திங்கள், 25 மே, 2020

தமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவு!

தமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவு!மின்னம்பலம் : தமிழகத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31ஆவது பட்டம் பெற்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி மறைந்தார். இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.
மூன்றரை வயதாக இருக்கும்போது ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முருகதாஸ் தீர்த்தபதி, சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தாராக அறியப்படுபவர். இவருக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாக பட்டம் சூடி தமிழகத்தின் கடைசி ஜமீனாக வலம் வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி. சரளமான ஆங்கிலம், துப்பாக்கி சுடுதல், ரக்பி, சிலம்பு, வாள் வீச்சு என பல துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர் ஆன்மிக நாட்டம் காரணமாக எல்.ஐ.சி முகவராக மட்டும் தன் வாழ்க்கையை சுருக்கிக்கொண்டு அரண்மனையில் வாழ்ந்து வந்தார். காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ஊர்மக்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார்.

இந்நிலையில், முருகதாஸ் தீர்த்தபதி வயது முதிர்வின் காரணமாக நேற்று(மே 24) காலமானார். அவரின் மறைவு சிங்கம்பட்டி ஜமீன் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுக செய்தி தொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இது குறித்து தனது முகநூல் பதிவில், "ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான். இவரோடு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம். கடந்த 1972ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை காவல்துறையினர் தாக்கும் போது, சேலம் லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போது அதைக் குறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம். அதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரை சந்திப்பது வாடிக்கை.
கடந்த 1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்த போது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது. இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம், நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம் தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரத்தில் வந்து சிலர் சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.
இப்படியான தொடர்புகள் அவரோடு நீடித்தன. 2004ல் “நிமிர வைக்கும் நெல்லை” என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் தொகுத்து என்னுடைய நூல் வெளியானது. அந்த நூலை படித்து விட்டு , “நம் மண்ணிற்கு சிறப்பு செய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி” என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனை குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார். நல்ல மனிதர். பண்பாளர். கம்பீரமானவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
இவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சீமராஜா படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் ஆகியோர் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் செலுத்தியுள்ளனர். சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பதிவில், "சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பொன்ராம் தனது சமூக வலைதளப் பதிவில், "ஜமீன் ராஜா மட்டும் அல்ல, தமிழ் இலக்கியவாதி, பண்பானவர். இவர் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும் சிங்கம்பட்டி ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
-முகேஷ் சுப்ரமணியம்

கருத்துகள் இல்லை: