செவ்வாய், 6 நவம்பர், 2018

TNA - JVP தமிழ் தேசிய கூட்டணி, ஜேவிபி தலைவர்கள் சந்திப்பு- "ஜனநாயகத்துக்காக இணக்கம்"

BBC : இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தலைமையிலான ஜே.வி.பி. உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பங்கெடுத்தனர்.
பிரதமர் பதவியில் மாற்றம், அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக ஜே.வி.பி ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், மகிந்தவுக்கு எதிரான ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன் பின்னணியில் இன்று நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்க்கவோ, ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே ஜனநாயகத்திற்கு முரணான சதித் திட்டங்களை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பிலும், அதில் தலையீடு செய்வது தொடர்பிலும் இணக்கம் எட்டப்பட்டதாக சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் தெரிவித்தனர்.ஜே.வி.பி.க்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசினார்.
''ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும். அரசியலமைப்பை மீறி செயல்பட முடியாது. சமீத்தில் நடந்த விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை. பதவி நீக்கம், புதுப் பதவி நியமனம் இவை எல்லாம் அரசியலமைப்பிற்கு முரணாக நடந்துள்ளன. இது மக்களின் இறையாண்மையை இல்லாமல் செய்கிறது. ஜனநாயகத்தை இல்லாமல் செய்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை இயன்றளவு எதிர்க்க வேண்டியதும், தடுக்க வேண்டியதும் எங்களின் கடமை. மக்கள் சார்பாக நாங்கள் செய்ய வேண்டிய கடமை''.
''அந்தக் கடமையில் நாங்கள் தவறமாட்டோம். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நாங்கள் அறிகின்ற வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை கொடுத்து வாங்கப்படுகிறார்கள். இவ்விதமான செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்விதமான செயல்கள் தீவிரமடைந்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. அதனை நாங்கள் எதிர்க்கிறோம். அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.'' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: