செவ்வாய், 10 ஜூலை, 2018

சென்னை மீன்களில் ‘பார்மாலின் .. புற்று நோய் உண்டாக்க கூடிய இரசாயானம் ... அதிர்ச்சி

tamilthehindu :தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மீன் மாதிகளை ஆய்வு செய்த காட்சி   -  படம்: எம். கருணாகரன்  தீபா எச். ராமகிருஷ்ணன்
சென்னையில் பிரதானமான சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு மீன் விற்பனை சந்தைகளில் இருந்து இரு வெவ்வேறு நாட்களில் வாங்கப்பட்ட 30 மீன் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், 11 மாதிரிகளில் மனிதர்களுக்குப் புற்று நோயை உண்டாக்கக் கூடிய கொடிய வேதிப்பொருளான பார்மாலின் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வுகள் அனைத்தும், தி இந்துவுக்காக(ஆங்கிலம்) தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்களால் நடத்தப்பட்டது.<""> <>பார்மாலின் என்றால் என்ன?< பார்மாலின் எனப்படுவது பதப்படுத்தி மற்றும் கிருமிநாசினியாகும். நிறமற்ற, வண்ணங்கள் அற்ற ஒரு வேதிப்பொருளாகும். இந்த வேதிப்பொருளைத் தண்ணீரில் கலந்து, நாம் மாமிசத்தையோ அல்லது, மீன்கள், உடலின் ஒருபகுதி என எதை வைத்தாலும் அது அழுகாமல், கெட்டுப்போகாமல் நாட்கணக்கில் இருக்கும். இந்த பார்மாலின் மனித உடற்கூறு ஆய்விலும் பயன்படுத்தப்படுகிறது.

மனிதனுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
பார்மாலின் கலக்கப்பட்ட உணவுப்பொருட்களை மனிதர்கள் உட்கொள்ளும் போது, கண்கள், தொண்டை, தோல், வயிறு பகுதிகளில் எரிச்சல், நமச்சல் ஏற்படும். நீண்டகாலத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது, கிட்னி, கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக ரத்தப் புற்றுநோயை உண்டாக்கும்.
புகார்


கோப்புப்படம்
 மீன்கள் அழுகிவிடுவதைத் தவிர்ப்பதற்காக பார்மாலின் எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிளில் செயல்படும் மீன் மார்க்கெட்டில் இருந்து மீன்கள் ஜுலை 4 மற்றும் ஜூலை 8-ம் தேதிகளில் வாங்கப்பட்டன. அந்த மீன்களில் பார்மாலின் வேதிப்பொருட்கள் இருக்கிறதா என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தில் பரிசோதிக்கப்பட்டது.
இந்தப் பரிசோதனைக்காக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் மிகக்குறைந்த விலையில் ஆய்வுக்கருவிகளை உருவாக்கியுள்ளது. அந்தக் கருவிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் புற்றுநோயை பரப்பும் கார்சினோஜின் கொண்ட பார்மாலின் மருந்து கலந்திருப்பது தெரியவந்தது.
கடந்த புதன்கிழமை சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை மீன் மார்க்கெட்டில் இருந்து 13 மீன் மாதிரிகள் வாIங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் அதில் ஒரு மாதிரியில் மட்டும் பார்மாலின் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு மீன் மார்கெட்டுகளில் 17 மீன் மாதிரிகள் வாங்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அதில் 10 மீன் மாதிரிகளில் பார்மாலின் இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்படும் மீன்கள் ஆபத்தான வேதிப்பொருட்கள் மூலம் பதப்படுத்தப்பட்டு கொண்டுவரப்படுவதாக அறிந்து அண்டைமாநிலமான கேரள வியாபாரிகள் அச்சமடைந்து வாங்க மறுத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் துறைமுகங்களிலும், முக்கிய மீன் மார்க்கெட்டுகளிலும் ஆய்வு நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பதில்
மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமாரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:
 மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக வேதிப்பொருளான பார்மாலின் பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது அனுமதிக்கவும் முடியாது. தூத்துக்குடி மற்றும் சில பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் எனக்கு வந்துள்ளன. ஆனால், அதில் பார்மலின் ஏதும் கலக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
ஆனால், தி இந்து(ஆங்கிலம்) மூலம் நடத்திய சோதனையின் முடிவுகள் எனக்குக் கிடைத்தன. நாங்கள் மீன் மார்க்கெட்டுகளில் மாதிரிகளைப் பெற்று ஆய்வு நடத்துவோம். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது எந்தவிதத்திலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மீன் மார்கெட்டில் இருந்து வாங்கப்பட்ட கிழங்கா மீன், பாறை மீன் ஆகியவற்றில் பார்மலின் அளவு 20பிபிஎம் அளவு இருந்தது. மற்ற மீன்களான சுறா, பேய் கனவா, எரி வவ்வால், ஒட்டு கனவா, கெளுத்தி ஆகியவற்றில் 5 பிபிஎம் அளவு பார்மலின் இருந்தது.
ஒரு கிலோவில் இவ்வளவா
இந்த ஆய்வு குறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ் பெலிக்ஸ் கூறுகையில், “ ஒரு கிலோவில் 5 பிபிஎம் அளவு பார்மாலின் இருந்தது மிகவும் அச்சம்தரக்கூடியது” எனத் தெரிவித்தார்.
ரத்தப்புற்றுநோய்
அப்பல்லோ சிறப்பு மருத்துவனையின் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஆர்.ராஜாராமன் கூறுகையில், “ பார்மாலின் மனித உடலில் கலக்கும்போது அது ரத்தப்புற்றுநோயை உண்டாக்கும் கொடிய வேதிப்பொருளாகும்” என வேதனைத் தெரிவித்தார்.
பல்கலையில் ஆய்வு
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தில் ஜி ஜெயசேகர் தலைமையிலான ஆய்வுத்துறையில் உறுப்பினரும், மீன்தரம் குறித்து அறியும் ஆய்வகத்தின் தலைவருமான ஆர் ஜெயசகிலா தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மீன்களில் பார்மாலின் கலந்திருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் இறங்கியபோது, நாங்கள் பார்லோமோலின் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கினோம். அப்போது மேற்கொண்ட ஆய்வில் ஆந்திராவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மீன்களில் பார்மாலின் இ ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பெரும்பாலான மாநிலங்களில் மீன்களை சேமித்துக் வைக்கும் இடங்களிலும் இந்த பார்மாலின் வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன்மாதிரிகளில் 11 மாதிரிகளிலும், காசிமேட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன் மாதிரிகளில் 3 மீன் மாதிரிகளிலும் பார்மாலின் இருப்பது உறுதி செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.
மறுப்பு
இந்திய மீனவர்சங்கத்தின் தலைவர் எம்.டி.தயாளன் கூறுகையில், “ மீன்கள் சிலவற்றில் பார்மாலின் கலந்திருப்பதற்கு எங்களிடம் இருந்து மீன்கள் வாங்கிச்செல்லும் இடைத்தரகர்களே காரணம். மீனவர்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கும் பார்மாலின் குறித்து தெரியாது.
காசிமேட்டில் இருந்து விற்பனையாகும் மீன்களில் எந்தவிதமான வேதிப்பொருட்களும் கலக்கவில்லை. கடலில் இருந்து பிரஷ்ஷாக பிடித்த மீன்களை விற்கிறோம். மீன்பிடி படகிலும் மீன்களைப் பாதுகாக்க நல்லவிதமான வசதிகள் உள்ளன “ எனத் தெரிவித்தார்.
கருவாட்டிலுமா?
பார்மோலின் தவிர மீன்களை புதிதாக பிடித்ததுபோல் காட்டுவதற்காக சிலர் சோடியம் பென்சோனேட் எனும் வேதிப்பொ ருட்களையும் சிலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த வேதிப்பொருள் கருவாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், மீன்களில் பயன்படுத்துவதில்லை என்றும் பல்கலைக்கழ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த சோடியம் பென்சோனேட் என்பது ஐஸ் உருகுவதைத் தடுக்கும் வேதிப்பொருளாகும்.
எப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டது
இதில் ஜூலை 4-ம் தேதி நீலாங்கரையில் காலை 8.30 மணிக்கும், வேளச்சேரியில் காலை 9.30 மணிக்கும், சிந்தாதிரிப்பேட்டையில் 12.30 மணிக்கும் 13 மீன் மாதிரிகள் வாங்கப்பட்டன. இதில் சிந்தாதிரிப்பேட்டையில் வாங்கப்பட்ட மீனில் மட்டும் பார்மாலின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூலை 8-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் காலை 9.30 மணிக்கு மீன் மாதிரிகளும், காசிமேட்டில் நண்பகல் 12.30 மணிக்கு மீன் மாதிரிகளும் என மொத்தம் 17 மாதிரிகள் வாங்கப்பட்டன. இதில் சிந்தாதிரிப்பேட்டையில் 8 மாதிரிகளிலும், காசிமேட்டில் 3 மாதிரிகளிலும் பார்மாலின் கலந்திருந்தது.

 எப்படி ஆய்வுகள் நடத்தப்படுகிறது?
மீன் சந்தைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மீனின் உடலில் இருந்து 2 கிராம் சதைப்பகுதி எடுக்கப்படும்.அந்த வேதிப்பொருள், பார்மாலின் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டுள்ள திரவத்தில் போடப்பட்டு நன்கு கலக்கப்படும். அந்தச் சதைப்பகுதியில் பார்மாலின் கலந்திருந்திருந்தால், அந்தத் திரவம் மஞ்சள் நிறமாக மாறிவிடும்

கருத்துகள் இல்லை: