சனி, 30 மே, 2020

12 வயதில் குடும்பத்தைச் சுமக்கும் தஞ்சை சிறுவன்.. வலிக்குப் பயந்தா குடும்பமே பட்டினி கிடக்குமே

வியாபாரம் செய்யும் விஷ்ணுvikatan.com - கே.குணசீலன் : “கடந்த ஒரு மாதமா இந்த வியாபாரம் செய்யிறேன். ஸ்கூல் திறந்ததும் படிக்கப் போய்டுவேன். அப்ப அம்மா என்ன செய்யப் போறாங்கன்னு தெரியலை…”
தஞ்சாவூரில் கொரோனா லாக்டெளனால் வருமானமின்றி முடங்கிய தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக 12 வயது சிறுவன் தினமும் பத்து கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா வியாபாரம் செய்து வருகிறார். தஞ்சாவூர், மானோஜிப்பட்டி அருகேயுள்ள உப்பரிகை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இவரின் மனைவி சுமதி. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகள், 6-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட வரதராஜனால் சில வருடங்களாகவே வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் வறுமையில் தவித்துள்ளது. இதையடுத்து, அவரின் மனைவி சுமதி வீட்டிலிருந்தபடியே நூற்கண்டு தயாரிக்கும் வேலை செய்து வந்தார். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் பிள்ளைகளையும் கணவரையும் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா லாக்டெளன் சுமதியைக் கடுமையாகப் பாதித்தது. ஒருபக்கம் முடங்கிக்கிடக்கும் கணவர்… மறுபக்கம் மூன்று பிள்ளைகள் என பரிதவித்தபடி இருந்துள்ளார்.



பலகாரம்
பலகாரம்
அம்மாவின் தவிப்பைத் தாங்கமுடியாத மகன் விஷ்ணு, `நான் வேலைக்குப் போய் உங்களைப் பார்த்துக்குறேம்மா’ எனச் சொல்ல அப்படியே மகனை வாரி அணைத்துக் கொண்டுள்ளார் சுமதி. `நீ வேலைக்குப் போக வேண்டாம்… அம்மா வடை, போண்டா சுட்டுத் தர்றேன்… நீ போய் வித்துட்டு வர்றியா…’ என சுமதி கேட்க `சரிம்மா’ என்று கூறியுள்ளார் விஷ்ணு.




பின்னர் அவர் தினமும் வடை, போண்டா சுட்டுக் கொடுக்க, அதோடு இன்னொரு கடையில் கொஞ்சம் சம்சாவும் வாங்கிக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று அவற்றை விற்று வருகிறார் விஷ்ணு. இதில் தினமும் நூறு ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதைக்கொண்டுதான் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சுமதி குடும்பத்தை நடத்தி வருகிறார்.




விஷ்ணுவிடம் பேசினோம். “அம்மாவோட வருமானம்தான்… திடீர்ன்னு லாக்டெளன் போட்டதால அம்மாவுக்கு வேலை இல்லாமப்போச்சு. நாலு பேரு சாப்பிட்டாகணுமே… எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சிருச்சுல்ல… அதான் கிளம்பிட்டேன். அம்மா பலகாரம் சுட்டுக் கொடுப்பாங்க. நான் சைக்கிளில் பத்து கிலோ மீட்டர் வரை எடுத்துக்கிட்டுப்போய் வித்துட்டு வருவேன். காலை எட்டு மணிக்குக் கிளம்பினா மதியத்துக்கு மேலதான் வீடு திரும்புவேன். எனக்காக அம்மா தவிப்போடு காத்துக்கிட்டிருக்கும். சிலநாள் கொண்டுபோற எல்லா பலகாரமும் வித்துடும். சில நாள் அப்படியே இருக்கும். அந்த சமயத்தில அம்மாவை நெனச்சு அழுகையா வரும்.




வடை, சம்சான்னு கத்திக்கிட்டே போறதால தொண்டை எரியும். சைக்கிள் மிதிக்கிறதால கால்களும் பயங்கர வலியா இருக்கும் அதையெல்லாம் யோசிக்க முடியாது. குடும்பம் பட்டினி கிடக்குமேங்கிற நினைப்பு ஓடவைக்கும். கடந்த ஒரு மாதமா இந்த வியாபாரம் செய்யிறேன். ஸ்கூல் திறந்ததும் படிக்கப் போய்டுவேன். அப்ப அம்மா என்ன செய்யப் போறாங்கன்னு தெரியலை…” எனச் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பரபரப்பாக கிளம்புகிறார் விஷ்ணு.




சுமதியிடம் பேசினோம்.
“ஏதோ வர்ற காசை வைத்து வாழ்க்கையை ஓட்டுனோம். கொரோனா ரூபத்தில அதிலயும் மண் விழுந்துருச்சு. என் மகன் பலகாரம் விற்று அதில் கிடைக்கக் கூடிய வருமானத்தில்தான் எங்க வீட்டில் அடுப்பு எரியுது. ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் என் புள்ளை இந்தக் குடும்பத்தையே சுமக்குறான்…” என்று கண்கலங்குகிறார் சுமதி!
vikatan.com

கருத்துகள் இல்லை: