ஞாயிறு, 8 ஜூலை, 2018

அழகிரியிடம் சென்ற திமுக மா.செ. ... பிரமுகர்கள்

அழகிரியிடம் சென்ற திமுக மா.செ. பஞ்சாயத்து!மின்னம்பலம் :
அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த சுப.த.திவாகரன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முத்துராமலிங்கம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனையும் அவரது ஆதரவாளர்களையும் கோபத்தில் ஆழ்த்திவிட்டது. ஏனெனில், அவரது மகன்தான் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.
மாவட்டத்தில் இருக்கும் பல நிர்வாகிகளும் சுப.தங்கவேலனால் கொண்டுவரப்பட்டவர்கள் என்பதால் புதிய மா.செ.வை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நியமன அறிவிப்பு வந்த இரண்டாவது நாளே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் 11 ஒன்றியச் செயலாளர்கள், 6 நகரச் செயலாளர்கள் அறிவாலயத்துக்குச் சென்று செயல் தலைவர் ஸ்டாலினிடம், ‘புதிய மாவட்டச் செயலாளர் சரியில்லை. அவருக்கு குற்றப் பின்னணி இருக்கிறது. அவரை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று மனு அளிக்கச் சென்றனர்.
ஆனால் ஸ்டாலினோ, “நீங்கதான் கள ஆய்வுக் கூட்டம் நடக்கும்போது மாவட்டச் செயலாளர் மீது புகார் சொன்னீங்க. இப்ப மாத்தினா அதுக்கும் புகாரா? முதல்ல ஆர்.எஸ்.பாரதியைப் போய் பாருங்க’’ என்று அனுப்பி வைத்துவிட்டார். அதன்பின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் சென்று மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கத்துக்கு எதிராக மனு அளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இதன் பின்னால் சுப. தங்கவேலன்தான் இருக்கிறார் என்று ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், புதிய மாவட்டச் செயலாளருக்கு சுப.த. ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கமாட்டார்கள் என்றும் தகவல் போயிருக்கிறது.
இதையெல்லாம்விட தலைமையை அதிர வைத்த ஒரு தகவல், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சில திமுக பிரமுகர்கள் இந்தப் பிரச்சினையில் அழகிரியைச் சந்தித்து அவரிடம் பேசியிருப்பதாகவும் அழகிரியோ, ‘என்னய்யா என்னைதான் நீக்கி வெச்சிருக்காங்களே... நான் என்ன பண்ண முடியும்? நான் வேணா செல்விகிட்ட பேசிப் பார்க்குறேன்’ என்று பதில் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
இதுபற்றி தென்மாவட்ட திமுக பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, “ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 வருடமாக சுப.தங்கவேலன் ஆதிக்கம்தான் இருக்கிறது. அதை உடைக்க முயற்சி செய்திருக்கிறார் செயல் தலைவர். அதனால் இத்தனை எதிர்ப்புகள் எழுவது எதிர்பார்த்த ஒன்றுதான். அதேநேரம் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் ஊருக்கு வரும்போது 200 கார்களுடன் வந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நாள் போனால் சரியாகிவிடும். அதேநேரம் இந்தப் பிரச்சினை அழகிரியிடம் சென்றிருக்கிறது என்பதும் தலைமை கவனத்துக்குப் போயிருக்கிறது. இப்போது கட்சிப் பிரச்சினை குடும்பப் பிரச்சினை ஆகியிருக்கிறது” என்று கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: