திங்கள், 25 மே, 2020

திருட்டு இரயிலும் கலைஞரும்.. கலைஞரின் இளமை கால வெற்றிகள்

பேட்மின்டன்கலைஞர்
Nilavinian Manickam : திருவாரூரில் இருந்து சென்னைக்கு மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு டிக்கெட் எடுக்காமல் (அதைத்தான் திருட்டு ரயில்னு சொல்றானுங்க) பயணம் செய்து வந்த
கருணாநிதி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் குவித்து இன்று தன்னுடைய வாரிசுகளுக்கு விட்டுச் சென்றுள்ளார் என்ற அவதூறுக்கு வயது எத்தனை எனத் தெரியவில்லை. கலைஞர் ரயில் கழிவறையில் ஒளிந்து கொண்டு பயணம் செய்வது போன்ற ஒரு படத்தை நேற்றுகூட ஒரு நண்பரின் பதிவில் கண்டேன். எவராலோ தொடங்கப்பட்ட இந்த அவதூறுக்கு ஆதாரம் உண்டு.
திருக்குவளையில் பிறந்து தொடக்கக் கல்வியை அங்கேயே கற்ற கலைஞர், உயர்நிலைக் கல்வியை திருவாரூரில் உள்ள வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். தன்னுடைய குடும்பச் சூழல், கல்வி பற்றி கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கலைஞர் இப்படிக் கூறுகிறார்...

என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றிக் குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்தில் இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.//
1942ல், 18ஆவது வயதில் முரசொலியைத் தொடங்கினார். தொடர்ந்து திருவாரூரிலேயே இயங்கி வந்த அவர் திருவாரூரைவிட்டு முதலில் சென்றது சென்னை அல்ல.
முரசொலி, திராவிட இயக்க மேடைகள் போன்றவற்றின் மூலம் கிடைத்த அறிமுகம் அவருக்கு பெரியாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த, பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணிபுரிய அவர் சென்றது ஈரோடு. அங்கிருந்தபோது சினிமாவுக்கு எழுத கோவை ஜுபிடர் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வர இரண்டு படங்களுக்கு வசனம் எழுதினார். இரண்டிலுமே அவருடைய பெயர் முன்னிலைப் படுத்தப்படவில்லை.
பின்னர் கவிஞர் கா.மு ஷெரீப் மூலம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் (அப்போதைய தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூபாய் 10க்கும் குறைவு) சம்பளத்தில் தன்னுடைய அரசியல் பணிகளில் எவ்விதக் குறுக்கீடும் செய்யக் கூடாது என்ற நிபந்தனையில் பணியில் அமர்ந்தார்.
திருவாரூரில் தொடங்கிய பயணம் ஈரோடு, கோவை மற்றும் சேலம் வழியாகவே சென்னை வந்தடைந்தார். முரசொலியும் தொடர்ந்தது. இதுமட்டுமின்றி மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், கலைஎழில் கம்பைன்ஸ், பூம்புகார் புரடக்‌ஷன்ஸ் போன்ற நிறுவனங்களைத் தொடங்கி திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டார்.
அத்தனையும் ஆவணங்களாக, நிகழ்காலச் செய்தியாக இருக்கும்போதே, கலைஞர் இளமையில் பஞ்சப் பரதேசியா இருந்தவர் எனக் கட்டமைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது பார்ப்பனீயம்.
படம் : திருவாரூர் கமலாம்பிகா கோஆபரேட்டிவ் அர்பன் பேங்கில் தமக்கிருந்த 5 பங்குகளை தம்முடைய மகன் கருணாநிதியின் (கவனிக்க தட்சிணாமூர்த்தி அல்ல கருணாநிதி) பெயருக்கு மாற்றக்கோரி அவருடைய தந்தை முத்துவேலர் எழுதிய மடல்

கருத்துகள் இல்லை: