பெங்களூரு போலீஸ் நிலையத்தில் நடிகர் அர்ஜூன் ஆஜரானார். பெங்களூரு,
நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் பெங்களூரு போலீஸ் நிலையத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
‘விஸ்மய’ என்ற கன்னட திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
மேலும் இதுதொடர்பாக பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதி ஹரிகரன் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் அர்ஜூன் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, நடிகர் அர்ஜூனை கைது செய்ய வருகிற 14-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் அர்ஜூன் மீதான வழக்கில் நடிகை சுருதி ஹரிகரனின் உதவியாளர் கிரண், விஸ்மய படத்தின் பெண் இயக்குனர் மோனிகா, சுருதி ஹரிகரனின் தோழி யசஸ்வினி, படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன், தயாரிப்பாளர் உமேஷ் ஆகிய 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். மேலும் நடிகர் அர்ஜூனிடம் விசாரணை நடத்தவும் போலீசார் தீர்மானித்தனர்.
இதையடுத்து, நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த பாலியல் தொல்லை வழக்கில் 5-ந் தேதி (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் அர்ஜூனுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதைத் தொடர்ந்து, நேற்று காலை 11 மணியளவில் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்திற்கு நடிகர் அர்ஜூன் வந்தார். உடன் அவரது வக்கீல்களும் வந்திருந்தனர்.
பின்னர் கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யண்ண ரெட்டி முன்பாக நடிகர் அர்ஜூன் ஆஜரானார். அப்போது நடிகர் அர்ஜூனுடன் வந்த யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அய்யண்ண ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா ஆகியோர் நடிகர் அர்ஜூனிடம் விசாரணை நடத்தினார்கள்.
குறிப்பாக விஸ்மய படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை சுருதி ஹரிகரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மையா?, ஓட்டலுக்கு அழைத்தது உண்மையா? என்பது குறித்தும், நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் நடிகர் அர்ஜூனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் அர்ஜூன் உரிய விளக்கமும், பதிலும் அளித்தார். அத்துடன் நடிகை சுருதி ஹரிகரன், தன் மீது கூறும் பாலியல் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
நடிகர் அர்ஜூனிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் கூறிய விளக்கத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.
மேலும் இந்த வழக்கில் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று நடிகர் அர்ஜூனிடம் போலீசார் கூறி அனுப்பியதாக தெரிகிறது.
இந்த வழக்கில் நடிகை சுருதி ஹரிகரன் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக போலீசாரிடம் காலஅவகாசம் கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக