகைகளைச் செய்து கொடுத்தனர். அதில் ஒன்றுதான் ராஜா வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம். தம்மை அடக்கி ஆளுபவனின் ஆங்கில மொழியையும், ஆளை அசத்தும் அவனது கலாச்சாரத்தையும் வாரிசுகள் கற்றுக்கொள்வதை ராஜாக்கள் பெருமையாகக் கருதினர். தென்னிந்தியாவுக்கே ஒரே “ராஜகுமாரர்கள்” பள்ளிக்கூடம் இது. இங்கே படிப்பு மட்டுமல்ல... குதிரையேற்றம், துப்பாக்கிச்சுடுதல், பில்லியர்ட்ஸ் என ஆங்கிலேயரைப் போலவே அந்தஸ்துடன் இருக்க தேவையான அத்தனை பயிற்சிகளும் உண்டு. இந்த வாரிசுகளை “மைனர்” என்றழைப்பது அன்றைக்கு வழக்கத்திலிருந்தது. அதனால் மைனர் பள்ளிக்கூடம் என்றும் மைனர் பங்களா எனவும் நியூயிங்டன் பள்ளி அழைக்கப்பட்டது.

இப்படிப்பட்ட பள்ளியின் முதல்வரான ஹே துரை கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் விசாரணை நடந்தது. அவர்களால் கொலையாளியைத் துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை. முடிவில் கடம்பூரும் சிங்கம்பட்டியும் சேர்ந்து கொலையைச் செய்ததாக வழக்கு பதியப்பட்டது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த இந்த இரண்டு ஊர் ஜமீனின் பிள்ளைகள்தான் கொலையாளிகள் என்றது போலீஸ். வழக்கு முழுக்கவே அவர்களின் பெயருக்குப் பதிலாக ஜமீனின் பெயர்கள்தான் இருக்கின்றன. இதன்பிறகு வழக்கில் யாருமே எதிர்பார்க்காத இரண்டு திருப்பங்கள் நடந்தன. கொல்லப்பட்ட துரையின் இளம் மனைவி திடீரென இங்கிலாந்துக்குக் கப்பலேற்றப்பட்டார். சென்னையில் நடக்க வேண்டிய வழக்கை, குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 527இன்படி, அப்போதைய ஆளுநர் வெலிங்டன் அதிரடியாக பம்பாய் (மும்பை) நீதிமன்றத்துக்கு மாற்றினார். இவை இரண்டுமே சர்ச்சையை ஏற்படுத்தின. ஏற்கனவே மென்றுகொண்டிருந்த ஊர் வாய்க்கு நிறைய அவல் கிடைத்தது. வெளியில் சொல்ல முடியாத காரணங்களால்தான், கொலை நடந்தபோது இருந்த ஒரே சாட்சியான துரையின் மனைவியை போலீஸ் சொந்த நாட்டுக்கு அனுப்பிவிட்டதாகப் பேசப்பட்டது.
பம்பாய் உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு முன்பு வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக தலைமை நீதிபதி சர் நார்மன் மெக்லாய்டு (Sir Norman Macleod) நேரடியாக வழக்கை விசாரித்தார். அவரோடு குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் புலி என்று பெயர்பெற்ற கரம்ப் (Crump) என்பவரும் நீதிபதியாக இருந்தார்.
“துருவித்துருவி” விசாரித்த போலீஸ், ஒருவழியாக சிங்கம்பட்டியை அப்ரூவராக மாற்றி, கடம்பூர்தான் துரையைக் கொலை செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சென்னை மாகாணத்தின் அரசு வழக்கறிஞர் சிட்னி ஸ்மித் மற்றும் பம்பாயைச் சேர்ந்த W.L.வெல்டன் என்ற வக்கீலும் போலீசுக்காக ஆஜரானார்கள். குற்றம்சாட்டப்பட்ட கடம்பூரின் சார்பாக “பார் அட் லா” முடித்த, பம்பாயின் பிரபல கிரிமினல் வக்கீலான R.D.N.வாடியா வாதாடினார். அவரோடு மெட்ராஸ் வக்கீல்களான டாக்டர் சுவாமிநாதனும்,V.L.எத்திராஜும் களமிறங்கினர். (இவர்களில் இளமை துடிப்புடன் அப்போது 30 வயதுகளில் இருந்த எத்திராஜ், பின்னாளில் புகழ் பெற்று, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியை உருவாக்கியவர்) சிங்கம்பட்டிக்காக பம்பாயில் கொடிகட்டி பறந்த இன்னொரு கிரிமினல் வக்கீலான J.D.தாவர் என்பவர் ஆஜரானார். விசாரணை தொடங்கியது.

“துரையை, மைனர்கள் திட்டமிட்டுக் கொன்றுள்ளனர். இதற்காக அவர்கள் சதி செய்துள்ளனர்: அதன்படிதான் சிங்கம்பட்டியும் கடம்பூரும் சேர்ந்து காரியத்தை முடித்துள்ளனர்” என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு வலுசேர்க்க அப்ரூவர் சிங்கம்பட்டி, அரசு சாட்சியாகக் கூண்டில் ஏற்றப்பட்டார்.
“தமிழர்களைக் காட்டுமிராண்டிகள்னு சொன்ன துரையை சும்மாவிடக் கூடாது: இன்னிக்கே சுட்டுக்கொல்லணும் என்று கடம்பூர் சொன்னான். கட்டாயப்படுத்தி எனக்கும் ஒரு துப்பாக்கி கொடுத்தான். அவனோட குறி தப்பினால் , நான் துரையை சுடணும் என்று சொன்னான். சுடறத்துக்குள்ள துரை மனைவி முழிச்சுட்டாலோ, வேறு யாராவது வந்துட்டாலோ அவங்களையும் சுடச் சொன்னான். இதுக்கு ஒத்துழைக்கலைன்னா என்னை கொன்னுடுவேன்னு கடம்பூர் மிரட்டினான். இரண்டு பேரும் துரையின் படுக்கையறைக்குப் போனோம். தூங்கிக்கிட்டு இருந்த துரையின் தலையில அவன் சுட்டான். பிறகு இரண்டு பேரும் அறையை விட்டு ஓடிட்டோம். போகும்போது ஜன்னலுக்கு வெளியே துப்பாக்கியைத் தூக்கிப் போட்டுட்டோம்.”
- சிங்கம்பட்டியின் சாட்சியம் இது. மற்ற மைனர்களும் அரசு தரப்பில் சாட்சி சொன்னார்கள். அவர்களில் தலைவன் கோட்டையின் (ஊரின் பெயராலேயே அழைக்கப்பட்ட இவரும், நெல்லை மாவட்டத்திலிருந்த இன்னொரு ஜமீனின் வாரிசு) சாட்சியம் , சிங்கம்பட்டியின் வாக்குமூலத்தோடு பெருமளவு ஒத்துப்போனது. ஆனால், விசாரணையின்போது வேறொரு மைனர் சொன்ன தகவல் , தலைவன் கோட்டையின் சாட்சியத்தைக் கேலிக்குரியதாக்கிவிட்டது. அதாவது, பள்ளிக்கூடத்தில் மைனர்களிடையே பல்வேறு போட்டிகள் நடப்பதுண்டு. அப்படி நடத்தப்பட்ட “சிறப்பாகப் பொய் சொல்லும் போட்டி”யில் வென்று, “புளுகு மன்னன்” பட்டத்தைப் பெற்றவன் தலைவன் கோட்டை என்பதே அந்த தகவல்.
இதுபோக, சிங்கம்பட்டி உள்ளிட்டோரின் சாட்சியத்தை முறியடிக்கும் விதத்தில் கடம்பூரின் வக்கீல் வாடியா திறமையாக வாதாடினார். குறுக்கு விசாரணையின்போது, போலீஸ் தரப்பு சாட்சிகளில் இருந்த ஓட்டைகளை அவர் அற்புதமாக அம்பலப்படுத்தினார்.
போலீஸ் சாட்சிகள் நம்பகமாக இல்லை என்று அறிவித்தார் தலைமை நீதிபதி. அதிலும் அப்ரூவர் சிங்கம்பட்டியின் சாட்சியத்தை அவர் ஏற்க மறுத்தார். துரையைக் கொல்ல கூட்டுச்சதி நடந்ததாகவோ, கடம்பூரும் சிங்கம்பட்டியும்தான் கொன்றதாகவோ மற்ற மைனர்களும் சாட்சியத்தில் கூறவில்லை. பெரும் சர்ச்சைக்குள்ளான வழக்கில் தீர்ப்பளிக்க இவை மட்டும் போதாதென்று நீதிபதி நினைத்தார். இதையடுத்து பம்பாயிலுள்ள பிரபலமான துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் நிபுணர் ஒருவர் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். கொலை நாளில் தூக்கி எறிந்ததாக சிங்கம்பட்டி கூறிய துப்பாக்கி அவரிடம் காட்டப்பட்டது. ஆய்வு செய்துவிட்டு அவர் சாட்சியம் அளித்தார்.
“துப்பாக்கியில் சிராய்ப்புகளோ, கோடுகளோ இல்லை. ஓடுகிற ஓட்டத்தில், 40 அடி உயரத்திலிருந்து தூக்கி எறிந்திருந்தால், துப்பாக்கி துண்டு, துண்டாக உடைந்து போயிருக்கும். தோட்டாக்களும் சிதறிப் போயிருக்கும்.”
துப்பாக்கி தயாரிப்பு வல்லுநரின் வாக்குமூலத்தை அடுத்து, ஜூரிகளுடன் தலைமை நீதிபதி ஆலோசித்தார். தீர்ப்பு நாள் வந்தது. பாதிக்கப்பட்ட ஜமீன் குடும்பத்தார் ரயிலேறி பம்பாய் போக , நீதிமன்றத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
“நம்பகத்தன்மை இல்லாத சாட்சிகளை வைத்து, கடம்பூரை குற்றவாளி என்று கூற முடியாது. இந்த வழக்கில் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை. வேறு யாரோ பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளார்கள். அவர்கள் கடம்பூரையும் சிங்கம்பட்டியையும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.”
மைனர்கள் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பைக் கேட்டவுடன் நீதிமன்றத்தில் கூடியிருந்தோர் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் தலைமை நீதிபதியின் மனைவியிடமிருந்துதான் முதல் கைத்தட்டல் வந்தது. தீர்ப்பைக் கேட்க அவரும் நீதிமன்றத்திற்கு வருமளவுக்கு அன்றைக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது இவ்வழக்கு.
வழக்கிலிருந்து விடுதலையாகிவிட்டாலும் அதற்காகத் தண்ணீரைப் போல செலவழிக்கப்பட்ட பணத்தால், இரண்டு ஜமீன்களும் திணறின. அதிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 75,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம், 5 ஏக்கரில் அரண்மனை, 1000க்கும் அதிகமான குதிரைகள், கோயில் நிர்வாகங்கள், யானை தந்தத்தால் ஆன பல்லக்குகள் என தர்பார் நடத்தி வந்த சிங்கம்பட்டி ஜமீன் கடனில் மூழ்கியது. கடனை அடைக்க, மலைப்பகுதியில் 8,000 ஏக்கரை பிரிட்டிஷார் நடத்திய பம்பாய் பர்மா டிரேடிங் கம்பெனியிடம் விற்றார்கள். அங்கே உருவாக்கப்பட்டதுதான் தற்போதுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்.
விடுதலைக்குப்பிறகு ஜமீனின் 30ஆவது பட்டமேற்று, சிவசுப்ரமணிய ராஜாவாக ஆட்சி நடத்தினார் சிங்கம்பட்டி. சிவசுப்ரமணிய ராஜாவுக்குப் பிறகு முடிசூட்டப்பட்டு தமிழகத்தின் கடைசி ஜமீனாக இருந்த அவரது மகன் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதிதான் தற்போது காலமாகியிருக்கிறார்.
ஆவணங்களின்படி டே லா ஹே கொலை வழக்கு (DE LA HAYE MURDER CASE-1920) என்றிருந்தாலும் தமிழ்நாட்டில் சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு என்றே பெயரானது. கொலையாளியாகச் சொல்லப்பட்ட கடம்பூர் ஜமீன் பெயர் ஏன் வழக்குக்கு வரவில்லை? கடம்பூர் ரொம்ப சிறிய ஜமீன். தமிழ்நாட்டின் பெரிய ஜமீன்களில் ஒன்று சிங்கம்பட்டி. அதனால்தான்! இன்னொரு செய்தியும் முக்கியமானது. கொலைக்குப் பிறகு மைனர் பள்ளிக்கூடம் மொத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்டது.
கட்டுரையாளர் குறிப்பு

கோமல் அன்பரசன் ஊடகவியல் ஆலோசகர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர். நவீன யுகத்துக்கேற்ப வரலாற்றை புதிய கோணத்தில் அணுகி மக்களுக்குச் சுவாரஸ்யமாகத் தரும் வரலாற்று ஆய்வாளர். ‘ரகசியமான ரகசியங்கள்’ உள்ளிட்ட 20 நூல்களின் ஆசிரியர். இவரது ஊடகவியல் மற்றும் வரலாற்று நூல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அரசியல் அறிவியல், வரலாறு,சமூகவியல் பற்றி மாணவர்கள், இளைஞர்கள் இடையே தொடர்ந்து உரைகளை நிகழ்த்தி வருபவர். ‘காவிரி’ என்ற அமைப்பை உருவாக்கி டெல்டா மாவட்டங்களில் நலப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டதில் இவருக்கும், இவர் உருவாக்கிய ‘மாயூர யுத்தம்’ இயக்கத்துக்கும் முதன்மையான பங்குண்டு.
தொடர்புக்கு: komalrkanbarasan@gmail.com

கருத்துகள் இல்லை: