செவ்வாய், 1 ஜனவரி, 2019

தாக்கரே திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதியன்று ? தாக்கரே தென்னிந்தியர்களை ஏன் வெறுத்தார் ?

லுங்கியை தூக்கி, அடித்து விரட்டுவோம்' என்ற வசனம் மாராட்டி டிரெய்லரில் இடம் பெற்றுள்ளதுதிரைப்படத்தில் பால் தாக்கரேவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளனbbc :‘தாக்கரே’ திரைப்பட டிரெய்லரை பார்த்த தென்னிந்தியாவின் பிரபல நடிகர் சித்தார்த், ‘வெறுப்புணர்வு பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார். திரைப்படத்தின் டிரெய்லரில் தென்னிந்தியர்களுக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றிருப்பதை அடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சித்தார்த் தனது டிவிட்டர் செய்தியில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ‘தாக்கரே’ திரைப்படத்தில், பால் தாக்கரேவின் வேடத்தில் நவாஜுதீன் சித்திகி நடித்துள்ளார். டிரெய்லரில், ‘லுங்கியை தூக்கி, அடித்து விரட்டுவோம்!’ என்பது போன்ற தென்னிந்தியர்களை தாக்கும் வசவுச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. திரைப்படத்தின் மாராத்தி டிரெய்லரில் இருக்கும் இந்த வசனம், இந்தி மொழி டிரெய்லரில் இடம் பெறவில்லை.
பால் தாக்கரேவுக்கு தென்னிந்தியர்களை பிடிக்காது என்பது உண்மையான விஷயம் என்பதால், அந்த காட்சி உண்மையானது, திரித்து கூறப்படவில்லை என்று சொன்னாலும், டிரெய்லரில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் அனைத்துமே உண்மையா? என்ற கேள்வி எழுகிறது.


படத்தின் காப்புரிமை VIACOM
திரைப்படத்தின் டிரெய்லரில் பால் தாக்கரேவின் வாழ்க்கையின் சில முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சரித்திரத்தின் பதிவுகளில் இருந்து சில சம்பவங்கள் காட்சிப்படுத்தப்படும்போது, அதுவும் அவை சமகாலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் என்னும்போது, அதன் உண்மைத்தன்மையும், பசப்புத்தனமும் பேசுபொருளாகிறது.
சிவசேனா மற்றும் பால் தாக்கரேவை பற்றி புத்தகம் எழுதியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் சுஜாதா ஆனந்தனிடம், தாக்கரேவின் திரைப்பட டிரெய்லரில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து உரையாடினோம்.

படத்தின் காப்புரிமை VIACOM
தென்னிந்தியர்களை தாக்கரே வெறுத்தது ஏன்?
முதலில் நடிகர் சித்தார்த்தின் விமர்சனத்தை பார்ப்போம். பால் தாக்கரே, தென்னிந்தியர்களுக்கு எதிரானவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்பதால், தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் ஒருவர், அந்த வெறுப்பை ஆவணப்படுத்துவதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் என்று கருதலாம்.
சுஜாதா ஆனந்தனின் கருத்துப்படி, 1966ஆம் ஆண்டில் சிவசேனா நிறுவப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், ‘த ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ என்ற பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக பணிபுரிந்தார் பால் தாக்கரே. அந்த பத்திரிகையில், பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணும் பணிபுரிந்தார், அவர் கம்யூனிச கருத்தியலை பின்பற்றியவர்.
பத்திரிகைக்கு இவர்கள் இருவரும் கார்ட்டூன்களை அனுப்பும்போது, ஆர்.கே.லக்ஷ்மணின் கார்ட்டூனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது, பொதுவாக லஷ்மணின் படைப்புகளே பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும்.
அந்த காலகட்டத்தில் பத்திரிகைத் துறையில் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால், தான் ஓரங்கட்டப்படுவதாய் தாக்கரே கருதினார். ஆர்.கே.லக்ஷ்மண், தென்னிந்தியர் என்பதால்தான் அவருக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக தாக்கரேவுக்கு மனத்தாங்கல் இருந்தது.
1960-ல் தனது சகோதரனுடன் இணைந்து ‘மார்மிக்’ என்ற கார்ட்டூன் வாரப் பத்திரிகையைத் துவங்கினார் பால் தாக்கரே.

1992 வன்முறைகள் மற்றும் பாபர் மசூதி விவகாரங்களில் நீதிமன்ற விசாரணைக்கு பால் தாக்கரே சென்றாரா?படத்தின் காப்புரிமை VIACOM
பால் தாக்கரே நீதிமன்றத்திற்கு சென்றதுண்டா?
டிரெய்லரில் வேறுசில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. நீதிமன்ற காட்சிகளை எடுத்துக் கொண்டால், 1992இல் மும்பையில் நடைபெற்ற இந்து-முஸ்லிம் கலவரங்களில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை தாக்கரே மறுப்பதாக காட்டப்படுகிறது. அதேபோல், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தாக்கரே ஆஜராவது போலவும் காட்சி அமைக்கபப்ட்டுள்ளது.
உண்மையிலுமே தாக்கரே நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறாரா என்று சுஜாதா ஆனந்தனிடம் கேட்டோம். பால் தாக்கரே நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதாக தனக்கு நினைவில் இல்லை என்று சொல்கிறார், சிவசேனா மற்றும் பால் தாக்கரே பற்றிய ‘சாம்ராட்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் சுஜாதா ஆனந்தன்.

1992 மும்பை கலவரம் மற்றும் பாபர் மசூதி வழக்குகளில் பால் தாக்கரே மீது குற்றம் சாட்டப்பட்டிருந்ததுபடத்தின் காப்புரிமை VIACOM
மும்பை உயர் நீதிமன்றத்தில், மும்பை கலவர வழக்கு நடைபெற்றபோது பால் தாக்கரே வந்ததே கிடையாது. ஆனால் அவருக்கு பதிலாக, சிவசேனா கட்சியின் மதுகர் சர்போட்தா மற்றும் மனோஹர் ஜோஷி இருவரும் தாக்கரேவின் சார்பில் ஆஜராவார்கள்.
பாபர் மசூதி வழக்கு பற்றி உண்மையில் பால் தாக்கரேவுக்கு அச்சம் இருந்தது. அயோத்தியாவில் இருந்து அவருக்கு சம்மன் வந்தபோது, அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று பலவிதமான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார்.
இந்த வழக்கிற்காகவும் பால் தாக்கரே நீதிமன்றத்திற்கு சென்றதாக தனக்கு நினைவில்லை என்கிறார் சுஜாதா. தாக்கரேவின் வழக்கறிஞர்களே விவகாரத்தை கவனித்துக்கொள்ள, அறிக்கைகள் வெளியிட்டும், ஊடகங்கள் மூலமாகவுமே தாக்கரே தன் மீதான வழக்குகளைப் பற்றி பேசினார் என்கிறார் சுஜாதா.

2004இல் ஜாவேத் மியாந்தாதை அழைத்து, தனது மகனுக்கு ஜாவேதின் கையெழுத்தை வாங்கிக் கொடுத்தார்படத்தின் காப்புரிமை VIACOM
ஜாவீத் மியாந்திடம் பால் தாக்கரே இதை சொல்லவில்லை!
திரைப்பட டிரெயிலரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியாந்ததின் விளையாட்டுத் திறமையை பாராட்டுவதோடு, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் இளைஞர்களைப் பற்றியும் தாக்கரே வேடத்தை ஏற்றிருக்கும் நவாஜுதின் பேசுகிறார்.
இந்த காட்சியின் உண்மைத்தன்மையை நீங்களே தெரிந்துக் கொள்ளமுடியும். ஜாவீத் மியாந்தத் மற்றும் பால் தாக்கரே பொதுஇடத்தில் பேசிக் கொண்டனர். அந்த சமயத்தில் ஒருமுறைகூட பாகிஸ்தானுக்கு எதிராக பால் தாக்கரே பேசவில்லை; நாட்டு இளைஞர்கள் பற்றி குறிப்பிடவும் இல்லை.
2004இல் ஜாவீத் மியாந்ததை தனது வீட்டிற்கு அழைத்த பால் தாக்கரே, தனது மகனுக்கு ஜாவீதின் கையெழுத்தை வாங்கிக் கொடுத்தார். தான் விளையாட்டுக்கு எதிரி இல்லை என்று தெரிவித்தார். பாகிஸ்தான் மக்களும் அமைதியையே விரும்புகின்றனர், ஆனால் அரசியல்தான் அனைத்தையும் மோசமாக்கி வைத்திருக்கிறது என்று தாக்கரே சொன்னார்.
ஜாவீதின் விளையாடும் பாணியைப் பற்றி தாக்கரே பாராட்டுவதுபோல திரைப்பட டிரெய்லரில் காணப்படுகிறது.
இந்த காட்சியில் இருவரும் தனியறையில் அமர்ந்திருந்தபோது உரையாடுவதாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், இதன் உண்மைத்தன்மையைப் பற்றி சொல்வது கடினம் என்கிறார் சுஜாதா ஆனந்தன். ஆனால் பொதுவெளியில் இருவரும் சந்தித்துக் கொண்டபோது, தாக்கரே ஜாவீத் மியாந்ததை பாராட்டினார், வேறு எதுவுமே சொல்லவில்லை என்கிறார் சுஜாதா.

1995 சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் பலர் பால் தாக்கரேவின் கட்சிக்கு வாக்களித்தார்கள்படத்தின் காப்புரிமை Viacom
முஸ்லிம்கள் மீது தாக்கரேவுக்கு வெறுப்பு ஏன்?
முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பால் தாக்கரே வெளிப்படையாக காட்டினாலும், அது பாகிஸ்தான் முஸ்லிம்களின் மீதான வெறுப்பு, இந்திய முஸ்லிம் மக்களின் மீதானது அல்ல என்று அவர் 1995க்கு பிறகு தெளிவுபடுத்தினார்.
1995 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சிக்கு பல முஸ்லிம்கள் வாக்களித்திருப்பதை கண்ட தாக்கரேவே வியப்படைந்தார். அதற்கு காரணம், பாபர் மசூதி இடிக்கப்பட்டிருந்த அந்த சமயத்தில், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என முஸ்லிம் மக்கள் கருதினார்கள். அதோடு அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட வெறுப்பும் இந்த மாற்றத்தை நிகழ்த்தியது.
எனவே தங்களுக்கு எதிராக செயல்பட்டாலும் கூட பாதுகாப்புக்கு சிவசேனாவை விட்டால் தங்களுக்கு வேறு வழியில்லை என்ற மனோபாவத்திற்கு முஸ்லிம் மக்கள் வந்திருந்தனர். இது கேட்பதற்கு நம்பமுடியாததாக இருந்தாலும், நிதர்சனமாக நடைபெற்ற மாற்றம்.

1971இல் வெளியான 'தேரே மேரே சப்னே' என்ற திரைப்படம் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டதுபடத்தின் காப்புரிமை viacom
நடிகர் தேவானந்துடன் நட்பு இருந்தாலும் அவரது திரைப்பட பதாகைகளை அகற்றியது ஏன்?
தாக்கரே திரைப்பட டிரெயிலரில் தேவானந்தின் ‘தேரே மேரே சப்னே’ என்ற திரைப்பட பதாகைகளை அகற்றிவிட்டு, மாராட்டிய திரைப்படம் சோகாட்யாவின் பதாகையை பால் தாக்கரே ஒட்டுவதுபோல காட்சி இடம் பெற்றுள்ளது.
கோஹினூர் திரையரங்கில் நடந்த இந்த விவகாரம், நட்பைத் தாண்டி மாராட்டிய மொழியின் மீதான பால் தாக்கரேயின் அழுத்தமான பற்றினை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.
சோகாட்யா திரைப்படம் வெற்றிப்படமானது. தேவானந்துக்கும் பால் தாக்கரேவுக்குமான நட்பு மிகவும் ஆழமானது. கார்ட்டூனிஸ்டாக பால் தாக்கரே பணியாற்றிய சமயத்திலேயே இருவருக்கும் இடையில் நட்பு பூத்தது. இருவரும் ஒன்றாக உணவு அருந்துவதும், ஒருவரின் வீட்டுக்கு மற்றவர் செல்வதும் இயல்பான விஷயமாக இருந்தது.
இருந்தபோதிலும், டிரெய்லரில் காட்டப்பட்டிருக்கும் காட்சி உண்மையானதுதான். 1971ஆம் ஆண்டு கோஹினூர் தியேட்டரில் திரையிடப்பட்டிருந்த தேவானந்தின் திரைப்படத்தை தூக்கிவிட்டு, வேறு திரைப்படத்தை திரையிடச் செய்வது என்பது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருந்த சிவசேனா என்ற கட்சியின் பலத்தை காட்டுவதாக இருந்தது.
திரைப்படத்தின் டிரெய்லர் இரு மொழிகளில் வெளியாகி, அதில் இந்தி மொழியில் வேறாகவும், மாராத்தியில் வேறாகவும் கட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி சர்ச்சைகள் சூடுபிடித்துள்ளது என்னும்போது, ஜனவரி 25ஆம் தேதியன்று முழு திரைப்படம் வெளியாகும்போது அரசியலில் இன்னும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
bbc

கருத்துகள் இல்லை: