சனி, 5 ஜனவரி, 2019

பெரியார் 70 வயதில் ஏன் திருமணம்...? அதுவும் மகளை ஒத்த வயது மணியம்மையை?

தேன்மொழி திராவிடர்கழகம் : மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70
வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்? மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?
முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பேத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.
பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70; மணியம்மையின் வயது 30. இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே. இதில் யாருடையக் கட்டாயமும் இருக்க வில்லை.
பெரியாரிடம் வருவதற்கு முன்பே மணியம்மையார் தன் வீட்டில் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று முடிவுடன்தான் இருந்திருக்கிறார். பெரியாரிடம் வந்து சேர்ந்தப் பின்பும் அவருக்கு மணம் முடிக்க முயற்சிகள் செய்யப்பட்ட போது இயக்கப் பணியே வேண்டும், திருமணம் வேண்டாம் என்ற முடிவையே முன் வைத்தார்.

பழைய இந்துச் சட்டத்தின் படி பெண் மகள்களுக்குச் சட்டப்படிச் சொத்துரிமை இல்லை. 1956-க்கு முன் பழைய இந்து சட்டத்தின் படி பெண்ணுக்குத் தகப்பன் வீட்டில் தங்கும் உரிமை + சீதனம் மட்டுமே !. எனவே மணியம்மையை மகளாய்த் தத்தெடுத்தாலும் பெரியாரின் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை. பெரியார் 28.6.1949 அன்று திராவிடர் கழகத்தின் சொத்துக்கள் பற்றி ஒரு அறிக்கை எழுதுகிறார்.
"எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமுமாகையால் நான் 5,6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கைக் கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் பற்றும், கவலையும் கொண்டு நடந்தது வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்பிடியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும், தனிப்பட்டத் தன்மையையும் சேர்த்து மற்றும் 4,5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுக்காப்புக் குமாகச் சேர்த்து ஒரு ட்ரஸ்ட்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்பத்திரமும் எழுதப்பட்டு வருகிறது." (28.6.1949 - விடுதலை) ஆக, மணியம்மையை சட்டப்படி வாரிசாக்க மட்டுமே பெரியார் முடிவு செய்கிறார். இந்தத் திருமணம் ஒரு சட்டப் பாதுக்காப்பு
மட்டுமே என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.
"மணியம்மை வாரிசு என்பது, டிரஸ்ட்டு சம்பந்த உரிமை என்பதும், மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதுமல்ல ! ஆதனால் இந்தத் திருமணம், பொருத்தத்தை அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமும் அல்ல. ஏன் ? பொருந்தாதத் திருமணமும் அல்ல, மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்பந்தமோ, அவருக்கு இஷ்டமில்லாத துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அதாவது வாழ்நாள் அடிமைத்தன்மைக்கு ஆளானதோ ஆனத் திருமணம் அல்ல." (7.7. 1949 - விடுதலை) இதிலிருந்து பெரியார் மணியம்மைக்கு இயக்கத்தைத் தாரை வார்க்கவில்லை என்பது நன்கு தெரிகிறது. அன்றைய/இன்றைய விமர்சனங்கள் மணியம்மையைத் தலைவராக ஏற்கவேண்டி வரும் என்றும் பெரியார் மணியம்மையைத் தவிர வேறு யாரையும் நம்பவில்லை என்று புகார் கூறினார். பெரியார் எந்த இடத்திலும் மணியம்மையாரை இயக்கத் தலைமைக்குக் கொண்டு வருவதாகச் சொல்லவில்லை.அத்தோடு அவர் மணியம்மை + 4/5 பேர் கொண்டு குழுவை டிரஸ்ட்டாக அமைப்பது பற்றியே சொல்கிறார். வேறு யாரையும் நம்பாதவர் எப்பிடி இதைச் செய்ய முடியும்? அத்தோடு பெரியார்-மணியம்மை திருமணம் என்ற தலைப்பில் 16.7.1949 அன்று குடி அரசில் எழுதிய அறிக்கையில் பெரியார் கூறுகிறார், " பெரியார் தலைமைப் பதவியை மனியம்மைக்குச் சூட்டுவதற்கு மணியம்மையை மனைவியாகவோ, வாரிசாகவோ பெற வேண்டிய அவசியம் என்ன?" - (16.7.1949 - குடி அரசு)
அன்று பெரியாருடன் இருந்தவர்களில் ஒருவரான
தி.பொ.வேதாசலம் பெரியாரின் திருமணம் பற்றிக் கூறுவது இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதிலைத் தரும்.
"ஒரு மனிதன் எதற்காக மணம் செய்கிறான்?
1. தனக்கு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்ளவும், மற்ற உதவிகள் புரியவும்.
2. பிள்ளைப் பேறு கருதி
3. தன் காம இச்சைக்கு உதவியாக
மேற்சொன்ன காரணங்கள் பெரியார் செய்து கொள்ளும் திருமணத்திற்கு கொஞ்சமும் பொருந்தாது. மணியம்மை கடந்த 6 வருடங்களாக உணவு சமைத்தும், மற்ற பணிகள் ஆற்றியும் வருகிறார். பிள்ளைப் பேறு கருதியிருக்க முடியாது. காம இச்சைக்கு மணப் பதிவு முக்கியமல்ல. " (9.7.1949 - விடுதலை)
நாகம்மையார் மறைந்தது 1933-ல். அப்போது பெரியார்க்கு வயது 55. அப்போதே பெரியாரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரின் தாயார் உட்படப் பலரும் வலியிறுத்தினர். பெரியார் அதை மறுத்துவிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதி காணத் தொண்டு செய்ய அது தடையாய் இருக்குமென எண்ணினார். பெரியார் அதைக் கேட்டு திருமணம் செய்திருந்தாலோ, மணியம்மை அப்போதே இருந்து பெரியாரை திருமணம் செய்து இருந்தால் இத்தனை விமர்சனம் வந்திருக்காது. வேதாசலம் கூறுவது போல இது வெறும் உடல் இச்சையைத் தணிக்கச் செய்தத் திருமணமும் அல்ல. அந்நாளைய பெரிய மனிதர்கள் மத்தியில் பலதாரமணம் பெரிய விசயமே இல்லை. அத்தோடு மணியம்மையாரே பெரியாருடன் தனிப் பயணங்கள் பல சென்றிருக்கிறார். அது பற்றிய அறிக்கைகள் விடுதலையில் காணக் கிடைக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் இது உடல் இச்சையைத் தீர்க்கும் திருமணம் இல்லை என்பதும், மணியம்மையார்க்கு இயக்கத்தைக் கொடுக்க இல்லை என்பதும், பெரியாரின் சொத்துக்களை, இன்னபிற விசயங்களை சட்டப்படிப் பாதுகாக்க ஒரு வாரிசு ஏற்படுத்த மட்டுமே என்பது உறுதியாகிறது.
இதைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் பலர்கழகத்தை விட்டு வெளியேறி தி.மு.க கண்டது வரலாறு. பின்னர் ஒருநாள் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மணியம்மையார் முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, " நாங்கள் கட்சி அரசியலுக்கு வர விரும்பினோம். அதை பெரியார்-மணியம்மை திருமணத்தை ஒரு சாக்காகக் காட்டி வெளியேறினோம்" என்று உண்மையைப் போட்டு உடைத்தார். 1967 தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெரியாரைச் சந்தித்த அண்ணா மணியம்மையாரை விமர்சித்தற்கு மன்னிப்புக் கேட்டு அவரின் அருந்தொண்டை பாராட்டினார். பெரியாரின் நீண்ட ஆயுளுக்கு
மணியம்மையாரின் தொண்டே காரணம் என்றார்.
மணியம்மையார் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குயில் இதழில் எழுதிய தலையங்கமே மணியம்மையாரின் தொண்டுக்குச் சாட்சி.
"பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும்,
காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?
பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை." - (‘குயில்’ இதழ், 10.04.1960)
12) அனைவரையும் சுய மரியாதைத் திருமணம் செய்யச் சொன்ன பெரியார், மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்தது ஏன்?
மேலே சொன்னது போல பெரியார் - மணியம்மை திருமணமே ஒரு சட்டப் பாதுக்காப்பிற்குத்தான். 1967-ல் தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்றப் பின்னரே அண்ணா சுய மரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினார். அதற்கு முன் வரை இந்துத் திருமணச் சட்டத்தின் படி சுய மரியாதைத் திருமணங்கள் செல்லாது. பெரியார் சட்டப்படி ஒரு வாரிசு அறிவிக்க வேண்டியதிருந்த காரணத்தால், ஞானம் அம்மையார் சாட்சிக் கையெழுத்துப் போட, பதிவாளர் முன்னிலையில் பார்ப்பனச் சடங்கு இன்றி மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
____________________________________________
"உன் மனைவி வேறு ஒரு ஆண்மகனை விரும்பினால் அதைத் தடுக்காதே" என்று பெரியார் கூறினாரா?
🙂 இல்லை ! பெரியாரின் எழுத்தைச் சரியாக படிக்காமல் இடையே இருந்து ஒரு வரியை மட்டும் எடுத்துப் போட்டுப் பரப்பபடும் அவதூறு இது. 1971 சனவரி,பெரியார் சேலத்தில் மாநாடு நடத்துறார். மாநாட்டுத் தலைப்பு.
'மூட நம்பிக்கை ஒழிப்பு ','கற்பு'. அதில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவில் இருக்கும் ‘‘மத உணர்ச்சியைப் புண்படுத்தும் சட்டத்தை எடுத்து விடவேண்டும்" என்பது முக்கியத் தீர்மானம். அது போலவே அரசுக்கு வேண்டுகோளாக பல தீர்மானங்கள் போடப்பட்டன. ஒரே ஒரு தீர்மானம் மட்டும் பொதுவான கருத்தாகச் சொல்லப்பட்டது. அந்தப் பொதுவான தீர்மானம் -> "ஒருவன் மனைவி என்பதனால் (அவனை விரும்பவில்லையானால்) மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது". பலதார மணமும், இளம் வயதுத் திருமணமும் நிரம்ப இருந்த காலத்தில் பெண்ணின் விருப்பமில்லாத் திருமணத்தில் வாழ வேண்டியக் கட்டாயம் இல்லை என்பதற்காக இயற்றப்பட்டத் தீர்மானம் அது. உடனே பெரியார் "மற்றவன் மனைவியை கடத்திக் கொண்டு போவது தவறில்லை’ என்று தீர்மானம் போட்டதாகத் திரித்து 'தி இந்து', 'தினமணி' போன்றவை எழுதின. அதற்கு பெரியார் மறுப்புத் தெரிவித்து விளக்கம் கொடுத்தார் பெரியார். அனால் அப்பத்திரிக்கைகள் பெரியார் அளித்த மறுப்பை வெளியிடவில்லை. பின் திராவிடர் கழகம் சார்பில் வழக்குப் போடப்பட்டது. இறுதியில் தி இந்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டது.
நன்றி:

கருத்துகள் இல்லை: