புதன், 27 மே, 2020

தீபக்கும் தீபாவும் ஜெயலலிதாவின் வாரிசுகள்.. போயஸ் கார்டன் வீடு அவர்களுக்குத்தான் ... தீர்ப்பு விபரம்


BBC : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் குழந்தைகளை அவரது அதிகாரப்பூர்வ வாரிசுகளாகவும் நீதிமன்றம் அங்கீரித்துள்ளது. ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்க வேண்டுமெனக் கோரி, அவரது அண்ணன் ஜெயகுமார் மகன் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தனர். அதில் தனது சகோதரி தீபாவையும் இணைத்திருந்தார்.
அந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கின் பின்னணி: ஜெயலலிதாவின் பெற்றோர் சந்தியா - ஜெயராமன் தம்பதிக்கு ஜெயலலிதா, ஜெயகுமார் என இரண்டு குழந்தைகள். ஜெயராமன் முன்பே இறந்துவிட, சந்தியா 1971ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமார், விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு தீபக், தீபா என இருவர் பிறந்தனர். இதில் ஜெயக்குமார் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மரணமடைந்தார். விஜயலட்சுமி 2013ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மரணமடைந்தார்.
>ஜெயலலிதா திருமணம் செய்யாமல் மறைந்துவிட்ட நிலையில், தீபக்கும் தீபாவும் இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி தங்களை அவரது இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவிக்கும்படி கோரினர். ஜெயலலிதாவுக்குத் தங்களைத் தவிர ரத்த ரீதியான உறவு யாருமில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். மேலும், ஜெயலலிதா எழுதியதாக உயில் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ஆம் தேதி மறைந்துவிட்ட நிலையில், தங்களை வாரிசாக அறிவிக்கக்கோரி 2017 ஆகஸ்ட் 17ஆம் தேதி கிண்டி தாசில்தாரை தீபாவும் தீபக்கும் அணுகியுள்ளனர். இதற்குப் பதிலளித்த தாசில்தார், ஒரு சிவில் நீதிமன்றத்தை அணுகி உத்தரவைப் பெறும்படி கூறினார்.
இதையடுத்து தீபக், தனது தங்கை தீபாவையும் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, தங்களை ஜெயலலிதாவின் சொத்துகளின் நிர்வாகியாக அறிவிக்கும்படி கோரினார்.

போயஸ் கார்டன் இல்லம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லமான 'வேதா நிலையம்', அவரது தாயார் எழுதிவைத்த உயில் மூலம் அவருக்கு வந்து சேர்ந்தது. தாங்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன்கள் என்பதால், அந்த சொத்தில் தங்களுக்கு பாதி பங்கு இருப்பதாக தீபக் தனது மனுவில் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு 188 கோடியே 48 லட்சத்து 66 ஆயிரத்து 305 ரூபாய் 51 பைசா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தியாவுக்கு இருந்த சொத்துகளில் போயஸ் கார்டன் இல்லம் முழுமையாக ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் என உயில் எழுதப்பட்டது. தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள வீடு ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது தாக்கல் செய்த சொத்துப் பட்டியலே அவரது சொத்தின் மதிப்பாக மதிப்பிடப்படும். மேலும், போயஸ் கார்டனில்தான் தங்கள் வளர்ந்த நிலையில், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதும் அவர் மறைந்த பிறகும் அந்த வீட்டிற்குள் நுழைய தாங்கள் மறுக்கப்பட்டதாகவும் தீபக்கும் தீபாவும் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்களிடம் சொத்து வழங்கப்பட்டால், தாங்கள் டாக்டர் ஜெ.ஜெயலலிதா என்ற பெயரில் ட்ரஸ்ட் ஒன்றை அமைத்து, சமூக சேவை செய்யவிருப்பதாகவும் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
வாரிசு வழக்கில் தீர்ப்பு! இந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், தீபக்கும் தீபாவும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளுக்கும் அவருடைய பெயரில் உள்ள நிறுவனங்களுக்கும் இவர்களே நிர்வாகிகளாக இருப்பார்கள் என்றும் ஜெயலலிதாவின் பெயரில் ஒரு ட்ரஸ்டை உருவாக்கி, அந்த விவரத்தை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்து தொடர்பாக மற்றொரு வழக்கு

அம்மா பேரவையைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய இருவரும் தமிழக அரசை ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கச் செய்ய வேண்டும் என உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு ஒற்றை நீதிபதி அடங்கிய அமர்வால் முன்பே தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கும் ஜெ. தீபா, ஜெ. தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கோடு சேர்ந்து விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசு, போயஸ் கார்டன் இல்லம் 10 கிரவுண்ட் பரப்பளவுள்ளது என்றும் அதனை நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாகவும் கூறியிருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒரு மக்கள் நல அரசாக, தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய பணிகள் பல இருக்கும் நிலையில், ஒரு நினைவில்லத்திற்காக அரசு செலவழிப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது. மறைந்த முதல்வர்களின் இல்லத்தை நினைவில்லமாக்குவதென்றால், அதற்கு முடிவே இருக்காது; ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியிலிருந்து முதல்வர்களாக இருந்தவர்களுக்கு நினைவில்லங்களை எழுப்ப வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கும். பொதுமக்களின் பணத்தை இதில் செலவழிக்க வேண்டியிருக்கும்.
10 கிரவுண்ட் பரப்புள்ள ஜெயலலிதாவின் இல்லம் சுமார் பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகமாக செயல்பட்டுவந்திருக்கிறது. ஆகவே, அந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்குப் பதிலாக, முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்றக்கூடாது என்ற யோசனையை நீதிமன்றம் முன்வைத்துள்ளது.
ஜெயலலிதாவின் இல்லத்தை முழுமையாக, முதல்வரின் இல்லமாக மாற்ற விரும்பாவிட்டாலும்கூட, பகுதியளவை நினைவில்லமாகவும் மீதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்றலாம் என்று கூறியுள்ளது.
ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை நீதிமன்றம் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்துள்ளதால், அவர்களுக்கு அவர்கள் செலவில் 24 மணி நேரமும் பாதுகாப்பு தர வேண்டும். இதற்காக ஏதாவது ஒரு சொத்தை விற்று, அதனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வைப்புத் தொகையாக செலுத்தி, அதிலிருந்து வரும் வட்டியை பாதுகாப்புச் செலவுக்காக அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அம்மா பேரவையைச் சேர்ந்த கே. புகழேந்தி, பி. ஜானகிராமன் ஆகியோரின் கேவியட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது சரியானதென்றும் சென்னை உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் உறுதிசெய்துள்ளது.

கருத்துகள் இல்லை: