ஞாயிறு, 4 நவம்பர், 2018

முருங்கை விதைகளுக்கு ஜப்பானில் கிராக்கி


Moringa Leaves
தமிழ்நாட்டு முருங்கைதுரை.நாகராஜன்vikatan.com : தமிழ்நாடு தவிர, இந்தியாவின் பல மாநிலங்களில் முருங்கைப் பொருள்கள் விற்பனையாகிறது. வெளிநாடுகளில் மருத்துவப் பொருளாக மதிப்புக் கூட்டல் முருங்கைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முருங்கையை எப்படி மதிப்புக்கூட்டுவது எனத் தெரிந்தால் எளிதாக லாபமீட்டலாம். அதற்கான விரிவான விளக்கம் இதோ…
தென் மாநிலத்தவர்களின் காய்கறிகள் பட்டியலில் தமிழ்நாட்டு முருங்கைக்காய்க்கு முக்கிய இடம் உண்டு என்றால் அது மிகையல்ல. சாம்பார், புளிக்குழம்பு, குருமா, பொரியல், கூட்டு, அவியல் என இங்கே முருங்கைக்காயைக் கொண்டு பலவித உணவுகள் சமைக்கப்படுகின்றன. குறிப்பாக, முருங்கைக்காய் இல்லாத சைவ விருந்தே கிடையாது என்றுகூடச் சொல்லலாம். இப்படி அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம், அது தன்னுள் கொண்டுள்ள ஊட்டச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட மருத்துவக் குணங்களே. மனிதர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கக் கூடிய முருங்கை, விவசாயிகளுக்கும் நன்மையைத்தான் கொடுக்கிறது. முருங்கைக்காய் ஓரளவுக்கு வறட்சியையும் தாங்கி வளரும். தண்ணீர் பாசனம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கும் இது மிகவும் ஏற்றது. அதனால்தான் காய்கறிப் பயிர் செய்யும் விவசாயிகள், முருங்கையையும் ஒருபக்கம் சாகுபடி செய்து வருகிறார்கள். பத்து வருடங்களுக்கு மேல் முருங்கைச் சாகுபடி செய்யும் விவசாயிகளும் உண்டு.


முருங்கையில் நாட்டுமுருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடன் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 2 ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.
நடவு செய்து முறையாகப் பராமரித்தால் ஒரு மாதத்தில் வேர் பூமியில் நன்றாக இறங்கிவிடும். அதற்குப் பிறகு, வறட்சியைத் தாங்கி வளர்ந்துவிடும். முறையாகக் கவாத்து செய்தால், கிட்டத்தட்ட 50 வருடம் கூட மகசூல் எடுக்கலாம். நடவு செய்து 6 மாதத்தில் காய்ப்புக்கு வந்தாலும் ஒன்றரை வருடத்துக்கு மேல்தான் நல்ல மகசூல் கிடைக்கும். வருடத்துக்கு மூணு போகம் காய்கள் காய்க்கும். அதிகப் பராமரிப்பு தேவைப்படாத, செலவு வைக்காத பயிர் முருங்கைதான். இதற்கு ரசாயன உரங்களை விட இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதுதான் நீண்ட கால பலனைத் தரும்.

இதன் இலை, பட்டை, காய், விதை என அனைத்தையும் விற்பனை செய்ய முடியும். எல்லாவற்றிலும் மருத்துவக் குணம் இருப்பதால் தேடி வந்து வாங்கும் வாடிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவேதான் தமிழ்நாட்டு முருங்கைக்கு வெளிநாட்டிலும் வரவேற்பு இருக்கிறது.
நடவு செய்து ஒன்றரை வருடம் கழித்து, நல்ல பராமரிப்பில் இருக்கும் ஒரு மரத்திலிருந்து வருடத்துக்குச் சராசரியாக 200 கிலோ அளவு காய் கிடைக்கும். ஒரு கிலோ காய் 10 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விலை போகும். முகூர்த்த நாள்களில் அதிக விலைக்கு விற்பனையாகும். பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்கும். குறைந்தபட்ச விலையாகக் கிலோவுக்கு 10 ரூபாய் என வைத்துக் கொண்டால் கூட 200 கிலோவுக்கு 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அந்தக் கணக்குப்படி, ஒரு ஏக்கரில் இருக்கும் 160 மரங்கள் மூலமாக வருடத்திற்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அதில் செலவாக 50,000  ரூபாய் செலவானாலும், 2,70,000 ரூபாய் லாபமாக நிற்கும்.
முருங்கையைக் களர், உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். நிலத்தை நன்றாக உழவு செய்து,16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும். வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும். ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு… நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாள்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும். 40 மற்றும் 70-ம் நாள்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும்.
120-ம் நாளுக்குள் செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாகக் கவாத்து செய்ய வேண்டும். 6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாள்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும். இதைத்தவிர வேறு பராமரிப்பு தேவையில்லை.
நாற்று தயாரிப்பு
Moringa

தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).
முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாகக் கட்டி வைக்கவேண்டும்.
40 நாள்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாள்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம் பார்க்க முடியும்.
மொத்த முருங்கை மரங்களிலிருந்தும் வருடத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நாற்று வரைக்கும் உருவாக்க முடியும். ஆனால், அதில் 70 ஆயிரம் நாற்றுகள்தான் தேறும். ஒரு நாற்று 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் வரை விற்பனையாகும். குறைந்தபட்ச விலையாக 30 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 70,000 நாற்றுகள் மூலமாக விற்பனை செய்தால் 21 லட்ச ரூபாய் கிடைக்கும். அதில் 7 லட்ச ரூபாய் செலவு போனால்கூட, 14 லட்ச ரூபாய் லாபமா நிற்கும். இதுதான் சாமானிய விவசாயிகளுடைய பணப்பயிர்.
காய் விலை பற்றி கவலையே இல்லை!
ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலமும் கிடைத்துவிடும்.
இலைக்கும் கிராக்கி!
Drumstick

இயற்கையில் விளையும் முருங்கை இலைக்கும் (கீரை), காய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக இதன் இலைக்குக் காயை விட அதிகத் தேவை இருக்கிறது. இலை பறித்தால் காய் மகசூல் குறையும். அதனால், விவசாயிகள் இலை விற்பனையில் கவனம் செலுத்துவதில்லை. இலைக்காகச் சாகுபடி செய்யலாம் என நினைப்பவர்கள், அடர் நடவு முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 40 நாள்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். தமிழகம் முழுவதுமே பரவலாக முருங்கை இலை வியாபாரிகள் இருக்கிறார்கள். எதற்கும் இலைக்கான விற்பனை வாய்ப்பை விசாரித்துவிட்டு இலை சாகுபடியில் இறங்கலாம்.
பூச்சி மேலாண்மை
முருங்கை இலைகளில் (கீரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப் புழு கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும் தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.
முருங்கை மதிப்புக் கூட்டல்

மதிப்புக் கூட்டலில் முக்கியமான இடம் முருங்கைக்கு உண்டு. தமிழ் நாட்டில் முருங்கை நேரடியான உணவாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனால் முருங்கை மதிப்புக் கூட்டல் என்பது நிச்சயமாக வெளிநாட்டு மக்களுக்கானதுதான். நம் நாட்டு முருங்கைக்கு உள்நாட்டுச் சந்தை வாய்ப்பினை விட வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. முருங்கையைப் பொடியாக்கி விற்பனை செய்வது வரைக்கும் தான் நம்மில் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், முருங்கைக் காயில் இருக்கும் விதைகள் வரை தனித்தனியாக விற்பனை செய்யும் அளவுக்கு முருங்கையின் சந்தை சர்வதேச அளவில் பெரியது என்பது பலருக்கும் தெரியாது.
மதிப்புக் கூட்டலின் மூலம் முருங்கைப் பட்டை, இலை, விதை என அனைத்தையும் விற்பனை செய்ய முடியும். முருங்கைப் பொடி தொடங்கி முருங்கை டீ மிக்ஸ், முருங்கை ஸ்ட்ராபெர்ரி மிக்ஸ், முருங்கை பெப்பர் மின்ட், முருங்கைப் பட்டை எண்ணெய், விதை எண்ணெய், இலை எண்ணெய், முருங்கைப் பருப்பு, முருங்கைப் புண்ணாக்கு, முருங்கை ஷாம்பூ, முருங்கைச் சோப்பு, முருங்கை முகப் பொலிவு பேஸ்ட், முருங்கை சூப் மிக்ஸ் உள்ளிட்ட பல பொருள்களை மதிப்புக் கூட்டித் தயாரிக்கலாம்.
முருங்கையை இலை, பட்டை, விதை எனக் காய வைத்துத் தயார் செய்யும்போது, தரையில் காய வைக்கக்கூடாது. தரையில் காய வைப்பதால் மண், தூசு கலந்து சுத்தம் குறைவாக இருக்கும். முருங்கை மதிப்புக் கூட்டல் பெரும்பாலும் விற்பனையாவது வெளிநாடுகளில் என்பதால், சுத்தம் மிக முக்கியம்.
கிராக்கி இருக்கும் இடங்கள்!
தமிழ்நாடு தவிர, இந்தியாவின் பல மாநிலங்களில் முருங்கைப் பொருள்கள் விற்பனையாகிறது. வெளிநாடுகளில் மருத்துவப் பொருளாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பெரும் பாலான நாடுகளில் தினசரி உணவிலும் முருங்கையை உபயோகித்து வருகின்றனர். முருங்கை விதைகளை ஜப்பானில் பெரும்பாலும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தரமான முருங்கைப் பொருள்களின் இறக்குமதிக்காக இன்று பல நாடுகள் காத்துக் கிடக்கின்றன. ஆனால், அவர்களுக்குத் தேவை இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்கள்தாம். இதுபோன்ற முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு நஷ்டம் இருக்காது.
vikatan.com

கருத்துகள் இல்லை: