வெள்ளி, 29 மே, 2020

நிறவெறி ..எங்களால் மூச்சு விட முடியவில்லை: கொந்தளிக்கும் அமெரிக்கா! வீடியோ


எங்களால் மூச்சு விட முடியவில்லை: கொந்தளிக்கும் அமெரிக்கா!மின்னம்பலம் : நிறவெறி காரணமாக காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் தொடர்பாக கடந்த மூன்று நாட்களுக்கும் மேல் நியூயார்க் நகரத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற நபரை, கருப்பினத்தவர் என்பதற்காகவே ஒரு மோசடி வழக்கில் சந்தேகித்து போலீஸார் கைது செய்தனர். கைதுக்கு ஒத்துழைக்காத அவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் பரவியது.
பதிவான காட்சிகளில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், “என்னால் மூச்சுவிட முடியவில்லை”, “என்னைக் கொல்ல வேண்டாம்!” என்று கூச்சலிடுவதை கேட்க முடிகிறது. பின்னர் அவர் அசைவில்லாமல், கண்களை மூடிக் கீழே விழுகிறார். காவலர் பிடியில் இருந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்ததையடுத்து, மின்னாபோலிஸ் நகரில் பெரியளவில் போராட்டம் வெடித்தது.

சம்பவம் நடந்த இடமான மின்னா போலிஸை ஒரு பெரிய எதிர்ப்பு தளமாகக் கொண்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவல் நிலையத்தின் நுழைவாயிலுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். பல இடங்களில் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள், ஃப்ளாய்ட் இறந்த மின்னா போலிஸ் சந்திப்பில் வரிசையாக நின்றபடி,“என்னால் மூச்சுவிட முடியவில்லை” மற்றும் “சிறைக் கொலையாளி கே.கே.காப்ஸ்” என்று படிக்கும் போஸ்டர்களை கொண்டு, காவல்துறையின் வன்முறைக்கு போர்கொடி தூக்கியுள்ளனர். அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பாளர்களை "குண்டர்கள்" என்று முத்திரை குத்தியுள்ளார். அதிகாரிகள் பல ஆர்ப்பாட்டக்காரர்களைக் கீழே இறக்கி, கூட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர். மேலும் 40க்கும்மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மார்ட்டின் லூதர் கிங் III, மனித உரிமைத் தலைவரும், மறைந்த மார்ட்டின் லூதர் கிங்கின் மகனுமான ஜூனியர் தனது தந்தையின் மேற்கோள் காட்டி, “கலகம் என்பது கேட்கப்படாதவர்களின் மொழி” என்று கூறினார். ஃப்ளாய்டை போலீசார் நடத்தியதைக் கண்டித்த பல மனித உரிமை ஆதரவாளர்களில் கிங்கும் ஒருவர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மைக்கேல் பேச்லெட், காவல்துறையினரால் கொல்லப்பட்ட கறுப்பின அமெரிக்கர்களின் நீண்ட பட்டியலில் ஃப்ளாய்டின் பெயரைச் சேர்ப்பதில் திகைத்துப் போயிருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வயோலா டேவிஸ் கூறும்போது, " அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை இதுதான். கறுப்பாக இருப்பதற்காக குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாங்கள் தற்போது நவீன கால கொலைகளை எதிர்கொள்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துவதற்காக வழியை காணாத வரை அமெரிக்கா எப்போதும் உயர்ந்த நாடாக மாறாது" என்றார்.

ஜான் போயேகா கூறும் போது, "என்னால் சுவாசிக்க முடியவில்லை. என் வயிறு வலிக்கிறது. என் கழுத்து வலிக்கிறது. எல்லாமே வலிக்கிறது. அவர்கள் என்னை கொல்லப்போகிறார்கள்" என்றார். அன்னே ஹாத்வே கூறும்போது, "இதுதான் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவர் உயிரோடு இருந்திருக்கவேண்டும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரை கொன்ற காவலர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
புகைப்படங்கள்: ஸ்காட் ஹெய்ன்ஸ்
-முகேஷ் சுப்ரமணியம்

கருத்துகள் இல்லை: