புதன், 11 ஜூலை, 2018

தமிழக லோக் ஆயுக்தா சட்டம் ஒரு அட்டை கத்தி? கடும் விமர்சனங்கள் ....

விகடன் : கா . புவனேஸ்வரி : : பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையில் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா, ஜூலை 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பைக் கொண்டுவந்துள்ள 17-வது மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. பொதுத்துறை ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம்படைத்த தனி அமைப்பாக 'லோக் ஆயுக்தா' செயல்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா மசோதா, வெறும் கண்துடைப்புக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த மசோதா மிகவும் பலவீனமானது என்று கூறி, பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு செய்துள்ள நிலையில, 'மசோதா தாக்கல் செய்யப்படும் முன் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும்' என்று வலியுறுத்தி, அறப்போர் இயக்கமும், சட்டப் பஞ்சாயத்து இயக்கமும் இணைந்து சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தின. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை போலீஸார் கைது செய்தனர். இந்தநிலையில், லோக் ஆயுக்தா சட்டத்தில் உள்ள பலம், பலவீனங்கள் என்னென்ன என்பது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம்.

அவர், "லோக் ஆயுக்தா குழுவை அமைக்கும் அதிகார வரம்பில் முதலமைச்சர், சட்டப்பேரவை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் என மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். சபாநாயகருக்குப் பதில், சட்ட வல்லுநர்களை நியமித்திருக்க வேண்டும். இந்த அதிகாரவரம்பில், எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ளவில்லை என்றாலும், முதலமைச்சரும், சபாநாயகரும் சேர்ந்து லோக் ஆயுக்தா விசாரணைக் குழுவை நியமிக்கும் அதிகாரத்தைப் பெறும் வகையில் மசோதாவில் வகைசெய்யப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், குறிப்பிட்ட ஒரு உறுப்பினரை நியமிப்பதில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முரண்பாடு இருக்கும்பட்சத்தில், அவர் அந்த உறுப்பினரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், சபாநாயகரும், முதலமைச்சரும் சேர்ந்து எடுக்கும் முடிவு, மெஜாரிட்டி உறுப்பினர்களின் முடிவாக ஏற்கப்பட்டு விடும். அந்த வகையில் முதலமைச்சரும், சபாநாயகரும் சேர்ந்து, அவர்களுக்குச் சாதகமான நபர்களை நியமிக்கும்நிலை உருவாகும். எனவே, இந்த சட்ட மசோதா அடிப்படையிலேயே பலவீனமான நிலையில் ஜெயராம் வெங்கடேசன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அந்த அமைப்பின் செயல்பாடுகள் நேர்மையாக நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது.
இது ஒருபுறம் இருக்கட்டும்...மேலும் இதில் உள்ள ஓட்டைகளையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசின் கிளாஸ்-ஏ, கிளாஸ்-பி பிரிவு அதிகாரிகள் மீதான புகார்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தும் என்று மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி விசாரித்து அறிக்கை கொடுத்தால், அதன்மீது தேவைப்பட்டால் லோக் ஆயுக்தா விரிவான விசாரணை நடத்தலாமே தவிர, நேரடியாக நீதிமன்றத்துக்குப் போகமுடியாது. மாறாக, தமிழக அரசுதான் அதன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஒருவேளை அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாக இருந்தால், மாநிலத்தில் ஆட்சிசெய்யும் அரசு எப்படி விசாரணையை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு கொண்டுபோகும்? எனவே, குற்றம் இழைக்கும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் எளிதில் தப்பித்துக் கொள்ள வழிவகை ஏற்படும். தவிர, பொய்யான புகார் அளிக்கப்பட்டால், அந்தப் புகார் கொடுத்தவர்களுக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய்வரை அபராதமும் விதிக்கப்படும் என்று லோக் ஆயுக்தா மசோதவில் கூறப்பட்டுள்ளது.
செந்தில் ஆறுமுகம் சட்டப் பஞ்சாயத்து புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தும்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான அதிகாரிகள் விசாரணை நடத்தினால், அந்த விசாரணை எப்படி நேர்மையாக நடைபெறும்? அதுபோன்று நேர்மையாக விசாரணை நடைபெறாமல் போனால், புகார் கொடுத்தவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். அப்படியானால், புகார் கொடுக்க யார் முன்வருவார்கள்? இது புகார் கொடுக்க முன்வருவோருக்கு விடப்பட்டுள்ள மறைமுக மிரட்டல் இல்லையா? மேலும், லோக் ஆயுக்தா அமைப்பை எத்தனை நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற காலவரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை. இப்படி பல்வேறு குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, பெயர் வைக்கப்படாத மற்றொரு அரசியல் கட்சியே" என்றார்.
லோக் ஆயுக்தா மசோதா குறித்துப் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், "முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் புகார்கள், லோக் ஆயுக்தாவால் விசாரிக்கப்பட்டு போதிய ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கித் தருகிற பணிகளை லோக் ஆயுக்தா செய்யாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, லோக் ஆயுக்தா சட்டத்தில் விசாரணைப் பிரிவு (Inquiry wing) மட்டுமே உள்ளது. வழக்குத்தொடரும் பிரிவு (Prosecution Wing) இல்லை. அதேபோன்று பிரிவு 7(a) -ல் லோக் ஆயுக்தாவின் விசாரணையில் 'அமைச்சர் ஊழல் செய்துள்ளார்' என்று தெரியவந்தால், அதுகுறித்த விசாரணை அறிக்கையை முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கும் 'பரிந்துரையை' மட்டுமே லோக் ஆயுக்தா செய்கிறது. அதேபோன்று, முதலமைச்சர் ஊழல் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தால், அதுகுறித்த அறிக்கையை கவர்னருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் மட்டுமே லோக் ஆயுக்தாவுக்கு உள்ளது.
ஏற்கெனவே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவந்துள்ள இமாச்சல பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டத்தின்கீழ், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் பிரிவு இடம்பெற்றுள்ளது. விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால், சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குத்தொடர்ந்து,ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வாங்கித்தரும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்ட மசோதாவானது 'கூர் இல்லாத அட்டகத்தியாக' மட்டுமே உள்ளது. அதேபோன்றுஜெயக்குமார் மாநில அரசின் தலையீடு உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையை லோக் ஆயுக்தா அமைப்பிற்குள் கொண்டுவராமல், லோக் ஆயுக்தாவிற்கு இணையான அமைப்பாக தொடர வழிசெய்திருப்பது ஊழலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்தப்புள்ளிகள், பணி நியமனங்கள், பணியிட மாற்றம் போன்ற லஞ்சமும், ஊழலும் நடக்க வாய்ப்புள்ள துறைகள் மற்றும் அத்தகைய வாய்ப்புகள் பற்றி லோக் ஆயுக்தா விசாரிக்காது என்று வரையறை செய்திருப்பது ஊழல்வாதிகளைக் காப்பற்றும் முயற்சியாகும். அதேபோன்று ஊழல் புகாரில் 'முகாந்திரம்' இருக்குமானால் அவர்களை பதவி விலகச் சொல்லிப் பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளின் ஆலோசனையின்பேரில் உருவான மசோதா என்பதற்கு இதுவே உதாரணம் எனலாம். மேலும் அரசாங்கம் தரும் பட்டியலில் இருந்துதான் லோக் ஆயுக்தாவின் செயலாளர் நியமனம் செய்யப்படவேண்டும் என்பது லோக் ஆயுக்தாவின் தன்னாட்சியை தட்டிப்பறிக்கும் செயல் ஆகும். இப்படியான பல்வேறு பலவீனங்களுடன் மிக மோசமாக  வடிவமைக்கப்பட்ட சட்ட மசோதாவாக அமைந்துள்ளது" என்றார்
 இந்த குறைபாடுகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசியபோது,"சரியான முறையில் தான் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.எந்த குறைபாடும் இதில் இல்லை .இதனை கவனக்க கூடியவர்களின் பார்வையில் உள்ள குறைபாடு காரணமாக தவறான விமர்சத்தை வைக்கின்றனர்.அதையும் மீறி அவர்கள் குறைப்பாட்டை உறுதிபடுத்தினால் அதில் திருத்தம் கொண்டு வருவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.எனவே இது ஒன்றும் மாற்றி அமைக்க முடியாத சாசனம் அல்ல.திருத்த கொண்டு வரலாம்" என்றார்.

கருத்துகள் இல்லை: