வியாழன், 12 ஜூலை, 2018

கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி !

வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.
Vyasarpadi football team
இங்கு வயது வித்தியாசம் தேவையில்லை, ஆர்வம் மட்டுமே போதுமானது
வினவு :உலகம் முழுவதும் 7.6 பில்லியன் மக்கள் தொகை இருக்குமென்றால் அதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் ரசியாவில் நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா இல்லை. இனியும் இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்பது அனைவரும் அறிந்ததே!
கால்பந்து விளையாட்டு என்றாலே வீரர்கள் பிரேசிலின் நெய்மர், அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் கிறிஸ்டியானோ ரேனால்டோ ஆகியோர் நினைவில் வருவார்கள்.இவர்களைப் போல் “உலக கோப்பைப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாட வேண்டும்” என்ற கனவோடு சென்னை வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்து மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் தருண், ஏழாவது படிக்கும் மணிகண்டன், பத்தாம் வகுப்பு பாலமுருகன், மாணவிகள் விஜி, பூஜா, ……. இன்னும் நூற்றுக்கணக்கானோர். அந்த கால்பந்து மைதானத்தில் “STEDS” என்ற தங்கள் அணியின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸி டீ-சர்ட்டுகளை அணிந்துகொண்டு பந்தை  துரத்துகிறார்கள். அவர்களுக்கு இணையாக சிறுமிகள், பள்ளி-கல்லூரி மாணவிகள் என்று பாலின வேறுபாடு இன்றி பந்தை, மைதானம் முழுக்க விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியம் நிரம்பிய நம் கண்கள் மைதானம் முழுக்க விரிகிறது!

இந்திய அளவில் கால்பந்து நட்சத்திரங்களாக வலம் வரும் பாய்சங் பூட்டியா, சுனில் சேத்ரி, ஐ.என்.விஜயன் போன்று, தமிழ்நாட்டுக்கு ஏராளமான கால்பந்து நட்சத்திர வீரர்களை உருவாக்கியிருக்கிறது இந்த முல்லைநகர் கால்பந்து மைதானம். இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடும் நந்தகுமார், உமாசங்கர், உமாபதி மற்றும் 2010-ம் ஆண்டில் சுவிடன் அணியை அதன் மண்ணிலேயே தோற்கடித்த தியாகு போன்ற வீரர்கள் தோன்றிய களம் இது.


Vyasarpadi football team
மைதானத்தில் பல இடங்களில் சேதம் மறைக்கப்பட்டு ஒட்டுபோட்டாலும் எங்களின் முயற்சியில் எந்த சேதமும் இல்லை என்கின்றனர் இவர்கள்.
பிரேசில், தென் ஆப்பிரிக்கா என்று பல உலக நாடுகளுக்கும் டெல்லி, புனே, பம்பாய், பெங்களூர் என்று இந்திய அளவிலும் சென்று விளையாடும் வீரர்கள் இவர்கள். ஆனாலும் இவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது? இந்தியாவின் சார்பாக உலகக் கோப்பை போட்டியில் விளையாட ஒரு அணிக்கான வீரர்களைக் கூட நம்மால் உருவாக்க முடியவில்லையே ஏன்? என்ற நம் ஆதங்கத்திற்கு அழுத்தமாக பதிலளிக்கிறது இவர்களின் வாழ்க்கை !
தேசிய விளையாட்டு வீரர்களாக இவர்கள், சுயமாக உயர்ந்த பிறகும் இவர்கள் நாள்தோறும் சந்திக்கும் அவமானங்கள் ஏராளம். அதுவும் பெண் வீரர்கள் படும் துயரங்கள்  பற்றி சொல்லவே வேண்டாம்! ஆனாலும், இவர்கள் எல்லாவற்றையும் தம் காலணியில்  ஒட்டிக்கொள்ளும் கசடுகளை உதறுவதைப்போல் உதறிவிட்டு முன்னேறுகிறார்கள். “அவமானங்களை நினைத்துக் கொண்டிருந்தால்  விளையாட்டுப் பயிற்சி வீணாகி விடும். எங்களுக்கு விளையாட்டுதான் வேதனைகளை மறக்கும் மருந்து. இதற்காக எதையும் தாங்கிக் கொள்வோம்” என்கின்றனர், பந்தை சக வீரருக்கு பாஸ் செய்தபடியே.
தேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரராவதற்கு எண்ணற்ற தியாகங்களும், கடின உழைப்பும் தேவை. உடல்ரீதியாக, மனரீதியாக, தந்திரோபாயமாக ஒரு வீரர் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.  இதனுடன் ஆர்வம், விளையாட்டு உள்கட்டமைப்பு, பல ஆயிரம் மணி நேர பயிற்சி, சிறந்த பயிற்சயாளர் ஆகியவை உடன்சேரும்போது ஒரு மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் உருவாகிறார்.


Vyasarpadi football team
இந்திய குழந்தைகள் பலர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். இருப்பினும் நாங்கள் கொண்டிருக்கும் இலட்சியம் எங்கள் கால்களுக்கு உரமேற்றும்.
கால்பந்து விளையாட்டின் “இதயமே” கால்கள்தான். பந்தை பலமாக எட்டி உதைக்கும் வலிமை இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் பார்த்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களில் 10 பேர்கூட தேவையான உடல் தகுதியில் இல்லை. ஆனாலும் அவர்கள் முகங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. உன்னுடைய ஆசை என்ன? என்று 10 வயது நந்தாவிடம் கேட்டதும், “நெய்மர் அடிக்கும் பந்தை நான் பாக்ஸில் தடுக்க வேண்டும். கண்டிப்பாக நடக்கும். ஆனால் அதுவரை அவர் ஆடுவாரா என்பது தெரியாது.” என்று, கண்கள் ஒளிர சொல்கிறான்.
அதேபோல் 3 அடி உயரம் கூட இல்லாத சிறார்கள்கூட “அண்ணா.. நான் டிரிபிள் பண்ணுவேன்னா. பாக்கிறயா? தோ.. பாரு” என்று பந்தை தத்திதத்தி உதைத்து, சிரிக்கிறார்கள்.
இவர்களிடம், காலையில் மைதானம் வருவதற்கு முன் என்ன சாப்பிட்டீர்கள் என்றோம், “அம்மா, வீட்டு வேலைக்கு போவுது. இன்னிக்கு ஞாயித்து கிழமையா…தூங்குது. அதான் அது ஒன்னும்  குடுக்கல. இங்க எங்க மாஸ்டர்தான் பிரட், சுண்டல் கொடுத்தாரு…அவ்வளதான்” என்று சொல்லிக்கொண்டே பந்தை மார்பில் வாங்க ஓடிஓடி பயிற்சி செய்கிறான் குமார். வேறு எங்கே காணமுடியும் இக்காட்சிகளை!


தையல் கிளாஸ், பரத நாட்டியம் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் அல்ல நாங்கள் !
மணலியிலிருந்து பயிற்சிக்கு வந்திருக்கும் பி.எஸ்.சி., பிசிக்ஸ் படிக்கும் ஜெயஶ்ரீ, “காலையில் 5 மணிக்கு கிளம்பனாதான் இங்க வரமுடியும். நான் 3 வருசமா இங்க விளையாடுறேன். பல மேட்ச் ஜெயிச்சியிருக்கிறோம். ஆனா இன்னமும் இங்க பக்கத்துல இருக்கிற நேரு ஸ்டேடியத்தில எங்களால நுழைய முடியல. எப்ப போனாலும் அணியில சேர்த்துகின மாதிரி கணக்கு காமிக்கிறாங்க..  தனியார் கல்லூரி பசங்கள ஆட வக்கிறாங்க. நாங்க அங்க நின்னுக்கிட்டு அவங்களுக்கு தண்ணி கொடுக்கணும். அதிகபட்சமா மைதான கோட்டுள்ள நில்லு, ’வாச்..’ பண்ணு.. னு. சொல்லுவாங்க… அவ்ளோதான்.  இப்படிதான் நாங்க அங்க போயிட்டு வறோம். அங்க விளையாடி கத்துகணும்னு ஆசை. ஆனா எங்கள அவங்க விளையாட விடமாட்டாங்க” என்று  சொல்லிக் கொண்டிருக்கும்போது..
பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரதி மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி, ”நாங்க வியாசர்பாடின்னு சொன்னா போதும், சொல்லக்கூட வேண்டியதில்லை.  அவுங்களே நாங்க யாருன்னு கண்டுபிடிச்சுடுவாங்க,  நீங்க வியாசர்பாடிதானே? உள்ள எல்லாம்… கூப்பிடாம வராதீங்க. வெளிய நில்லுங்க. நாங்க கூப்பிடுவோம். என்று பிற  கல்லூரி மாணவிகள் மத்தியில் அவமானப்படுத்துவார்கள். மற்றவர்கள் உள்ளே அரட்டை அடித்துக்கொண்டிருப்பதை கண்டுகொள்ள மாட்டார்கள்.” என்றார், கோபமாக.


வியாசர்பாடி
பல வழிகளில் நாங்கள் பிரச்சினைகளை சந்தித்தாலும் இந்த கால்பந்து எங்களை ஒய்ந்திருக்க விடுவதில்லை
அங்கு, கோச்சராகவும், டிரெயினராகவும் இருக்கும் பழைய மாணவர்கள் சொல்வது நமக்கு மேலும் அதிர்ச்சியளிக்கிறது….! “கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் இங்கு எங்களுக்கு நடக்கிறது. கால்பந்து விளையாட்டில் 4-வது கிரேடிலிருந்து முதலாவது கிரேடுக்கு முன்னேறி சீனியர் லெவலுக்கு சென்றாலும்  அதிகாரிகள் எங்களை மதிக்க மாட்டார்கள். நீங்கள் எப்படி கோப்பையுடன் சென்று விடுவீர்கள், பார்த்து விடுகிறோம் என்று சம்மந்தமே இல்லாமல் அற்ப காரணங்களைக் காட்டி புள்ளிகளைக் குறைப்பார்கள். புதிய அணியை நுழைத்து கோப்பையை பறிப்பார்கள்.
தனியார் கிளப்புகளின் முதலாளிகள்தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். சென்னை கால்பந்து சங்கம், பணத்தில் புரண்டாலும்  தன் புகழுக்கும் அதிகாரத்துக்கும் மட்டுமே அதை பயன்படுத்துகிறது. எங்கு போட்டி நடந்தாலும் அணிகளுக்கு தேவையான ஜெர்சி முதல் கிட் வரை யார் ஸ்பான்சர் செய்கிறார்களோ அவர்கள்தான் கோப்பையையும் எடுத்துச் செல்வார்கள்.
தனியார் கல்லூரி முதலாளிகள் இதற்காக தங்கள் ஆட்களை பல அதிகார மட்டங்களில் வைத்திருக்கிறார்கள். அவர்களால் நியமிக்கப்பட்ட செலக்டர், ட்ரெயினர், கோச்சர் போன்றவர்கள், எங்களை போன்ற எளியவர்களை வெளியே தள்ளுவதில் தேவையான பயிற்சி எடுத்தவர்கள். வேறு எதுவும் தெரியாது அவர்களுக்கு! அதிகாரிகளும் அவர்களும் ஓர் அணி. நாங்கள் எப்போதும் அவர்களுக்கு எதிரணி. அப்படிதான் எங்களை அவர்கள் பார்க்கிறார்கள்.


வியாசர்பாடி
பழைய முறைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அவர்கள் செய்யும் கூத்துகளை கேட்டால் நீங்கள் மயக்கம் அடைவீர்கள். சென்ற ஜுனியர் கால் பந்து உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில்கூட போனவர்கள் ஜெயிக்கவில்லை. உள்ளூரில் மானம் போவதை தவிர்க்க, தீடீரென வங்கதேசத்திற்கு அங்கிருந்தே பிளைட் ஏறினார்கள். அவர்களுடன் விளையாடி,  கோப்பையுடன் இங்கு வந்து, அது உலகக்கோப்பை மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். இது ஊரே நாறிய பிறகும் கமுக்கமாக துடைத்துக்கொண்டனர்.
அவலம் என்னவென்றால், எங்களிடம் தோற்ற ஸ்வீடன் ஜூனியர் அணி வீரர்கள்தான் இப்போது உலககோப்பை அணியில் விளையாடுகிறார்கள். நாங்கள் இன்னும் நடுத்தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இதே கதைதான் இந்தியா முழுக்க நிலவுகிறது. உலககோப்பையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் அதில் நுழையக்கூட முடியவில்லை. 97-வது இடத்தில் இருக்கிறோம்.
ஆனால் மற்ற எது எதிலேயோ முதல் இடத்தில் இருக்கிறோம். இருந்தாலும் நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம். நாங்கள் கற்ற கால்பந்து விளையாட்டும் அதற்கு எங்களை அனுமதிக்காது! கால்பந்தும் எங்களை விடாது, காலைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கும் என்கின்றனர்.


வியாசர்பாடி
உடன் விளையாடுவது ஆணா பெண்ணா என்பது எங்கள் கவனத்திற்கு வந்ததில்லை. எங்கள் நோக்கம் கோல் அடிப்பதே !
இந்த கால்பந்து மைதானத்தின் நிறுவனராக இருக்கும் உமாபதி கடந்த இருபது ஆண்டுகளாக கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். “கிரிக்கெட் போன்ற விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கால்பந்து விளையாட்டுக்கு இல்லை. அதனால் தான் பல்வேறு நிறுவனங்கள் அதுல ஸ்பான்சர் பண்றாங்க.  கால்பந்து வீரர்களை கண்டு கொள்வதில்லை. இப்ப நடந்துட்டு வர உலக கோப்பைக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்திருக்க மாதிரி தெரியுது.. அதுல கலந்துகிட்ட போட்டியாளர்கள் நல்ல ஆரோக்கியமாவும், உடல் வலிமையோடவும் இருக்காங்க. இதே நம்ம நாட்ல சொல்லவே வேண்டாம்.. முதலில் கால்பந்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் ரொம்ப குறைவா இருக்கு.. இந்த மைதானத்துல அப்படிபட்ட வசதிகள் எதுவும் இல்லாமதான் பல வீரர்களை நாங்க உருவாக்கி இருக்கோம். அதுக்கு காரணம் அவர்கள் டெடிகேட்டடாக இருக்கிறார்கள். சத்தீஸ்வரி, திலீபன், பீமாபாய், டிக்கோ, தியாகு போன்ற சிறந்த வீரர்களை உருவாக்கியிருக்கோம்.
ஒவ்வொரு உதவியும் யாரிடமாவது கேட்டு கேட்டு செய்யுறோம். பயிற்சியின் போது அடிபட்டா சீக்கிரம் ரெக்கவர் ஆக சரியான ஸ்போர்ட்ஸ் கிளினிக் இல்ல…  இதனால அடிபட்டவங்க சீக்கிரம் பயிற்சிக்கு வர முடியாத நிலை இருக்கு.  பசங்களோட திறமையை கண்காணிக்கும் வசதி இல்லை. வீடியோக்களை போட்டு காண்பித்து அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட முடியவில்லை. சக வீரரை களத்தில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற சூட்சுமங்களை கற்றுத்தருவதில் சிக்கல் உள்ளது. தரமான உணவு இல்லை. முறையான கட்டமைப்பான மைதானம் இல்லை. இப்ப இருக்கக்கூடிய தொழில்நுட்பத்துல பயிற்சிக்கான சாதனங்கள் எவ்வளவோ வந்துட்ட பிறகும் இன்னும் நாங்க பழைய முறையிலதான் பயிற்சி கொடுக்கிறோம்.
எல்லா வசதியும் உள்ளவங்க கிட்ட ஆட்கள் இல்ல… எங்க கிட்ட ஆட்கள் சிறந்த பயிற்சியாளர்கள் எல்லோரும் இருந்தும் வசதி இல்ல…….. இந்த விளையாட்டுக்கு அரசு எங்களுக்கு எல்லா உதவியும் செய்து கொடுத்தா ஒரு வருஷத்துல டாப் பிளேயர்களை உருவாக்கி விடுவோம் என்கிறார் நம்பிக்கையுடன்!
-வினவு களச் செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை: