வியாழன், 12 ஜூலை, 2018

கிழிந்த ஜக்கியின் முகமூடி. எப்படித்தான் மக்கள் இந்த மாதிரி திருடர்களிடம் ....?

ஜாக்கி வாசுதேவ் பழைய படம்

.savukkuonline.com : 2013ம் ஆண்டு.  அந்த ஆண்டின் தொடக்கமே எனக்கு மிகுந்த மனச்சோர்வாக இருந்தது.  தனிப்பட்ட முறையில் பல்வேறு சிக்கல்கள்.  எனது நிலையைப் பார்த்த எனது நண்பர், உடனடியாக ஈஷா யோகாவில் சேர் என்றார்.  எனக்கு இந்த சாமியார்களை கண்டாலே அலர்ஜி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.  இருந்தாலும் போய் சேர் என்றார்.  எனக்கு எரிச்சல். இருந்தாலும் அவர் பேச்சை தட்ட முடியவில்லை.  யோகா வகுப்புக்கு கட்டணம் 500 ரூபாய் என்றார்.
நானும் சரியாக 500 ரூபாய் எடுத்துக் கொண்டு  மாம்பலத்தில் நடந்த ஒரு ஈஷா யோகா வகுப்புக்கு சென்றேன்.  அவர்கள் கட்டணம் 750 ரூபாய் என்றார்கள்.   எனக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது.  நாளை தருகிறேன் என்று சொன்னதற்கு, இல்லை அண்ணா உடனே கட்ட வேண்டும் அண்ணா என்றார் அந்த ஆன்ட்டி.
உடனே நண்பரை அழைத்து, கட்டணம் 750 ரூபாய்.  என்னிடம் 500 ரூபாய்தான் இருக்கிறது என்றேன்.  அவர், சங்கர், கோவிச்சுக்காம ஏடிஎம் போய் எடுத்து அந்த க்ளாஸ்ல ஜாயின் பண்ணு என்றார்.  எரிச்சலோடு பணம் எடுத்து வந்து யோகா வகுப்புக்கு கட்டணம் செலுத்தினால், நீங்கள் அளித்த நன்கொடைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80 Gயின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று இருந்தது.  எனக்கு இது திருட்டுத்தனம் என்று உடனே தோன்றியது. 
இருப்பினும் நண்பர் திட்டுவாரே என்று, வகுப்பில் சேர்ந்தேன்.
எனக்கு வகுப்பு எடுத்தவர் ஒரு இளம் பெண்.   அழகாக இருந்தார்.   அவர் தான் டிசிஎஸ் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றியதாகவும், பின்னர் அதை ராஜினாமா செய்து விட்டு முழுநேர ஜக்கி சன்னியாசியாக மாறி விட்டதாகவும் கூறினார்.   இத்தனை அழகான பெண், எதற்காக சாமியாராக வேண்டும் என்று எனக்கு புரியவே இல்லை. வகுப்பு தொடங்கும் முன் ஒரு மணி நேரம் பூஜை செய்தார்கள்.    அந்த பூஜையை இன்னொரு அழகான பெண் செய்தார்.    அந்த பூஜையை செய்வதற்கு தனியாக வகுப்பு இருக்கிறது.  அந்த வகுப்பு ஒரு மாதம் எடுக்கப்படும் என்றார்.  வாயில நுழையாத மந்திரத்தை சொல்லிக்கிட்டே மணியாட்றதுக்கு எதுக்கு ஒரு மாதம் என்றுதான் எனக்கு தோன்றியது.
ஒரு வாரத்துக்கு வகுப்பு. யோகாசனம் நன்றாகத்தான் இருந்தது.  ஜக்கி வீடியோ போடுவார்கள். அதில் அவர் உலக வியாக்கியானங்களை பேசுவார்.   வகுப்பின் இறுதி நாளில், ஜக்கியின் படம், ருத்திராட்ச மாலை போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.    ருத்திராட்ச மாலை எவ்வளவு என்று கேட்டதற்கு 1500 ரூபாய் என்றார்கள்.   இதில் என்ன விசேசம் என்று கேட்டதற்கு, தமிழகத்தில் இருக்கும் உத்திராட்ச மாலைகள் போலியானவை, இலந்தை கொட்டையில் செய்பவை. ஈஷா மையத்தில் விற்பனை செய்யப்படும் ருத்திராட்ச மாலைகள், நேரடியாக உத்திராகாண்ட் மாநிலத்திலிருந்து தருவிக்கப்பட்டவை என்றார்கள்.  அதையும் சில பைத்தியங்கள் 1500 ரூபாய் கொடுத்து வாங்கினார்கள்.  அவர்கள் வாங்கியதற்கு தந்த ரசீதை வாங்கிப் பார்த்தால், அதுவும் நன்கொடை ரசீது.
இதில் பெரும் ஊழல் உள்ளது என்பதை உணர்ந்தேன்.   உடனடியாக வகுப்பு முடிந்த மூன்றாவது நாள் கோவை வெள்ளியங்கிரி பகுதிக்கு நேரடியாக சென்றேன்.   ஆசிரமத்தின் உள்ளே சென்றால், உள்ளே செல்ல கடும் கட்டுப்பாடுகள்.   செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது.   செல்போனை நுழைவாயிலில் உள்ள இடத்தில் கொடுத்து விட வேண்டும்.
அந்த இடத்தில் தியான மண்டபம் என்று ஒன்றை வைத்திருந்தார்கள்.  அதன் உள்ளே சென்றால், கண்ணை மூடிக் கொண்டு பல பேர் அமர்ந்திருந்தார்கள்.   நீங்களும் உட்காருங்கள், மனது அமைதியாகும் என்றார்கள்.  உட்கார்ந்தால் என்னால் கண்ணை மூட முடியவில்லை.  மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கவே தோன்றியது.  வேடிக்கை பார்த்து விட்டு வந்து விட்டேன்.  பின்னர் ஆசிரமத்தின் வெளியே சென்று, அதன் மொத்த சுற்றளவையும் பார்த்தேன்.  அருகே இருந்த பழங்குடியின குடியிருப்புக்கு சென்று, அந்த பழங்குடி மக்களிடம் பேசினேன்.  இந்த ஆசிரமம் வந்ததால் தங்கள் வாழ்க்கையே எப்படி பாதிக்கப்பட்டது என்பதை விளக்கினார்கள்.    ஆசிரமத்துக்காக நூற்றுக்கணக்கான மரங்களை எப்படி வெட்டி வீழ்த்தினார்கள் என்பதை விளக்கினார்கள்.

அருகே இருந்த கிராமங்களில் சென்று பேச்சு கொடுத்தபோது, எப்படி ஈஷா நிறுவனம், தங்கள் நிலங்களையெல்லாம் வாங்கியது என்பதை கூறினார்கள்.  நிலத்தை விற்பனை செய்ய மறுப்பவர்களின் நிலத்தை சுற்றி உள்ள நிலத்தை வாங்கி வேலி அமைத்து, நிலத்துக்கு பாதையில்லாமல் நெருக்கடி உண்டாக்கி, எப்படி அந்த மொத்த இடத்தையும் கபளீகரம் செய்தார்கள் என்று விவரித்தனர்.
ஆசிரமத்தின் உள்ளே  மிகப் பிரம்மாண்டமான கட்டுமானங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.   பளிங்கு கற்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
விசாரித்தபோது  ஈஷா மையத்தில் ஒரே ஒரு சதுர அடிக்கு கூட உரிய அனுமதி பெறவில்லை என்று தெரிந்தது.  அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, அத்தனைக்கும் ஆசைப்படாதே என்று முதல் கட்டுரையை 10 மார்ச் 2013 அன்று எழுதினேன்.
அந்த கட்டுரையை எழுதும் வரையில், ஜக்கி வாசுதேவுக்கு எதிராக இந்தியா முழுமையிலும் ஒரே ஒரு குரல் கூட எழுந்ததில்லை.  ஏறக்குறைய அவர் கடவுளாகவே வணங்கப்பட்டு வந்தார்.   அந்த முதல் கல்லை எரிந்தபோது, அதனால் விளைவுகள் ஏற்படுமா இல்லயா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
கோவையிலிருந்து திரும்பியதும், இருந்த ஆவணங்களை வைத்து,  அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள ஈஷா யோக மையத்தின் கட்டிடங்களை இடிக்க  வேண்டுமென்று, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்தேன்.   அதன் பின், ஈஷாவுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.  அனுமதி இல்லாமல் நடைபெறும் ஈஷா பள்ளியை மூட வேண்டும் என்று நான்கு பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்டன.
அப்போது ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா நடைபெற இருந்தது.  வனப் பகுதியில் ஒலி பெருக்கிகளை வைத்து விழா நடத்துவதால், வன விலங்குகள் பாதிக்கப்படும் என்பதால் விழாவை தடை செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவுக்காக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது.  நீதிமன்றம், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஒலி பெருக்கி வைக்க கூடாது என்று உத்தரவு பெறப்பட்டது.  வன அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.  அப்போது அந்த இடத்தில் பணியில் இருந்த வனத் துறை அதிகாரியிடம் பேசினேன்.  அவர், போன வருசம் மாதிரி இல்ல தம்பி. இந்த வாட்டி கோர்ட் உத்தரவால, சத்தம் கம்மியா இருக்கு என்றார்.
அந்த நிகழ்ச்சி ராஜ் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.   அந்நிகழ்ச்சியில் பேசிய ஜக்கி வாசுதேவ், இந்த நிகழ்ச்சியை தடை செய்ய சிலர் முயற்சித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்றார்.  டேய் மாமா நீ காண்டாயிட்டல்ல அது போதும்டா என்றுதான் என் மனதில் தோன்றியது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஜக்கியோடு சேர்ந்து நடனமாடியவர், அப்போது ஜக்கியின் வழக்கறிஞராக இருந்து தற்போது, உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள பிஎன்.பிரகாஷ் என்பது கூடுதல் தகவல்.

அதன் பிறகு, வழக்குகளை வாபஸ் பெறச் சொல்லி, சமாதானத் தூது வந்தனர்.   வாபஸ் பெறுகிறோம்.  ஆசிரமத்தை மூடுங்கள் என்றதும், கிளம்பிப் போனவர்கள் திரும்ப வரவேயில்லை.
அதன் பின்னர், 3 செப்டம்பர் 2014 அன்று, திருட்டுச் சாமியாரும், தொள்ளாயிரம் அடிமைகளும் என்ற இரண்டாவது கட்டுரையை எழுதினேன்.   ஜக்கியின் அடிமைகள் என்னை பேசாத பேச்சு இல்லை.   கோடியில் புரளும் கேடி பிப்ரவரி 2015ல் வெளியானது.  5 ஜனவரி 2015 அன்று, ஜக்கி வாசுதேவ் என்ற சமூக விரோதி என்ற மூன்றாவது கட்டுரையை எழுதினேன்.  வில்லா கட்டும் வில்லன் என்ற கட்டுரையை 1 மார்ச் 2017 அன்று எழுதினேன்.
இந்த கட்டுரைகளுக்கெல்லாம் பின்னர், ஈஷா மீதான மாயை குறைந்தது.  பொது வெளியில் ஈஷா குறித்து பல விமர்சனங்கள் வந்தன.  இன்று, சிஏஜி அறிக்கையில், சவுக்கில் 10 மார்ச் 2013 அன்று எழுதிய கட்டுரையில் உள்ள அனைத்து விவகாரங்களும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈஷா செய்யும் வருமான வரி ஏய்ப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.  உரிய முறையில் விசாரணை நடைபெறவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்படும்.
இணைப்பு 1
இணைப்பு 2
ஜக்கி இன்று பல நூற்றுக்கணக்கான கோடிகளின் மீது அமர்ந்திருக்கிறான்.  மோடி அவன் ஆசிரமத்துக்கு வருகை தருகிறார்.   எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி.வேலுமணி, தங்கமணி என்று ஜக்கியின் பாக்கெட்டில் இல்லாத அமைச்சர்களே கிடையாது.   இந்தியா முழுக்க உள்ள பல உயர் அதிகாரிகள் ஜக்கியின் பக்தர்கள்.
நம்மிடம் பட்டாபட்டியைத் தவிர வேறெதுவுமில்லை.   ஆனால், இத்தனை செல்வாக்கு உள்ள ஒரு நபரின் காதில் புகுந்த எறும்பாக குடைச்சல் கொடுக்கும் இன்பம் இருக்கிறதே !!!!   அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
ஜக்கி போன்ற செல்வாக்கு மிகுந்த சாமியார்களை எதிர்ப்பது அத்தனை எளிதல்ல.  ஆக்டோபஸ் போல இவர்களின் கரங்கள் நீளாத இடமே கிடையாது.   ஆனால் அதையும் மீறி, அவன் கண்ணில் விரலை விட்டு ஆட்டியுள்ளோம்.      இதுதான் நமது வெற்றி.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
உரை:
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

கருத்துகள் இல்லை: