யாழிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு பதிலளித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கவில்லை. அதனால் எந்தவிதமான டீல் நடந்தது என்றோ , அல்லது டீல் நடந்ததா ? என்பது பற்றி எனக்கு  தனிப்பட்ட அறிவு கிடையாது, ஆனாலும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த உண்மை இருக்கின்றது.
அது என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்திருந்தனர்.

அதனை மீறி ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் அதனை மீறியமைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பின்னரே தமிழ் அரசியல் கட்சிகள் அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் இணங்கினார்கள்.
விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வரும் போது அதன் இடைநடுவில் செயற்பட்ட நோர்வே போன்ற நாடுகள் அவர்களுக்கும் ஜனநாயக சக்தி இருப்பது அவசியம் என வலியுறுத்தி இருந்தனர். அவ்வாறு இருந்தாலே சர்வதேச நாடுகளுடன் பேச முடியும், இலங்கை அரசாங்கத்துடன் பேசி சில இணக்க பாடுகளை ஏற்படுத்த முடியும் என்ற ஆலோசனைகளை விடுதலைப்புலிகளுக்கு பல நாடுகள் கொடுத்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் ,  புலிகளினதும் தேவைப்பாடுகளும் சந்தித்தன. அதனாலேயே ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கான அனுமதி விடுதலைப்புலிகளால் கொடுக்கப்பட்டது. என தெரிவித்தார்
virakesari.lk