வியாழன், 8 நவம்பர், 2018

சரிகிறது ரெட்டி சகோதரர்கள் சாம்ராஜ்யம்.. கைது பயத்தில் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு

Janardhan Reddy, is likely to be sent behind bars tamil.oneindia.com :
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கொன்றில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த ரெட்டி சகோதரர்களில் ஒருவர் ஜனார்த்தன ரெட்டி. சட்ட விரோத சுரங்க தொழில் மூலமாக, இரும்பு தாது ஏற்றுமதியால் பல லட்சம் கோடி சம்பாதித்த பெரும் பணக்காரர் இவர்.
எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் ஜனார்த்தன ரெட்டி. ஆனால், சட்ட விரோத குவாரித் தொழிலுக்கு எதிராக எடியூரப்பா எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து எம்எல்ஏக்களை பிரித்து ரிசார்ட் அரசியலை துவக்கி வைத்தவரும் இவரே. அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் ஜனார்த்தன ரெட்டி.

கடந்த சட்டசபை தேர்தலில், ரெட்டி சகோதரர்கள், தீவிர அரசியலில் களமிறக்கப்பட்டனர். ஆனால், பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நேரத்தில், சட்ட விரோதமாக கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி மீது பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அவரை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஜனார்த்தன ரெட்டியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
பெல்லாரி லோக்சபா தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
அங்கு, பாஜக வேட்பாளர் தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், ரெட்டிகளின் சாம்ராஜ்யம் சரிந்துவிட்டதாகவே கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

/tamil.oneindia.com/news/delhi/janardhan-reddy-is-likely-be-sent-behind-bars-333668.html

கருத்துகள் இல்லை: