வியாழன், 12 ஜூலை, 2018

பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்க அமித் ஷா கும்பல் முயற்சி?

Kalai Mathi =- ONEINDIA TAMIL : தமிழகத்தில் ஊழல் அதிகம் என்று அமித்ஷா
பேசியதின் பின்னணி என்ன?- வீடியோ சென்னை: தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்றும் அவர் கூறினார்.
செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கூட்டணி குறித்து பேசவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கப்படும் என்றும் அமித்ஷா கூறினார்.
அதிமுக அரசை பாஜகவின் பினாமி அரசு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக அரசும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் செவி சாய்த்து வருகிறது. எந்த விதத்திலும் பாஜகவை தமிழக அரசு கடுமையாக விமர்சிப்பதும் இல்லை, எதிர்ப்பதுமில்லை. இதுகுறித்து கேட்டால் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்தால்தான் திட்டங்கள் கிடைக்கும் என கூறுகின்றனர் தமிழக அமைச்சர்கள்.


இந்நிலையில் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. என்னதான் அமைச்சர் ஜெயக்குமார், அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார், எச் ராஜாதான் மாற்றி கூறியிருப்பார் என்று சமாளித்தாலும் அமித்ஷாவின் பேச்சு தமிழக அமைச்சர்களிடையே நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

மோடி கடந்த முறை தமிழகம் வந்த போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கோ பேக் மோடி என கறுப்புக்கொடி காட்டினார்கள். அதேபோல் அமித்ஷா வந்தபோதும் கோ பேக் அமித்ஷா ட்ரெண்டானது. இந்த விவகாரமும் பாஜக தமிழக அரசின் மீது அதிருப்தியில் இருக்க காரணம் என கூறப்படுகிறது.

அதேபோல் சில அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக இந்த விவகாரங்களை பயன்படுத்திக்கொள்ள முனைவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கிவிட்டு ஓபிஎஸை முதல்வராக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது.

கருத்துகள் இல்லை: