வெள்ளி, 13 ஜூலை, 2018

நிர்மலா தேவி .. 1160 பக்கக் குற்றப் பத்திரிகை!

நிர்மலா தேவி வழக்கில் 1160 பக்கக் குற்றப் பத்திரிகை!மின்னம்பலம்: மாணவிகள் விவகாரம்
தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில், இன்று (ஜூலை 13) விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர் சிபிசிஐடி போலீசார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, அந்தக் கல்லூரி மாணவிகள் சிலரைப் பாலியல் விவகாரத்தில் சிக்க வைக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பேரில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை பல்கலைக்கழகத் துணைப்பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகினர். இந்த விவகாரத்தில் மதுரைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆளுநர் மாளிகையைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டார் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்.

இதன்பிறகு, நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, அவர் செல்போனில் மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததற்கான ஆதாரங்களும் வெளியானது. போலீசார் கைது செய்தபோதே, செல்போனில் பேசியது நான் தான் என்று வாக்குமூலம் அளித்திருந்தார் நிர்மலா தேவி. இதனைக் குரல் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துவதற்காக, கடந்த மாதம் மதுரை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அவர் அழைத்துவரப்பட்டார். ஜூன் 28ஆம் தேதியன்று தடயவியல் துறை அதிகாரிகள் அவரிடம் குரல் பரிசோதனை மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், செல்போனில் இருந்தது நிர்மலா தேவியின் குரல் என உறுதி செய்தது தடயவியல் துறை.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிர்மலா தேவி மற்றும் கருப்பசாமியின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று (ஜூலை 12) 7ஆவது முறையாக நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.
இதேபோல, கருப்பசாமி ஜாமீன் கோரிய வழக்கை நேற்று விசாரணை செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதன் முடிவில், கருப்பசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இந்த வழக்கில் ஜூலை 16ஆம் தேதிக்குள் முதல்கட்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும், செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் இறுதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது. செப்டம்பர் 24ஆம் தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 13) விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கின் முதல் கட்ட குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இந்த குற்றப் பத்திரிகை 1160 பக்கங்கள் கொண்டது என்று தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: