சனி, 30 மே, 2020

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள்!

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள்! மின்னம்பலம் : நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இதுதொடர்பாக பிரதமருடன், உள் துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு முறை ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அன்லாக் 1.0 என்ற பெயரில் மத்திய உள் துறை அமைச்சகம் இன்று (மே 30) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு மாவட்ட அதிகாரிகளால் கட்டுப்பாட்டு மண்டலங்கள் வரையறுக்கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். இந்த பகுதிகளில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூன் 8 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஜூன் 8 முதல் மதவழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதுபோலவே உணவகங்கள், விடுதிகள், வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் பரீசிலனை செய்து முடிவெடுக்கலாம்.
சூழலைப் பொறுத்து தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள் ஆகியவற்றை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்துகொள்ளலாம்.
அத்தியாவசியப் பணிகளைத் தவிர நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயமாகும். கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு சமூக இடைவெளியுடன் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தொடரும். எனினும், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் உள் மாநிலத்திற்கான சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு தடையில்லை. சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
எழில்

கருத்துகள் இல்லை: