செவ்வாய், 6 நவம்பர், 2018

8 மாதங்களுக்கு முன்பே சபாநாயகரைப் பிரதமராகுமாறு சொன்னேன்’ – மைத்திரிபால சிறிசேன திடீர் பேச்சு!

இலங்கைவிகடன் - இரா.தமிழ்க்கனல்  இலங்கையில், “பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூர்யாவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைத்தேன்; அவர் மறுத்துவிட்டார்” என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இரு வாரங்களுக்கு முன்னர் அதிரடியாகப் பதவிநீக்கம் செய்த மைத்திரிபால சிறிசேன அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்தவை பிரதமராக நியமித்தார். அது அரசமைப்புவிரோதம் என்று கூறிய ரணில், தானே பிரதமராகத் தொடர்வதாகக் கூறினார். சபாநாயகர் கரு ஜயசூர்யாவும் இன்றுவரை தொடர்ச்சியாக மைத்திரியின் நியமனம் அரசமைப்புக்கு விரோதமானது என்று கூறிவருகிறார்.
கடந்த வாரம், பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலறி மாளிகைப் பகுதியில் ரணில் தலைமையில் அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள், பெரிய பேரணி நடத்தி மக்கள் ஆதரவைக் காட்டினர்.
அதைப்போலவே இன்று மக்களைத் திரட்டிக் காண்பிக்க மகிந்தவும் மைத்திரியும் தீர்மானித்தனர். மைத்திரியை எதிர்த்த காலத்தில் மகிந்தராஜபக்சே பின்னணியில் உருவாக்கப்பட்ட பொதுசன பெரமுன எனும் அமைப்பு சார்பில், இன்று பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி அருகில் பேரணி நடைபெற்றது.

அதில் பேசிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, “ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயல்பட என்னால் முடியாத சூழல் ஏற்பட்டது. எட்டு மாதங்களுக்கு முன்னரே சபாநாயகர் கரு ஜயசூர்யாவை பிரதமர் பதவியில் அமருமாறு கேட்டுக்கொண்டேன். அவரோ தன் தலைவரைப் பதவியிலிருந்து விலக்கி அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறி ஏற்கவில்லை. (ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத்தலைவர்) சஜித் பிரேமதாசாவிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேட்டுக்கொண்டேன்; அவரும் மறுத்துவிட்டார். அதையடுத்தே, என்னுடன் இணைந்து பணியாற்றக்கூடிய, தேசியத்தையும் பாரம்பர்யத்தையும் மதிக்கக்கூடிய ஒருவரான, மகிந்த ராஜபக்சேவை பிரதமராகத் தேர்வு செய்தேன்” என்று மைத்திரி குறிப்பிட்டார்.
 vikatan.com

கருத்துகள் இல்லை: