சனி, 5 ஜனவரி, 2019

குழந்தையின் கண்முன்னே பயணியை உதைத்த அரசுப்பேருந்து நடத்துனர்..விடியோ மகளிர் ஆணையம் விளக்கம் கேட்பு


நடத்துனர் குழந்தையின் முன்னே தாயை தாக்கும் காணொளி காட்சி 
THE HINDU TAMIL: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பேருந்து நிலையத்தில் 3 வயது குழந்தையின் கண்முன்னே அரசுப்பேருந்து நடத்துனர்  பெண் பயணியை தாக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
இன்று காலைமுதல் ஒரு காணொளி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதில் பேருந்து நிலையம் ஒன்றில் சுற்றிலும் பயணிகள் வேடிக்கைப்பார்க்க, பேருந்தைவிட்டு 3 வயது பெண் குழந்தையுடன் இறக்கப்பட்ட கிராமத்துப் பெண் பயணி ஒருவர் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பதிலுக்கு நடத்துனர் அவரை மிரட்டும் தொனியில் திட்டுகிறார்.

இதைப்பார்த்து பயந்துப்போன பெண் பயணியின் குழந்தை பயத்துடன் தாயின் கையைப்பிடித்து வாம்மா போகலாம் என இழுக்கிறது. பெண் பயணி நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நேரம் திடீரென நடத்துனர் அந்த பெண் பயணியை கன்னத்தில் அறைகிறார்.
இதில் அவர் கீழே விழ குழந்தை பயந்துபோய் வீரிட்டு அழுகிறது. பயணிகள் அதிர்ச்சியுடன் பார்க்க அதைப்பற்றி கவலைப்படாத நடத்துனர் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணைத்தாக்க இதைப்பார்த்து பொறுக்க முடியாத ஆண் பயணி ஒருவர் இடையில் புகுந்து நடத்துனரை தள்ளிவிட்டு அடிக்கப்போகிறார்.
ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத அந்த நடத்துனர் தனது வீரத்தை காட்டும் வகையில் அந்தப்பெண்ணை எட்டி உதைக்கிறார். இதைப்பார்த்து அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். யாரும் அவர்களை தடுக்க வரவில்லை. அடிவாங்கிய அந்தப்பெண் பயணி தனது குழந்தையை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர நடத்துனர் அவரை மிரட்டுகிறார்.
அப்போது அங்குள்ளவர்கள் நடத்துனரை திட்டுகின்றனர். பொம்பளையைபோய் அடிக்கிறாயே என ஒருவர் திட்ட அங்குள்ள பெண்கள் நீங்கள் இத்தனைபேர் ஆண்கள் இருக்கிறீர்கள் ஒருத்தன் பொம்பளையைப்போட்டு இந்த அடி அடிக்கிறான் கேட்கிறீர்களா என திட்டுகிறார். இவ்வளவுக்கும் பின்னணியில் அந்தப்பெண்ணின் குழந்தையின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இதை அங்குள்ள ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். அது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. சம்பவம் நடந்த இடம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அரசுப்பேருந்து நிலையம் என்பதும் அந்த பெண் பயணியின் பெயர் லட்சுமி என்பதும், அவரை தாக்கிய நடத்துனர் பெயர் பூமிநாதன் என்பதும் தெரியவந்துள்ளது. பேருந்தில் கும்பகோணம் பணிமனை என போட்டுள்ளது.
தற்போது இந்த காணொளி வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதுகுறித்து செய்தி அறிந்த மாநில மகளிர் ஆணையம் இதுகுறித்து மாவட்டத்திலுள்ள மகளிர் ஆணையத்திடம் தகவல் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: