வெள்ளி, 9 நவம்பர், 2018

குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு – வெளிவரும் புதிய உண்மைகள்.

சவுக்கு :குஜராத் கலவரத்தில் அரசு எப்படிச்
செயல்பட்டது என்பது பற்றிய நேரடி சாட்சியம்
தி வயர் இதழின் அர்பா கானும் ஷெர்வானி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜமீர் உதின் ஷாவை, வெளிவரவிருக்கும் அவரது வாழ்க்கை வரலாறு நூலான தி சர்க்காரி முஸல்மான் தொடர்பாக நேர்காணல் செய்தார். இதில் அவர் குஜராத் கலவரங்களின்போது ராணுவ நடவடிக்கைக்குத் தலைமையேற்ற தனது அனுபவத்தை விவரிக்கிறார். இந்த புத்தகத்தில், குஜராத் முதல்வருக்கு பல முறை வேண்டுக்கோள் விடுத்தும் கூட, வாகனங்களுக்காக காத்திருந்ததால் ராணுவம் உயிர் காத்திருக்கக்கூடிய முக்கியமான மணிநேரங்களை ராணுவம் இழந்தது பற்றி பேசுகிறார்.
அர்பா கானும் ஷெர்வானி: வணக்கம். நான் அர்பா கானும் ஷெர்வானி. 2002 குஜராத் கலவரத்தின்போது அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், குறைந்த உயிரிழப்பு மட்டுமே ஏற்பட்டிருக்குமா? கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியுமா? ராணுவம் சரியான நேரத்தில் பிரயோகப்படுத்தப்பட்டிருந்தால் குறைந்த உயிரிழப்பே ஏற்பட்டிருக்கும் என வாதிடும் புதிய புத்தகம் ஒன்று வெளியாக இருக்கிறது.
குஜராத் கலவரங்களின்போது, ராணுவ பிரிவுக்கு தலைமை தாங்கிய தளபதி ஜமீர் உதின் ஷா பற்றியே குறிப்பிடுகிறோம்.
தளபதி ஷா, பிப்ரவரி 28ஆம் தேதி இரவு, 3,000 வீரர்களுடன் குஜராத்தில் தயாராக இருந்ததாகக் கூறுகிறார். அன்றைய தின இரவும் மார்ச் அதிகாலை 2 மணி அளவில் அவர் முதல்வரை சந்திக்கச் செல்கிறார். அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் உடன் இருந்தார். ஒரு முழு நாள் ராணுவம் நகருக்குள் நுழைய முடியாமல் மோடி செய்ததாகவும், விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் நகருக்கு செல்ல வாகனங்கள் அளிக்க மறுத்ததாகவும் ஷா சொல்கிறார். இந்த காரணங்களினால் ராணுவம், மார்ச் 2 தான் நடவடிக்கை எடுக்கத்துவங்கியது. அவர் சர்க்காரி முஸல்மான் எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். கலவரத்தின்போது நடந்தவை மற்றும் புத்தகம் பற்றி அவர் பேசுகிறார்.
எங்கள் ஸ்டூடியோவுக்கு வந்ததற்கு மிகவும் நன்றி தளபதி ஷா. முதலில், பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரையான அந்த மோசமான தினத்தில் என்ன நடந்தது என அறிய விரும்புகிறோம்.
பிப்ரவரி 28 – மார்ச் 1: முக்கியமான நேரங்களில் ஒன்றுமே செய்யப்படவில்லை
ஜமீர் உதின் ஷா: என்னுடைய பிரிவான ஸ்டிரைக் காப்ஸ், ஜெய்சால்மர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. 28ஆம் தேதி, நான் உடல்பயிற்சிக்காக சென்றுவிட்டு, மாலை 6 அல்லது 6.30 மணி அளவில் வந்தேன். ராணுவ முதன்மை தளபதி பத்மநாபன் என்னை அழைத்தார். அவரே நேரில் அழைத்ததால் மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். எத்தனை வீரர்களை முடியுமோ அத்தனை பேரை அழைத்துச் சென்று அகமதாபாத்தில் நடக்கும் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கூறினார். அகமதாபாத் செல்ல 2 நாட்கள் ஆகும் என்றேன். விமானப் படை விமானங்களை ஏற்பாடு செய்கிறது, கவலைப்பட வேண்டாம் என்று கூறியவர், ஜோத்பூர் விமான தளத்தில் முடிந்த அளவு அதிக வீரர்களை அழைத்துச் செல்லுமாறு கூறினார். இரண்டு பிரிவுகளைத் தயார் செய்யுமாறு என் துணைத் தளபதிகளிடம் கூறினேன். அதற்குள் அகமதாபாத்திற்கு இரண்டு பிரிவுகளுடன் செல்லுமாறு எழுத்துபூர்வ உத்தரவும் வந்தது.
பிப்ரவரி 28ஆம் தேதி இரவு பத்து மணிக்கு அகமாதாபாத் ராணுவ தளத்திற்குச் சென்றேன். ஜோத்பூர் விமானதளத்திற்கு ராணுவ வீரர்கள் வர 3 மணிநேரம் ஆனது. அங்கிருந்த அவர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இரண்டு பிரிவு வீரர்கள், அதாவது 18 கம்பெனிகள் கொண்ட ஆறு பட்டாலியன்கள் இருந்தனர்.  40 விமானங்களில் அவர்கள் அகமாதாபாத் வந்து சேர்ந்தனர். அகமதாபாத் மீது பறந்து சென்றபோது, நகரம் முழுவதும் எரிவதைப் பார்த்தேன். நகரில் எல்லாப் பகுதிகளிலும் எரிந்து கொண்டிருந்தன. அகமதாபாத் விமான தளம் இருண்டு, அமைதியாக இருந்தது. நாங்கள் சென்றதுமே, வாகனங்கள், மாஜிஸ்திரேட்கள், காவல்துறை வழிகாட்டிகள் மற்றும் முக்கியமாக செல்போன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ராணுவ போன்கள் நேரில் இருக்கும்போதுதான் பேச முடியும். நகர்புறச் சூழல் மற்றும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் அவை பயனற்றவை.
நான் அங்கு சென்றபோது, என்னுடைய பயிற்சி கால சகாவான பிரிகேடியர் மெஹ்ராவைச் சந்தித்தேன். அவரிடம் வாகனங்கள் எங்கே என்று கேட்டேன். மாநில அரசு வழங்கும் என்றும் தனக்கே இது பற்றி அதிகம் தெரியாது என்றும் கூறினார். தலைமை செயலர் எங்கே, அவரிடம் பேச வேண்டும் என்றேன். தலைமை செயலர் வெளிநாட்டி இருப்பதாகவும் வேறு ஒருவர் பொறுப்பை கவனிப்பதாகவும் கூறினார். அவரது போன் எண் வாங்கினேன். அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. அவர் யாரோ ஐ.ஏ.எஸ். அதிகாரி. நான் என் வாகனத்தை எடுத்துச் சென்றிருந்தேன். என்னுடைய போன் சாதன, ஏடிஜி மற்றும் வாகனம் முதல் விமானத்தில் வந்திருந்தன. நான் ஒரு வழிகாட்டியை வைத்துக்கொண்டு, காந்தி நகரில் முதல்வர் பங்களாவிற்கு சென்றேன். அங்கு காலை 2 மணிக்கு சென்றோம். அதாவது மார்ச் 1 ஆகியிருந்தது.
ஏகேஎஸ்: ஆம், மார்ச் 1.
ஷா: அங்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் எங்களை சந்தித்தார். ராணுவம் வந்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். நான் ஆமோதித்தாலும், வாகனங்கள், வரைபடங்கள், மாஜிஸ்திரேட்கள் மற்றும் காவல்துறை வழிகாட்டிகள் இன்னுமும் வழங்கப்படவில்லை என கூறினேன். அவை வழங்கப்படும் என்று அவர் கூறினார். என்னிடம் வரைபடம் ஒன்று இருந்தது. ஆனால் அது ராணுவ வரைபடம் இல்லை, சுற்றுலா வரைபடம். அதில் பிரச்சினை உள்ள இடங்களைக் குறித்தோம். வீரர்கள் அங்கு இருந்தனர், நாங்கள் வாகனங்கள் வரக் காத்திருந்தோம். அடுத்த நாள் காலை காலை 10 அல்லது 11 மணிக்கு பெர்னாண்டஸ் விமான தளத்திற்குத் தனியே வந்தார். அது வரை எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என அவரிடம் கூறினேன். அவர் வீரர்களிடம், கலவரங்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைப்பது முக்கியம் என்று பேசினார்.
ஏகேஎஸ்: முந்தை நாள் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை பத்து மணிவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள்.
ஷா: ஆம், ஒரு வாகனமும் அனுப்பப்படவில்லை. நாங்கள் நடந்து சென்றிருக்க முடியாது.
ஏகேஎஸ்: நகரிலிருந்து விமானதளம் எத்தனை தொலைவில் இருந்தது?
ஷா: விமானதளம் நகரிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. மேலும் வழிகாட்டிகள், வரைபடங்கள் மற்றும் செல்போன்கள் இல்லாமல் எங்களால் எங்கும் செல்ல முடியவில்லை. காட்டில் இருந்தால்கூட, ஜங்கி பாஷிங் பயன்படுத்தியிருப்போம்,. ஆனால் நகரில் அவை வேலை செய்யவில்லை. முதல்வர் வீட்டிற்கு நான் இரவில் சென்ற போது, சிறுபான்மையினர் வசித்த பகுதிகளில் கலவரக்காரர்கள் சூழந்திருப்பதையும், காவலர்கள் ஜன்னல் வழியே வீட்டிற்குள் சுடுவதையும் பார்த்தேன். அவர்கள் என்ன செய்கின்றனர் என்று கேட்டேன். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த முயல்வதாகக் கூறினர். எனில் காவலர்கள் கலவரக்காரர்களை நோக்கிச் சுட வேண்டும். வீட்டுக்குள் அல்ல என்று கூறினேன். அதைக் கேட்டு அவர்கள் அவமானமாக உணர்ந்தனர். காவலர்கள் வேறு எதுவும் செய்யவில்லை என்பதையும் கவனித்தேன்.
ஏகேஎஸ்: ஆக, பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரையான முக்கிய நேரத்தில் செயல்பட்டிருந்தால் நிறைய உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் ஆனால் எதுவும் செய்யப்படவில்லை என்கிறீர்கள். மறுநாள் எப்போது பணியைத் துவக்கினீர்கள்?
ஷா: வாகனங்கள் மார்ச் 2 அன்றுதான் வந்தன. அவை வந்த பிறகு நகருக்குச் சென்றோம்.
ஏகேஎஸ்: ஆக, 28ஆம் தேதி இரவு, 1ஆம் தேதி முழுவதும் வீண் ஆனது. நீங்கள் மார்ச் 2 நடவடிக்கையைத் துவங்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றீர்கள்?
ஷா: ஆம். 1ஆம் தேதி முழுவதும் விமானதளத்தில் இருந்தோம். இப்போது யாரோ என்னிடம், மார்ச் 1 ராணுவம் நடவடிக்கை எடுக்கத் துவங்கியது எனும் எஸ்.ஐ அறிக்கைடை படித்துக்காட்டினர். இது முற்றிலும் தவறு. நாங்கள் அகமதாபாத் மற்றும் குஜராத்தின் மற்ற பகுதிகளில் இருந்தோம். ஆறு பட்டாலியன்கள் இருந்தன, அகமாதபாத்திற்கு 3 பட்டாலியன்கள் அனுப்பினேன், சவுராஷ்டிரா, தெற்கு குஜராத் மற்றும் பஞ்சமாலுக்கு ஒன்று அனுப்பினேன்.
ஏகேஎஸ்: குஜராத்தின் அமைத்திக்கான ராணுவச் செயல்பாடுகளுக்கு தளபதி ஜமீர் உதின் ஷா பொறுப்பேற்றிருந்தார். ராணுவம் அழைக்கப்பட முதல்வர் கேட்டிருந்தார். முதல்வர் கேட்டால் மட்டுமே ராணுவம் தலையிட முடியும்.
ஷா: ஆம், ஆம்
ஏகேஎஸ்: கலவரங்களின்போது காவலர்களின் பங்கு பற்றி தொடர்ந்து சொல்லுங்கள். ஒரு சில காவல் அதிகாரிகள் கலவரக்காரர்களுடன் சேர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டது பற்றி மற்றும் காவல்துறை தங்கள் கடமையைச் செய்யத் தவறியது பற்றிய தகவல்கள் குறித்த பல கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் பார்த்தது என்ன?
ஷா:  ஊர்க் காவல் படையினர் கலவரக்காரர்களுடன் சேர்ந்துகொண்டனர். பெரும்பாலான ஊர்க் காவல் படைப்பிரிவுத் தலைவர்கள் வலதுசாரி இயக்க உறுப்பினர்களாக இருந்தனர். காவலர்கள் கலவரக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கு கலவரக்கார கும்பலை பார்த்தாலும் காவல்துறை வேறு இடத்தில் பணி இருப்பதாக கூறி எல்லாவற்றையும் ராணுவத்திடம் விட்டுச்சென்றனர். கலவரக்காரர்களை நேரடியாக அடக்கவில்லை. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சில காவல்துறை அதிகார்கள் வீடுகளும் எரிக்கப்பட்டன. காவல்துறை நடவடிக்கை மந்தமாக, ஒருதலைப்பட்சமாக இருந்தன.
ஏகேஎஸ்: உள்ளூர் காவல்துறை ராணுவக் கட்டளைக்குக் கீழ்ப்படியத் தயங்கியதாக உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்களே?
ஷா: அது அப்படி இல்லை. குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கச் சொல்வோம். காவல்துறை சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பார்கள். பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதியில் ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் செயல்படுத்தப்படவில்லை. சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. பெரும்பான்மையினர் வசித்த பகுதியிலும் இவ்வாறு செய்யுமாறு கூறினேன்,ஆனால் அதைக் கேட்கவில்லை.
ஏகேஎஸ்: நீங்கள் கேட்டுக்கொண்டும்…?
ஷா: நான் பல்முறை கேட்டுக்கொண்டேன். ஒரு அதிகாரி மற்றும் ஒரு டிஜி இருந்தார். அவரையும் கமிஷனரையும் பலமுறை சந்தித்தேன். மார்ச் 1இல் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் பேசியபோது, கமிஷனர் மற்றும் டிஜி மாறுதல் செய்யப்பட வேண்டும் என்றும் காவல்துறைக்கு தலைமை தாங்க வேறு அதிகாரிகள் தேவை என்றும் கூறினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், மாறுதல் நடைபெறவில்லை. காவல்துறை தலைமை மாறவில்லை.
ஏகேஎஸ்: அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி அல்லது பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் இருவரில் யார் இதற்குப் பொறுப்பு எனக் கருதுகிறீர்கள்? மோடி தன் முதல்வர் கடமையை செய்யவில்லை, நிர்வாகியாக தோற்றுவிட்டார் என பலமுறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது யாருடைய தவறு?
ஷா: நான் அரசியல் கருத்தைத் தெரிவிக்க மாட்டேன். எனக்குத் தெரிந்தது எல்லாம் நிர்வாகத் தோல்வி இருந்தது என்பதுதான். தலைமைச் செயலர் இல்லை. தலைமை செயலர் பொறுப்பு வகித்தவர் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை பொறுப்பை நிறைவேற்றவில்லை. அவர்கள் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக இருந்தது. கலவரங்களின் அளவிற்கு ஏற்ப நிர்வாகத் தோல்வி அமைந்திருந்தது.
நான் சர்க்காரி முஸ்லமான் இல்லை
ஏகேஎஸ்: உங்கள் புத்தகம் பற்றி விவாதிக்கலாம். புத்தக தலைப்பு தி சர்க்காரி முஸல்மான். சுவாரஸ்யமாக இருக்கிறதே. ஜமீர் உதின் ஷா, ஒரு ராணுவ வீரராக 40 ஆண்டுகள் தேசத்திற்கு சேவை செய்துள்ளார். ராணுவ துணை தளபதியாக 2008இல் அவர் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு, அவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். வேறு முக்கிய பதவிகளையும் வகித்திருக்கிறார். உங்கள் புத்தகத்தை ஏன் தி சர்க்காரி முஸல்மான் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் உயர் பதவியில் உள்ளவர்களைத்தான் இப்படிச் சொல்வார்கள். இந்தப் பதம் பாதகமானது என்றாலும், நீங்கள் புத்தகத்திற்கு இப்படித் தலைப்பு வைத்தது எப்படி?
ஷா: என் தந்தை நைனிடாலில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் ஆஜ்மீருக்கு மாற்றப்பட்ட்டு, தரக் ஷெரிப்பைக் கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அரசின் செயல்திட்டத்தை முன்னிறுத்துவார் என்பதற்காக தர்காவின் குடாம் எனது அப்பா மீது அதிருப்தி கொண்டார். எனவே சிறுவயதிலேயே இந்தப் பதத்தைக் கேள்விபட்டிருக்கிறேன். மக்கள் ஷா ஒரு சர்க்காரி முஸல்மான் என்று சொல்லலாம்.
எப்படி இருந்தாலும், நான் இரண்டாவது நிலையில் இருந்தபோது முஸவ்ரியில் குதிரையேற்ற வீரர்கள் சிலரைச் சந்தித்தேன். இந்திய ராணுவக் கழகம் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக அணி என்பதை அறிந்தேன். அவர்களிடம் ராணுவ வாய்ப்பு பற்றி பேசுவது நல்லது என நினைத்தேன். ராணுவ வேலை அளிக்கும் வளம் மற்றும் மதிப்பு பற்றிப் பேசினேன். ராணுவத்தில் குதிரையேற்ற வீரர்கள் தேவை என்றும், போலோ விளையாட்டுக்கு ராணுவம் முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் கூறினேன். அதன் பிறகு அவர்களில் யார் எல்லாம் ராணுவத்தில் சேர விரும்புகின்றனர் எனக் கேட்டபோது ஒருவர்கூடக் கை தூக்கவில்லை. நான் ஒரு சர்க்காரி முஸல்மான் என என்னிடம் கூறினர். எனவே நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. ஆனால் இரண்டு வகையான சர்க்காரி முஸல்மான்கள் உள்ளனர். முதல் ரகம் தன் சமூகம் பற்றி நினைத்துக்கொண்டிருக்காமல் விதிகளைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள்தான் சர்க்காரி முஸல்மான் என இழிவாகக் குறிப்பிடப்படுகின்றனர்.
ஏகேஎஸ்: நீங்கள் எந்த வகை சர்க்காரி முஸல்மான்?
ஷா: நான் இல்லை
ஏகேஎஸ்: ராணுவத்தில் இருந்த போது?அலிகார் பல்கலைக்கழகத்தில்?
ஷார்: இல்லை. நான் எப்போதும் விதிகளின்படி நடந்துகொண்டேன். ஆம், இன்னொரு வகை சர்க்காரி முஸல்மான்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த சமூகத்தின் மீது பாரபட்சமான அணுகுமுறை கொண்டவர்கள். அவர்கள் மதச்சார்பற்றை தன்மையை வெளிப்படையாகக் காண்பித்து, முஸ்லிம்களை ஆதரிப்பதில்லை என கூறுவார்கள். ஆக எதிர்வினை இருக்கிறது. இவர்கள் தங்கள் சொந்த சமூகம் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். சல்மான் ருஷ்டி, தஸ்லிமா ஆகியோர் இந்தப் போக்கைச் சாதகமாக்கிக்கொள்கின்றனர் எனப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் இருவரும் முஸ்லிம்களாகப் பிறந்தாலும், இஸ்லாமிற்கு எதிராக எழுதுகின்றனர். இந்த தலைப்புக்கு பகுதி காரணம் இதுதான். என் பதிப்பாளரும் இது ஈர்ப்பாக இருக்கிறது என்றார்.
எல்லா அரசுகளும் ஏ.எம்.யூவை குறிவைத்துள்ளன
ஏகேஎஸ்:இங்கிருந்து நகர்ந்தும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பற்றி பேச விரும்புகிறேன். பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகளின் தாக்குதல் போன்றவற்றை பார்க்கும் போது, தேஜகூ அரசு அலிகார் முஸ்லிம் பல்கலையைக் குறி வைப்பதாகத் தோன்றுகிறதா?
ஷா: பாருங்கள், எல்லா அரசுகளும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைக் குறி வைத்துள்ளன. முந்தைய அரசு, செயல்குழுவுக்குப் பொருத்தமில்லாத நபரை, போலி இயக்கத்தைச் சேர்ந்தவரை நியமித்தது. அந்த நபரைச் செயல் குழுவுக்கு நியமிக்க வேண்டாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு எழுதினேன். இருந்தும் அவர் நியமிக்கப்பட்டார். நான் எழுதிய கடிதமும் அவரிடம் காண்பிக்கப்பட்டது.
ஏகேஎஸ்: இரண்டு அரசுகளுக்கு இடையே வேறுபாடு இருக்கிறதா?
ஷா: எனக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை. அலிகர் முஸ்லிம் பல்கலை மற்றும் பனராஸ் இந்து பல்கலை இரண்டும் நிகரானவை என்று கூறிவந்துள்ளேன். ஆனால், பனராஸ் இந்து பல்கலைக்கு இரண்டு மடங்கு நிதி கிடைக்கிறது. அலிகார் பல்கலையைவிட சிறிய ஜாமியா மில்லியா இஸ்லாமியாவுக்கு அதிக நிதி கிடைக்கிறது. ஆனால் யாரும் இதை சரி செய்யவில்லை.
ஏகேஎஸ்: ஏ.எம்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலை எப்படிப் பார்க்கிறீர்கள்? நாட்டுப்பற்று, தேசத்தின் மீதான ஈடுபாட்டை நிருபிக்க வேண்டும் என அவர்கள் கூறப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஷா: நான் ஏ.எம்.சி. துணைவேந்தராக இருந்தபோது, மாவட்ட எம்.பி, அரசை விமர்சனம் செய்வதால் ஏ.எம்.யூ. மாணவர்கள் தேச விரோதமானவர்கள் என எனக்குக் கடிதம் எழுதினார். எங்கள் மாணவர்கள் யாரை வேண்டுமானலும் விமர்சிக்கும் சுதந்திரம் பெற்றுள்ளனர் ஆனால், தேசவிரோத நடவடிக்கைகளைப் பல்கலை பொறுத்துக்கொள்ளாது என பதில் எழுதினேன். அவர்கள் தேச விரோதிகள் அல்ல. ஏ.எம்.யூ. நவீன, மதச்சார்பற்ற பல்கலைக்கழகம். தேசவிரோத நடவடிக்கைகளை அது பொறுத்துக்கொள்ளாது, பொறுத்துக்கொண்டது இல்லை. இது தான் பல்கலைக்கழக வரலாறு. ராஜா மகேந்திர பிரதாப் பிரச்சினையை எம்பி ஒரு முறை எழுப்பினார். அவர் ஏ.எம்.யூ.வுக்கு 3,000 ஏக்கர் நிலம் அளித்ததாக எம்பி கூறினார். நான் இதைத் திருத்தினேன். ராஜாமோகன் பிரதாப் ஏ.எம்.யூ.வுக்கு 3 ஏக்கர் நிலம் குத்தகைக்கு அளித்தார். இதற்கான ஆண்டளிப்பை அவர் பெற்றுவருகிறார். அவர் தொடர்ந்து ஆவேசப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் எம்பி சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பதாக மனிதவள மேம்பாட்டுத் துறைக்குக் கடிதம் எழுதினேன்.
ஏகேஎஸ்: ஜின்னா படம் பற்றி உங்கள் கருத்து என்ன?
ஷா: அவர்கள் பத்திரிகளுக்கு வெளியிட்டு எங்களுக்கு கடிதம் அனுப்பினர். கடிதம் வர ஒரு வாரம் ஆனது. அதுதான் அவர்கள் எடுத்த நடவடிக்கை.
ஏகேஎஸ்: செய்தி அதற்கு முன் வெளியிடப்பட்டது இல்லையா?
ஷா: ஆம். ஜின்னா படத்திலும் இதே நிலைதான்.
ஏகேஎஸ்: அலிகர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜின்னா படம் பற்றி உங்கள் கருத்து என்ன? பல்கலைக்கழகம் அதை நீக்க வேண்டுமா?
ஷா: நான் துணை வேந்தராக இருந்திருந்தால், இந்தச் சிக்கலைத் தீர்க்க வழி கண்டுபிடித்திருப்பேன். ஆனால் நெருக்கடி காரணமாக படத்தை அகற்ற முடியாது. இதற்கு நெருக்கடி அளிக்க முடியாது. அங்கு நூற்றுக்கணக்கான படங்கள் உள்ளன. மாணவர்கள் சங்கத்தில் பலர் கவுரவ உறுப்பினர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். என் படமும் அங்கு உள்ளது. நான் கவுரவ உறுப்பினராக்கப்பட்டேன். காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது ஜின்னா கவுரவ உறுப்பினராக்கப்பட்டார். எம்பி, துணை வேந்தருடன் பேசியிருந்தால் ஏதேனும் தீரிவு கிடைத்திருக்கும். ஆனால் இப்படி நெருக்கடி தருவது முறையல்ல. ஏம்.எம்.யூ. மாணவர்கள் படம் அங்கு இருக்கும் எனத் தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்திலும் ஜின்னா படம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதையும் அகற்ற வேண்டுமா?
முஸ்லிம் சமூகம் பாதுகாப்பாக உணரவில்லை
ஏகேஎஸ்: இப்போது கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகின்றன. நாடு தேர்தலை நோக்கிச் செல்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்? இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மையினரான முஸ்லிகள் பார்வையில் நரேந்திர மோடி அரசை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ராணுவ அதிகாரி ஜமீர் உதின் ஷா
ஷா: ஹமீத் அன்சாரி அறிக்கை மிகச்சரியானது.
ஏகேஎஸ்: ஆக,நீங்கள் முஸ்லிம் சமூகம் பாதுகாப்பாக உணரவில்லை என்று சொல்கிறீர்கள்?
ஷா: ஆம், உண்மைதான். பசுப் பாதுகாவலர் நடவடிக்கைகளைப் பாருக்கள், சமூக ஊடகத்தைப் பாருங்கள். என்னுடைய நண்பர்கள், நல்ல நண்பர்கள், இப்போது சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசவில்லை, அது வேற விஷயம். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
ஏகேஎஸ்: தங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக?
ஷா: ஆம், சொந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக. குறிப்பாக இந்திய ராணுவத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகின்றனர். இது விரும்பக்கதக்கதல்ல. போரா பாணி செயல்பாடு பின்பற்றப்பட வேண்டும். போரா சமூகம் குஜராத்தில் இழப்புகளை சந்தித்தது. இருப்பினும் கல்வி மீதான ஈடுபாடு காரணமாக அவர்கள் வலிமையாக மீண்டு வந்தனர். எல்லா முஸ்லிம்களும் இதைச் செய்ய வேண்டும். கற்றல் மற்றும் கல்வி மூலம்தான் முஸ்லிம்கள் முன்னேற்றம் காண முடியும். நாங்கள் கல்வி பெற்றோம். என் உறவினர்கள் அனைவரும் ராணுவத்தில் கடற்படையில், விமானப்படையில் உள்ளனர். முஸ்லிம்கள் கல்வி பெற்றால், அவர்கள் எதிர்கொள்ளும் பாரபட்சத்தைக் களையலாம்.
இந்திய ஜனநாயகத்தில் முஸ்லிம்களின் பங்கு
ஏகேஎஸ்: நீங்கள் சொல்வது முக்கியமானது. இந்த நிலையை எப்படி எதிர்காலத்தில் மேம்படுத்தலாம் எனும் கேள்விக்கு பின்னர் வருகிறேன். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள சூழலில், சார்புநிலை அதிகம் உள்ள சூழலில்,. இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தில் இந்திய முஸ்லிம்களின் இடத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? எதிர்காலத்தில் இந்த அரசியல் தொடருமானால் எப்படி இருக்கும்?
ஷா: பாரபட்சம் மதத்தின் அடிப்படையில் காண்பிக்கப்படவில்லை எனக் கூறுவேன். கல்வி மற்றும் பயிற்சியில் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு எதிராகவே இது செயல்படுகிறது. முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் இந்தப் பிரிவில் வருகின்றனர். அவர்கள் குறைந்த தகுதி பெற்றிருப்பதால் யார் வேலை தருவார்கள்?
ஏகேஎஸ்: ஆனால் குஜராத் கலவரத்தில் நன்கு படித்த முஸ்லிம்களும் தப்பவில்லை அல்லவா?
ஷா: உண்மை. கலவரத்தில் நன்கு படித்த முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். மத்திய தர பகுதி மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் முஸ்லிம்களும் விரட்டிக் கொல்லப்பட்டது ஆபத்தானது.
ஏகேஎஸ்: இந்து, முஸ்லிம்கள் சேர்ந்து வசிக்கும் பகுதிகளிலும் இது நடந்துள்ளது.
ஷா: ஆம் அவர்களும் பாதிக்கப்பட்டனர். கலவரம் காரணமாக அவர்கள் விரட்டப்பட்டு குடிசைப்பகுதியில் வசிக்கின்றனர்.
முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுவதைத் தடுக்கக் கல்வி போதுமா?  
ஏகேஎஸ்: எல்லா பிரச்சினைகளுக்கும் கல்விதான் தீர்வு என்கிறீர்கள். நம் காலத்தின் வன்முறை அரசியல் மற்றும் நாட்டுப்பற்று என்றால் என்ன என்பதை தீர்மானிக்கும் உரிமையை ஒரு சில குழுக்கள் கையில் எடுத்துக்கொண்டுள்ள சூழலில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் தரக்குறைவான நிலையைப் போக்கக் கல்வி மட்டும் போதுமானதா? கல்வி பெற்றால் இந்த அணுகுமுறை முடிவுக்கு வருமா?
ஷா: ஆம், அப்படி தான் நான் நம்புகிறேன். என் மீது ஏன் பாரபட்சம் இல்லை. எனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை. என்னுடைய பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஏன பாரபட்சமான அணுகுமுறையை சந்திக்கவில்லை? எல்லோரும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்றது காரணம். ஒருவர் ஓய்வுபெற்ற ஐஜி, இன்னொருவர் வேறு பதவி வகித்தார். நாங்கள் யாரும் தரக்குறைவான அணுகுமுறையை எதிர்கொள்ளவில்லை.
ஏகேஎஸ்: நீங்கள் மேட்டுக்குடியில் இருந்து வருவது காரணமாக இருக்குமா?
ஷா: அது காரணம் அல்ல. ஜமீன்தாரி ஒழிப்புக்குப் பிறகு எங்கள் குடும்பம் நிலைகுலைந்தது. செல்வந்தராக இருந்த நாங்கள் கையில் பைசா இல்லாமல் ஆனோம். கல்வி மூலம்தான் முன்னுக்கு வந்தோம்.
ஏகேஎஸ்: முஸ்லிம்கள் எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்கிறீர்களா?
ஷா: ஆம், கல்வி குடிசைப் பகுதியில் பெறப்படக் கூடாது. நான் சென்ற பள்ளியில் எல்லா தரப்பு மக்களையும் சந்துத்துப் பழக வாய்ப்பு இருந்தது. அந்த பள்ளியில் இருந்து இன்னும் நண்பர்கள் உள்ளனர்
ஏகேஎஸ்:  ஆனால் ஆர்எஸ்எஸ் இந்தியாவை இந்து நாடாக ஆக்குவது பற்றி பேசுகிறது. பாஜாக, ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நெருக்கமானது. இத்தகைய இந்தியாவில் முஸ்லிம்களுக்கான இடம் என்னவாக இருக்கும். சமவாய்ப்பு கொண்ட குடிமக்களாகத் தொடர்வார்களா?
ஷா: அவர்கள் படித்து, முன்னேறினால் அவர்களை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. இதை தான் ஏ.எம்.யூ. மாணவர்களுக்கும் சொல்வேன். அவர்கள் போட்டியாளர்களைவிடத் தகுதியும் திறனும் பெற்றிருந்தால் வேலை வாய்ப்பு நிச்சயம் வரும். வேலைவாய்ப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் எனில் நேர்காணல்களுக்கு ஷெர்வானி அணிந்து செல்ல வேண்டும், இது அடையாளம் காண வைக்கும் என்று கூறுவேன். ஆனால் அவர்கள் கல்வி மற்றும் திறன் மூலம்தான் வெற்றி பெற முடியும். தாபாவில் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தால் திறன் பெற முடியாது. நன்றாகப் படித்துக் கடினமாக உழைத்தால் மட்டுமே முஸ்லிம்கள் பாரபட்சத்தை விலக்க முடியும் என நம்புகிறேன்.
நாட்டைக் காக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்கும் இருக்கிறது
ஏகேஎஸ்: மக்கள் ராணுவத்தில் சேர வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் சேர வேண்டும் என கூறி வருகிறீர்கள். ராணுவத்தில் சேருவதுதான் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த சிறந்த வழியா என அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் அதைப் பரிந்துரைக்கிறீர்கள். மொத்த மக்கள்தொகையோடு ஒப்பிட்டால் ராணுவத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை குறைவு என கூறப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு ராணுவத்தில் முஸ்லிம்கள் இல்லை. இந்த சூழலில். ஆள் எடுக்கும் முறை பாரபட்சமாக இருக்கும் நிலையில் முஸ்லிம் இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதை எப்படி ஊக்குவிக்கிறீர்கள்?
ஷா: அலிகார் பல்கலைக்கழகத்தில் நான் நிறைய முயற்சி செய்தேன். மாணவர்களை ராணுவத்தில் சேரவைக்க முயன்றேன். மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்பினால் ராணுவத்தில் சேர வேண்டும் என கூறுவேன். அப்படி செய்தால் எந்த காவலரும் உங்களை மோசமாக நடத்த முடியாது. அனைத்து விரிவாக்கப்பட்ட குடும்பத்திற்கும் இது பாதுகாப்பு அளிக்கும். மேலும் நாட்டை காப்பது முஸ்லிம்களின் கடமையும் தான். எனவே ஏன் அவர்கள் சேரக்கூடாது. முஸ்லிம்கள் ராணுவக், கடற்படை, விமானப்படையில் சேர வேண்டும்.
ஏகேஎஸ்: 1971இல் வங்கதேசம் உருவான போரில் நீங்கள் பங்கேற்றீர்கள்?
ஷா: ஆம் பங்கேற்றேன். அமெரிக்காவில் நிகழ்த்தப்படும் கொடியேற்றம் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். ராணுவ ஜவான்கள் எங்களை எப்போதும் காத்தனர். எங்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டனர். இந்திய ஆயுதப்படை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பான இடம். அது பாத்காப்பான வேலை.
ஏகேஎஸ்: ஆனால் முஸ்லிம்களிலிருந்து அதிகமானோரை வேலைக்கு எடுக்கும் பொறுப்பு ராணுவத்திற்கும் இருக்கிறதே?
ஷா: ஆம். ஆனால் முஸ்லிம்கள் முன்வரத் தவறிவிட்டனர்.
ஏகேஎஸ்: மேலும் அதிகமானோர் விண்ணப்பிக்க வேண்டுமா?
ஷா: ஆம். பத்து பேர் விண்ணப்பித்தால்; ஒருவர்தான் தேர்வாகிறார். ராணுவத்தில் போதிய முஸ்லிம்கள் இல்லை என்கிறோம். ஆனால் ஆயிரம் பேர் விண்ணப்பித்தால் 100 பேர் தேர்வாவர்கள். முஸ்லிம்கள் இதற்கு முன்வர வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமி அழைப்பு வந்த போது, என ஆர்வத்தை எங்கள் மவுல்வி கேள்வி கேட்டார். நான் கடினமான சூழலைச் சந்திப்பேன் என்றார். அவர் சொல்வதைக் கேட்காமல் ராணுவத்தில் சேருமாறு அப்பா கூறினார். அப்போது எனக்கு பதினைந்தரை வயதுதான். நான் 40 ஆண்டு ராணுவத்தில் சேவை ஆற்றினேன். இந்த நாடு நம்முடையது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். நாட்டைக் காக்கும் பொறுப்பு நம்முடையது.
ஏகேஎஸ்: நன்றி தளபதி ஜமீர் உதின் ஷா அவர்களே. 40 ஆண்டுகள் ரணுவத்தில் பணியாற்றிய ஷா, முஸ்லிம் சமூகம் இந்த நாட்டைத் தங்களுடையது என நினைத்து, அதைக் காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்கிறார். முஸ்லிம் இளைஞர்கள் அதிக அளவில் ராணுவத்தில் சேர வேண்டும். 2002 குஜராத் கலவரத்தில் என்ன நடந்தது என்பதை ஒரு ராணுவ அதிகாரி பார்வையில் இருந்து தெரிந்துகொள்வதற்காக மட்டும் அல்ல, உயர் பதவிகளை வகித்துள்ள முஸ்லிம் ஒருவர் நரேந்திர மோடி மற்றும் முஸ்லிம்கள் இடையிலான உறவு மற்றும் இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி அவர் நினைப்பதை அறியவும் தி சர்க்காரி முஸல்மான் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும்.
செய்தி வடிவம் கரன் திங்காரே  
நன்றி – தி வயர்.
https://thewire.in/communalism/video-gujarat-burning-army-vehicles-former-lieutenant-general
தமிழில்: சைபர் சிம்மன்

கருத்துகள் இல்லை: