திங்கள், 5 நவம்பர், 2018

திருச்சியில் - சென்னை 4 மணி நேர வேகப்பயணம்.. ஆம்புலன்ஸ் டிரைவர்களால் காப்பாற்றப்பட்ட குழந்தை

dailythanthi.com திருச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
முயற்சியால் 4 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை, திருச்சி அருகேயுள்ள கீரப்பட்டி கிராமத்தை சேர்ந்த குறைவேல் மனைவி கிருஷ்ணவேணிக்கு கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், நுரையீரலில் பிரச்சினை இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே, அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் உயர் சிகிச்சை அளித்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என கூறி உடனடியாக சென்னைக்கு குழந்தையை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.


அதுவரை வென்டிலேட்டரில் வைத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையை சென்னைக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வேன் தேவை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மணப்பாறையில் ஸ்ரீதரன் என்பவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வேனில் அந்த வசதி இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, அவரை தொடர்பு கொண்ட டாக்டர்கள் எதிர்நோக்கி இருக்கும் சவாலை விளக்கிக் கூறினார்கள்.

“330 கிலோ மீட்டர் தூரம். பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் குழந்தை. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு பத்திரமாக கொண்டுசெல்ல வேண்டும். வேகத்தடை, குண்டும் குழியுமான சாலைகளில் லாவகமாக கடக்க வேண்டும்” என்பது உள்பட பல்வேறு சவால்கள் ஆம்புலன்ஸ் வேன் ஓட்டும் டிரைவருக்கு எதிர்நோக்கி இருந்தன.

ஆம்புலன்ஸ் வேனை அலெக்சாண்டர் என்ற டிரைவர் இயக்க முன்வந்தார். அவருடன் வேன் உரிமையாளர் ஸ்ரீதரனும் இணைந்து கொண்டார். குறிப்பிட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேன் மாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

சரியாக மாலை 4.10 மணிக்கு குழந்தையை ஏற்றிக்கொண்டு, சென்னை நோக்கி ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டது. குழந்தையின் அருகில் தந்தை குறைவேல் அமர்ந்திருந்தார். டிரைவர் அலெக்சாண்டருக்கு டாக்டர்கள் போட்ட ஒரே உத்தரவு, “எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ, அவ்வளவு வேகமாக குழந்தையை கொண்டுசென்று மருத்துவமனையில் சேருங்கள்” என்பதுதான்.

சிவப்பு சுழல் விளக்கை எரியவிட்டபடி, அபாய ஒலியை எழுப்பிக் கொண்டு சாலையில் பறந்துவந்து கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் வேன் குறித்து, வழிநெடுக ஆம்புலன்ஸ் வேன்களில் தயாராக இருக்கும் டிரைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, மாநில ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைச் செயலாளர் இலியாஸ் உதவியுடன் 3 வாட்ஸ்-அப் குரூப் மூலமாக குழந்தை கொண்டுவரப்படும் ஆம்புலன்ஸ் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் வாட்ஸ்-அப் மூலம் அவ்வப்போது அனுப்பிவைக்கப்பட்டது. அதை வைத்துக்கொண்டு, வழியில் நின்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வேகமாக வந்து கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் வேனை தங்குதடையில்லாமல் முன்னேறிச் செல்ல உதவினர். இடையில் இருந்த 7 சுங்கச்சாவடிகளையும் தாண்டி சென்னை நோக்கி ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.

சரியாக இரவு 8.20 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேன் வந்து சேர்ந்தது. திருச்சியில் இருந்து 4 மணி நேரம் 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வேனை டிரைவர் அலெக்சாண்டர் கொண்டு வந்து சேர்த்தார்.

மருத்துவமனை வளாகத்தில் தயாராக நின்ற டாக்டர்கள் உடனடியாக குழந்தையை தூக்கிச் சென்று, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். குழந்தையின் இதயத்தில் அடைப்பு எதுவும் இல்லை என்றும், நுரையீரல் பகுதியில் தான் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், இந்த சிகிச்சைக்கு பல லட்ச ரூபாய் செலவாகும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அந்த அளவுக்கு பணத்தை புரட்ட முடியாது என்று குழந்தையின் தந்தை குறைவேல் தெரிவித்ததால், உடனடியாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, இரவு 11 மணிக்கு அரசு குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஒரு வார சிகிச்சையில் தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறது.

இதுகுறித்து, குழந்தைக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர் கூறியதாவது:-
மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், குழந்தை இங்கே அனுமதிக்கப்பட்டது. நாங்கள் செய்த பரிசோதனையில் குழந்தையின் நுரையீரலில் ரத்தக்கொதிப்பு இருப்பதை கண்டுபிடித்தோம். எனவே, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வென்டிலேட்டரில் வைத்தே குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக இதுபோன்ற பிரச்சினை பிறக்கும்போதே ஒருசில குழந்தைகளுக்கு வரும். அதேபோல், 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களையும் பாதிக்கும்.

அதுபோன்றுதான் இந்தக் குழந்தைக்கும் பாதிப்பு இருந்தது. தற்போது, குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. இப்போது குறைந்த நேரமே வென்டிலேட்டரில் குழந்தை வைக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் இயல்பாக சுவாசிக்கும் அளவுக்கு குழந்தையின் உடல்நிலை தேறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக முகம் தெரியாத இத்தனை பேரின் உழைப்புக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மனிதநேயம் இன்னும் மரித்துப்போய்விடவில்லை என்பதை இந்த செயல் உறுதிப்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: