புதன், 7 நவம்பர், 2018

இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமானது; தமிழ் மக்களுக்கு உரிமைகள் தேவைதானா?- முத்தையா முரளிதரன்

இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமானது;  தமிழ் மக்களுக்கு உரிமைகள் தேவைதானா?- முத்தையா முரளிதரன்தினத்தந்தி :விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். தமிழ் மக்களுக்கு உரிமைகள் தேவைதானா?" என முத்தையா முரளிதரன் கேட்டுள்ளார்.
கொழும்பு, சர்வதேச பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியில்  இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறியதாவது:- பாராளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் மக்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது தமது உரிமைகளையோ, ஜனநாயகத்தையோ அல்ல. தங்களுக்கான மூன்று வேளை உணவும், தடையின்றிய கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள்.
இதனை நான் கூறுவதால் என்ன யாராவது தவறாக எடுக்கக் கூடும். ஆனால் உண்மை அதுதான். தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதை விடுத்து உரிமை, ஜனநாயகம் என காலத்தை வீணடிக்கின்றனர்.
இந்த நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிங்கள பவுத்தர்களாவர். எனவே இது சிங்களவர்களுக்குரிய நாடுதான். ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் இங்கு சிறுபான்மையினர் என்பதுதான் உண்மை.


ஆனால் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் எனது திறமையினை மூன்று இன  மக்களும் ஏற்றுக் கொண்டதுடன் உற்சாகமளித்தனர். வடக்கில் ஒரு சிறுமி வறுமை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்தாள்.  ஆனால் வடக்கில் உரிமை குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசிக் கொள்ளும் அரசியல்வாதிகள் இவ்விசயத்தில்  இரக்கம்  கொண்டார்களா? 

தமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகம் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசி வருகின்றனர். உண்மையில் தமிழ் மக்களுக்கு அடிபடையாக அவை தேவைதானா என கேள்வியெழுப்ப விரும்புகிறேன். எல்லோரும் தவறிழைத்தவர்கள்தான். சிங்களவர்கள் எல்லோரும் தவறிழைக்கவில்லை. 5 வீதமானவர்கள்தான் தவறிழைத்தனர்.

பிரபாகரனால் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆரம்பத்தில் சரியான வழியில் பயணித்திருந்தாலும் இறுதியில் பயங்கரவாதிகளாக மாறியது. கடந்த காலத்தில் இடம் பெற்ற யுத்தத்தால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டவர்கள்தான். தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து மக்களை அணிதிரட்டி தமது பலத்தை நிருபிக்க முனைகிறர்கள். உண்மையில் இவற்றில் கலந்து கொள்பவர்களில் பத்துப் பேரைத் தவிர உணவுக்காகவும், ஏனைய சலுகைகளுக்காகவும் செல்வோரே அதிகம் என தனது காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார் முரளிதரன்.

முரளிதரனின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அதிகரித்து உள்ளது.

கருத்துகள் இல்லை: