செவ்வாய், 6 நவம்பர், 2018

கர்நாடகா இடைத் தேர்தல்: 5 தொகுதிகளில் 4 தொகுதிகளை காங்கிரஸ்-மஜத கூட்டணி கைப்பற்றியது


இடைத் தேர்தல்: காங்கிரஸ்-மஜத கூட்டணி வெற்றி!மின்னம்பலம் :கர்நாடக இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், மொத்தமுள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளை காங்கிரஸ்-மஜத கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகள், ராம்நகர், ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று(நவம்பர் 6) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி 1,09,137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியமகௌடா, 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.

மக்களவை தொகுதிகளில் 3இல் 2 இடங்களை காங்கிரஸ்-மஜத கூட்டணி கைப்பற்றியுள்ளது. மாண்டியா தொகுதியில் 3,24,943 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி மஜத வேட்பாளர் சிவராமகவுடா வெற்றிபெற்றுள்ளார். பாஜகவின் கோட்டையாக திகழ்ந்த பெல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஎஸ் உக்கிரப்பா 2,43,161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. அங்கு பாஜக வேட்பாளரான ராகவேந்திரா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மஜத வேட்பாளர் மது பங்காரப்பாவை 52,148 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ராகவேந்திரா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கர்நாடகா முழுவதும் காங்கிரஸ்-மஜதவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, “காங்கிரஸ் தலைவர்களுக்கும், மஜத நிர்வாகிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களால்தான் 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளோம். எங்கள் கூட்டணியை பொருந்தாக் கூட்டணி என்று பாஜக விமர்சித்தது. தற்போது அது தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல்தான் எங்கள் வெற்றியின் முதல் படி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து செயலாற்றி மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இதுதான் எங்களுடைய லட்சியம். இடைத் தேர்தல் வெற்றி மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. 20 இலிருந்து 30 கோடி ரூபாய் வரை கொடுத்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்க முயற்சித்தது. ஆனால் அவர்களால் இழுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கவுன்டவுன் தற்போது தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: