சனி, 30 மே, 2020

அமெரிக்காவில் நிறவெறி கலவரம் .. நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் நகரங்களில் .


BBC : அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
“என்னால் மூச்சு விட முடியவில்லை” – ஜார்ஜ் ஃப்ளாய்ட்
அந்தக் காணொளியில் போலீஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவருக்கு வயது 46.
அந்தக் காணொளியில் ஜார்ஜ் “என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்” என்று கூறுகிறார்.
அமெரிக்காவில் கருப்பினர்த்தவர்கள் போலீஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீஸாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்
ஜார்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூழ்ந்தனர் போராட்டக்காரர்கள். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு போலீஸார் கலைக்க முயன்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மினியோபொலிஸின் மேயர் ஃப்ரே புதன்கிழமையன்று, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கிரிமினல் குற்றம் பதியப்பட வேண்டும் என தெரிவித்தார். காணொளியில் தெரிந்த போலீஸ் நபர் ஒருவரும் மற்ற மூன்று போலீஸ் நபர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், “எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று தெரிவித்தார்.
கண்ணீர் மல்கப் பேசிய அவர், “பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற போலீஸார் கைது செய்யப்பட வேண்டும்” என்றும் “கருப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்,” என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சிஎன்என் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒமர் ஜிமென்ஸ் மற்றும் அவரின் கேமரா மேன் மின்னெசோட்டா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸார் கூறுவது என்ன?
உணவகம் ஒன்றில் கள்ளப்பணம் செலுத்தப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க போலீஸார் அவரை தொடர்புகொண்டனர்.
போலீஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வந்த காணொளியில் அந்த மோதல் எப்படி தொடங்கியது என்ற தகவல் இல்லை.
டிரம்பின் ட்விட்டர் பதிவு
இந்நிலையில் மினியாபொலிஸில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “மினியாபொலிஸ் போன்ற சிறந்த அமெரிக்க நகரில் இவ்வாறு நடைபெறவதை நான் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டேன். தீவிர இடதுசாரி கொள்கையுடைய மேயர் ஃப்ரே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேசியப் படையை அனுப்பி நடவடிக்கை எடுப்பேன்.
ரவுடிகள் ஜார்ஜ்ஜை அவமதிக்கின்றனர். நான் அதை நடக்க விட மாட்டேன். ஆளுநர் டிம் வால்சிடம் பேசியுள்ளேன். அவருடன் ராணுவம் துணை நிற்கும் என்று தெரிவித்தேன். ஏதாவது பிரச்சனையென்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம். ஆனால் கொள்ளையடிப்பது தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு நடக்கும்” என பதிவிட்டுள்ளார் டிரம்ப்.
ஆனால் இந்த ட்விட்டர் பதிவு “வன்முறையை தூண்டுவதாக” உள்ளது என்ற எச்சரிக்கை வாசகங்களைக் கொண்டு அந்த பதிவை ட்விட்டர் மறைத்துள்ளது. எனினும், அப்பதிவு இன்னும் ட்விட்டரால் நீக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை: