புதன், 27 மே, 2020

உத்தர பிரதேச தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆகியது ... தொடரும் ஜாதி ராஜ்ஜியம்

சுசிலா : பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள், கடந்த இரு
நாட்களாக பேசியதில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடையங்கள் சிலவற்றை இங்கு தருகிறேன் ....
சில தினங்களுக்கு முன், செல்வி மாயாவதி அவர்கள், ' இந்த அளவிற்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து வருவதற்கும், அவர்களின் இந்த ஏழ்மைக்கும் நீண்டகால காங்கிரஸ் ஆட்சியே காரணம், மேலும் பாஜகவும் ஒரு காரணம் ' என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
அது, காங்கிரஸ், ஆட்சியோ, பாஜக ஆட்சியோ மட்டுமல்ல, சமாஜ்வாடி ஆண்டது, பகுஜன் சமாஜ் ஆண்டது, இருந்தாலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஏனென்றால், வளர்ச்சி என்பது சமூக மாற்றத்திலிருந்து தான் வர வேண்டும். தென் மாநிலங்கள் வளர்ச்சிக்கு அது தான் பெரிதும் உதவியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், சமூக மாற்றம் தான். அதனை சில சமூக அமைப்புகள், சமூக இயங்கங்கள், கட்சிகள் என அனைத்தும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றன. அவைகள் முதலில் செய்த மிக முக்கிய மூன்று பணிகள், கல்வி, சுகாதாரம், நிலப்பிரபுவத்துவம். அதில் கல்வியை பரவலாக கொண்டு சென்றது. கிராமப்புறங்கள் முதற்கொண்டு எல்லோரும் படிக்கும் அளவிற்கு எளிதாக்கியது,


அடுத்து, பொது சுகாதாரம் என்ற கட்டமைப்பு . மருத்துவம் என்பது ஏழை, எளிய மக்களுக்கு, குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தது, மருத்துவம் படித்தவர்கள், மேற்படிப்பிற்கு படிக்க வேண்டும் என்றால், கிராமப்புறங்களில் பணிசெய்ய வேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்கியது,
 கடைசியாக பார்த்தால், நிலப்பிரபுவத்துவம் என்ற ஒரு ஆதிக்க கட்டமைப்பை அதற்கு தெரியாமலேயே, அடித்து நொறுக்கியது, இவையெல்லாம் ஒரு வளர்ந்த , முன்னேறிய சமத்துவத்தை நோக்கியே கட்டமைக்கப்பட்டது.

இன்றளவில் கூட, உயர்கல்வியில், நம் மாநிலம் தான் முதலில் உள்ளது. 49% என்ற விகிதத்தில் நம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கிறார்கள். இந்தியஅளவில், இதற்கு பக்கத்தில்கூட வர முடியவில்லை. இந்த அளவிற்கு ஒரு வளர்ச்சியை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முன்னேறியதற்கு , இங்கு ஏற்பட்ட சமூக மாற்றமே மிக முக்கிய காரணம்.

வடமாநிலங்கள் முன்னேறாமைக்கு , இந்த சமூக மாற்றம் அங்கு இல்லாதது தான் காரணமே தவிர, யார் ஆட்சி செய்தாலும் இப்படி தான் இருக்கும்.
இதனை நன்கு புரிந்துகொண்ட காரணத்தால் தான், நம்முடைய இந்த கட்டமைப்பை உடைக்க முயற்சி செய்கிறார்கள். கல்வி, சுகாதாரம் என அனைத்திலும் ஒன்றிய அரசு தன்னுடைய அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவர முயல்கிறது.

மேலும், இந்த சமூக மாற்றத்திற்கு காரணமாக இருந்த அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் மீது அவதூறுகள், பொய்யான பிரச்சாரங்கள், ஏன் தனி மனித தாக்குதல்கள் வரை செல்லக்கூடும். வடமாநிலங்கள், தென் மாநிலங்கள் போல் ஆவது இருக்கட்டும்... நாம் வடமாநிலங்கள் போல் ஆகிவிடக்கூடாது என்றால், நாம் கடந்துவந்த இந்த பாதையை, இந்த வளர்ச்சியை, முன்னேற்றத்தை, வரலாற்று உண்மையை, இப்போது இருக்கும் இளைஞர்களிடம் நாம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

( அய்யா ஜெயரஞ்சன் அவர்கள் கூறும் இந்த சமுகமாற்றத்திற்கு காரணமான இயக்கம் திராவிடர் இயக்கம், தந்தை பெரியார், அதனையொற்றி, திராவிடசித்தாந்தத்தை பின்பற்றி அரசியலுக்கு வந்த திராவிடக்கட்சிகள் , முக்கியமாக திராவிட முன்னேற்ற கழகம் என்பது நம்மைப்போன்றோர்க்கு தெரியும். ஆனால், இந்த உண்மையை, தமிழக அரசியல் வரலாற்றை இப்போதிருக்கும் தலைமுறையினருக்கு சொல்லிப்புரிய வைக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமையாகும்.)

கருத்துகள் இல்லை: