
vikatan.com- துரை.வேம்பையன் - RAJAMURUGAN N" :
கரூர் மாவட்டம்,குளித்தலை பகுதியில் சில நாள்களாக காலை எட்டு மணி வரை கடும் பனி பெய்வதால்,ஊட்டி,கொடைக்கானல் போல் ஆகிவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள். வாகனங்களில் செல்பவர்களுக்கு இதனால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை நகராட்சி. காவிரியை ஒட்டி
அமைந்துள்ள இந்த நகரம்,திருச்சி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
பொதுவாக,கரூர் மாவட்டம் வறட்சி மிகுந்த மாவட்டமாக கருதப்படுகிறது.
கோடைக்காலங்களில் பாலைவனங்களில் அடிக்கும் வெயிலை போல் இங்கே கடும்
வெப்பத்தை உமிழும். தமிழகத்தில் அதிகமாக வேலூரில்தான் வெயில் கொளுத்தும்
என்று சொல்வார்கள். ஆனால்,கடந்த இரண்டு வருடங்களாக கரூர்
மாவட்டம்,க.பரமத்தி,கடவூர் பகுதிகளில் அதிக வெயில் அடித்தது. 100 டிகிரி
செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில்,மார்கழி மாதம் தொடங்கி குளிர்காலம் தொடங்கியது. பனிப்பொழிவு
இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக பொழிய தொடங்கி இருக்கிறது. அதுவும்
குறிப்பாக,கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதில் கடந்த சில நாள்களாக
கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.


இதுபற்றி,குளித்தலை
பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற இளைஞரிடம் பேசினோம். “கடந்த சில நாள்களாக
குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடுமையான பனிப்பொழிவு
ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில்,எதிரே வரும் ஆள் யாரென்று தெரியாத
அளவிற்கு ஏதோ வெள்ளைப் படுதா போட்டு மறைத்தது போல் பனி பொழிகிறது.
குளித்தலை பேருந்து நிலையம், முசிறி பாலம், மணப்பாறை சாலை, ரயில்வே
ஸ்டேஷன், பைபாஸ் சாலை என்று பல இடங்களிலும் பனி கடுமையாகப் பொழிகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு பனி பொழிவதால்,மக்கள் குளித்தலை பகுதியே ஏதோ ஊட்டி,
கொடைக்கானல் போல் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். காலை எட்டு மணி வரை இப்படி
பனி பெய்கிறது. அதேபோல்,மாலை ஐந்து மணிக்கெல்லாம் பனி பெய்ய ஆரம்பித்து,
ஆறு மணிக்கெல்லாம் பொழுது இருட்டாகிவிடுகிறது.
இதனால்,இரவு, அதிகாலை மற்றும் காலை வேளைகளில் வாகனங்களில் செல்வோர்
எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதிப்படுகின்றனர். வாகனங்களின் முகப்பு
விளக்கை எரியவிட்டப்படி பயணிக்கிறார்கள். அதேபோல், குளித்தலை பகுதியில்
எல்லோரும் குளிரைத் தடுக்கும் ஆடைகளை அணிந்தபடி செல்ல வேண்டி இருக்கிறது.
அதிகாலையில் வாக்கிங் சென்றவர்கள், இந்த கடுங்குளிருக்கு பயந்து காலை எட்டு
மணிக்கு மேல் செல்கின்றனர். பைபாஸ் சாலையில் வாகனங்களும்,கனரக
வாகனங்களும்,பேருந்துகளும் பனிப்பொழிவுக்கு பயந்து மெதுவாக பயணிக்கும்
சூழல் உள்ளது. ஹாட்டான ஊராக இருந்த எங்க பகுதியில் வரலாறு காணாத பனி
பொழிவதால்,மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது என்னவோ உண்மைதான்.

ஆனால்,மனதுக்கும்,கண்களுக்கும் இந்த பனிப்பொழிவு இதத்தையே தருகிறது.
‘மார்கழி பூவே;மார்கழி பூவே’ன்னு எங்களை பாடல் வரிகளையே முணுமுணுக்கவே
வைக்கிறது. காவிரிக்கரையில் நின்று அதிகாலையில் பார்த்தால்,
சுவிட்சர்லாந்தில் இருப்பதுபோல் இருக்கிறது. மொத்தத்தில் இந்த பனிப்பொழிவு
எங்களுக்கு தொல்லையான சுகம்தான்;ஆனந்த தொல்லைதான்” என்று சிலாகித்தார்.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக