ஞாயிறு, 8 ஜூலை, 2018

வெளிநாட்டு திமுக கிளைகளுக்கு அங்கீகாரம்: கனிமொழி உறுதி!

வெளிநாட்டு திமுக கிளைகளுக்கு அங்கீகாரம்: கனிமொழி உறுதி!
மின்னம்பலம் திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாளை தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் ஜூலை 6ஆம் தேதி துபாய் நாட்டில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். சிறப்புரையாற்றிய அவர் கருணாநிதியின் அரசியல் பெருமைகளை எல்லாம் அடுக்கினார். அவர் பேசும்போது,
“இப்போது சிலர், ‘தமிழகத்துக்கு இன்று திராவிட இயக்கம் தேவைப்படவில்லை. திராவிட இயக்கக் கருத்துகள் தேவைப்படவில்லை. தமிழகம் பெரியாரைத் தாண்டி வந்துவிட்டது’ என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் ஒரே ஒரு நாள், ஒரு மனிதன் அவரை மனிதன் என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை... அவர், ‘பெரியார் சிலையை தாக்கி உடைப்போம்’ என்று சொன்னபோது தமிழகமே ஒன்று திரண்டு நின்றது. பெரியார் சிலைக்கு முன்னால் பாதுகாக்க நின்றவர்கள் இளைஞர்கள், பெண்கள். அவர்கள் திமுக, திக என்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றில்லை. கட்சிகளைக் கடந்த பொதுமக்கள் திரண்டு, ‘முடிந்தால் கை வைத்துபார்’ என்று திரண்டார்கள். இதன் மூலம் தமிழகத்தில் மத வாதத்துக்கு இடமில்லை, பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு இடமில்லை, விஷ விருட்சங்களுக்கு இடமில்லை என்று இந்த ஒரே சம்பவம் தெளிவாக்கியது.
திராவிட இயக்கத்தை ஒழிப்போமென்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் அன்றோடு தங்கள் கனவை மூட்டை கட்டிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். இதை உருவாக்கத்தான் தலைவர் கலைஞர் எப்போதும் போராடினார்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “இன்று இந்தியாவை ஆள்பவர்கள் வளர்ச்சி என்ற வாக்குறுதியை அளித்துதான் ஆட்சிக்கு வந்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய் 15 லட்சம் ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் போடுவதாகச் சொன்னார்கள். ஆனால், பாக்கெட்டில் இருக்கும் ஆயிரம், ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். இன்று அனைவருக்கும் மின்சாரம் என்று அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் இதை இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் கலைஞர் நிறைவேற்றிக் காட்டிவிட்டார்.
அவர்கள் சொல்லும் வளர்ச்சி என்பது சிலருக்கான வளர்ச்சி, பணம் வைத்திருப்பவர்களுக்கான வளர்ச்சி. ஆனால், திராவிட இயக்கம் சொல்லும் வளர்ச்சி என்பது அத்தனை பேரையும் இணைத்து உருவாக்கும் வளர்ச்சி. ஆண்டான் அடிமை என்ற பேதமில்லாமல் அனைவருக்குமான வளர்ச்சிதான் திராவிட இயக்கம் முன்வைத்த வளர்ச்சி’’ என்றார் கனிமொழி எம்.பி.
துபாய் வந்த கனிமொழியிடம் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் குறிப்பாக அங்கே திமுகவுக்காகச் செயல்படக் கூடியவர்கள் பலரும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதுபற்றி மேடையில் பேசும்போது குறிப்பிட்ட கனிமொழி,
“இங்கே பலர் என்னிடம் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள். அதில் முக்கியமான ஒன்று வெளிநாடுகளில் இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகக் கிளைகளுக்கு தலைமையின் அங்கீகாரம் கேட்கிறீர்கள். மிக மிக முக்கியமான கோரிக்கையை தளபதி அவர்களிடம் தெரிவித்து` என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்வேன்’’ என்று கூறி நிறைவு செய்தார் கனிமொழி.

கருத்துகள் இல்லை: