புதன், 13 டிசம்பர், 2017

கௌசல்யா சங்கர் ! சொந்தமேயானாலும் தண்டனை பெற்று தந்த புரட்சி பெண்!


Shalin Maria Lawrence : கவுசல்யாவின் சங்கரை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் அந்த இனிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன் ,அலைபேசி அழைத்தது.
மாரியம்மாள் என்கிற பெயர் மொபைல் திரையில்.எதிர் முனையில் மாரியம்மாளின் கண்ணீர் மல்கும் தழு தழுத்த குரல். "மேடம் எனக்கு இப்போதான் மேடம் மனசு ஆறுதல் அடைஞ்சு இருக்கு ...அந்த கொழந்த கௌசல்யாவுக்காக நான் ரொம்ப சந்தோஷப்படுறேன் மா...என் புள்ளைக்கும் நியாயம் கிடைக்கும்னு நம்பிக்க வந்துடுச்சுமா...எவிடேன்ஸ் கதிர் சார் இருக்குற வரைக்கும் எங்களுக்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கும்மா " என்று சொல்லிய மாரியம்மாளின் மகன் முத்துக்குமார் கடந்த 2014 ஆம் வருடம் ஆணவ கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணம் கண்டெடுக்கப்பட்டது .பழனியை சேர்ந்த ஒரு குக்கிறாமத்தின் முத்துக்குமார் தன் கிராமத்திலேயே முதல் தலித் முதுகலை பட்டதாரி (Msc.Chemistry.B.Ed).
காதலியின் மொபைல் அழைப்பிற்கு பிறகு அவரை சந்திக்க சென்றவரை துடி துடிக்க அடித்து கொன்று கிணற்றில் வீசினர் அந்த பெண்ணின் உறவினர்கள் (கௌண்டர் சமூகம் ).
சங்கரின் கொலையாளிகளுக்கு கிடைத்த இந்த தண்டனை இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது

1.ஆணவ கொலை என்கிற சாதிய வன்முறையின் உச்சகட்ட கோரத்திற்க்கும் ,சாதிய சமூகத்திற்கும் சட்டம் கொடுத்துள்ள சம்மட்டி அடி இது.
இந்தியாவில் 5 சதவிகிதம் தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கிறது .
அதில் 25 சதவிகிதம் என்கிற அதிகம் எண்ணிக்கை நடப்பது மஹாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவில் .

ஆனால் திராவிட பூமி என்று சொல்லப்படும் தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே குறைந்த பட்சமாக வெறும் 2 சதவிகிதம் சாதி மறுப்பு திருமணங்கள் தான் நடக்கின்றன அதற்கு காரணம் அதன் தொடர்பாக நடந்தேறும் வன்முறைகள் குறிப்பாக ஆணவ கொலைகள் .அவை சார்ந்த பயங்கள்.
இதற்கு என்ன காரணம் ?
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் சாதிய ரீதியான வன்முறைகளுக்கு பெயர்போன இடைநிலை சாதிகளை சார்ந்தவர்கள் இங்கே அதிகார மையமாக இயங்கி வருகிறார்கள்.இந்த அதிகார வர்கம்தான் இந்த ஆணவகொலைகளை எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் நிறைவேற்றி வருகின்றன. இந்த நிலை ஏற்பட முக்கியா காரணம் திராவிட கட்சிகளின் இடைநிலை சாதி சார்பு தன்மை .ஓட்டு வங்கி அரசியலானது இங்கே தலித்துகளுக்கு எதிரானதாகவே விளங்குகிறது.
ஆகவே சாதி மறுப்பு திருமணம் என்றாலே அதை சுற்றி எழும் வன்முறைக்கு பயந்து பலரும் அதை தவிர்த்து வருகின்றனர் .
ஆனால் இந்த தீர்ப்பு நீதியின் பால் மக்கள் கொண்ட நம்பிக்கையை மீண்டும் நிலை நாட்டி இருக்கிறது . ஆயிரம் தான் இங்கே சாதி பெய் தலைவிரிதாடினாலும் ,ஆயிரம்தான் இங்கே அதிகார மட்டத்தில் அவர்கள் இயங்கினாலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் போராடி நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்பதை அவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள் .அந்த வகையில் இந்த வழக்கில் முனைப்போடு செயல்பட்ட அனைத்து மனித உரிமை நிறுவனங்களுக்கும் .மிக மிக முக்கியமாக இந்த வழக்கிலும் ,கவசல்யாவின் நிவாரணத்திலும் முக்கிய பங்காக இருந்த எவிடேன்ஸ் அமைபிற்க்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
2.இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் ,இதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது . அவர்கள் இனி ஒரு இரவாவது நிம்மதியாக உறங்குவார்கள் .
சட்டம் கடுமையானால் ஆயிரம் ஜாதி வெறி தூள் தூளாக போகும் என்பதை நாம் போக போக தெரிந்து கொள்ள போகிறோம்.
மேலும் இந்த வழக்கில் இந்த தீர்ப்பு வந்து நியாயம் நிலைத்ததற்கு முழு முதல் காரணம் கவுசல்யா மட்டுமே.
அந்த பெண்ணின் மனோ தைரியமும் ,நீதியின் பால் அவள் கொண்ட நம்பிக்கை மட்டுமே பெற்றோரை எதிர்த்தும் கூட அவளை நேர் வழியில் இயங்க செய்தது . இந்த வழக்கை வென்றது கவசல்யாவின் நேர்மை .
ஜான்சி ராணி ,மங்கமா ,கண்ணகி என்று கோடி பேரை காட்டினாலும் ,தர்மத்தின்படி சொந்த ரத்தமேயானாலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தந்த கவுசல்யாதான் நாம் வணங்க வேண்டிய பெண் .புரட்சி பெண் .
கவுசல்யாவை போலவே மற்ற பெண்களும் காதல் என்று வரும்போது தங்கள் விருப்பதின்படி ,ஞாயத்தின்படி நடந்துகொண்டால் இந்த மாநிலத்தில் ஜாதி என்ற ஒன்றை வேரோடு பிடுங்களாம்.
ஏனென்றால் இது தாய்வழி சமூகம்.பெண் நினைத்தால் மட்டுமே விடுதலை சாத்தியம்.இது சத்தியம்.
ஷாலின்

கருத்துகள் இல்லை: