சனி, 16 டிசம்பர், 2017

அருவி - தமிழ் சினிமா கானகத்தில் காட்டாறாகப் பாயவிருக்கும் இந்த அருவியைக் கொண்டாடாடுவோம்! ..!


விகடன் விமர்சனக்குழு
எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட  சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...!  
அருவி
அருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்த வயசுகளுக்கே உரிய உரையாடல்கள் நடக்கும் நண்பர்கள் குழு, 'லவ் யூ அருவினு வெள்ளைப் பேப்பர்ல எழுதிக்கொடுத்து ப்ரொபோஸ் பண்ணணும்' என்ற சினிமாத்தனமான  ஆசை - இதுதான் அருவியின் உலகம். வெளிப்பார்வைக்கு அருவி நம்மைச் சுற்றி நடமாடும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தி. பின் எது அவளைத் தனித்துவமானவள் ஆக்குகிறது என்ற கேள்விக்குப் பதிலாக விரிகிறது இந்த இரண்டு மணிநேர பயணம்.  

ஒரு பிரச்னை காரணமாக அருவி வீட்டை விட்டு வெளியேற நேர்கிறது. இரண்டு பைகளோடு தெருவில் இறங்கும் அவள் தனக்கான கூட்டைத் தேடி ஒவ்வோர் இடமாக அலைகிறாள். கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கை வாழும் அவளுக்கு ஒரு திருநங்கையின் நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்கிறார்கள். அரங்கிற்குள் சராசரி சமூக மதிப்பீடுகளின்படி '.............' அருவியாக நுழையும் அவள், அங்கிருந்து வெளிவரும்போது அதே சமூக மதிப்பீடுகளின்படி 'தீவிரவாதி' அருவியாக வெளிவருகிறாள். உண்மையில் அருவி யார்? எது அவளை வீட்டை விட்டு வெளியேற்றி டிவி நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்தது? டிவி நிகழ்ச்சி ஷூட்டிங் செட்டுக்குள் என்ன நடந்தது? தவறு யார் மேல் என்பதையெல்லாம் அடுத்தடுத்த திருப்பங்களின் வழியே முகத்திலறைந்து சொல்கிறது திரைக்கதை.
அதிதி பாலன்
நீண்ட நாட்களுக்குப் பின் முழுக்க முழுக்க ஒரே ஒரு பெண் கேரக்டரை மையமாக வைத்து வெளியான படம். அதேபோல் நீண்ட நாள்களுக்குப் பின் ஒரு புதுமுக நடிகையைப் பார்த்து பிரமித்ததும் இந்தப் படத்தில்தான். 'யப்பா என்னம்மா நடிக்குதுய்யா இந்தப் பொண்ணு' என நிச்சயம் ஒரு ஃப்ரேமிலாவது நம் வாய் முணுமுணுக்கும். சின்னச் சின்ன கண் சிமிட்டல்கள், ஒருகணம் சோகமாக... மறுகணம் வீம்பாக என்று சட்சட்டென நிகழும் முக மாறுதல்கள், நெகிழ்ச்சியான பின்பாதியில், உள்ளிருந்து ஓலத்தோடு எழும் சிரிப்பு என முதல் படத்திலேயே உணர்வுகளின் கலவைகளைக் கொட்டியிருக்கிறார் அதிதி பாலன். இந்த ஆண்டின் பெருமைக்குரிய அறிமுகம் இவர் என்பதில் சந்தேகம் இல்லை.    
Aruvi
அருவியோடு படம்நெடுகப் பயணிக்கும் திருநங்கை எமிலியாக சிறப்பாக நடித்திருக்கிறார் அஞ்சலி வரதன். பெரும்பாலான சினிமாக்களில் சித்திரிக்கப்படும் திருநங்கை கேரக்டரிலிருந்து அவருடையது வேறுபட்டிருப்பது பெரிய ஆறுதல். ஆனால் அந்த விடலைப் பையன் அவரைப் பற்றி கேட்கும் சந்தேகம் திரும்பத் திரும்ப வருவது சற்றே நெருடல் `டேய் ஃப்ரேமே சரி இல்லடா' என உதவியாளர்களிடம் எகிறிவிட்டு அடுத்தகணமே 'நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம் மேடம்' என பம்மும் ரியாலிட்டி ஷோ இயக்குநராக இயக்குநர் அருண்பிரபு. அதுவும் இடைவேளைக்கு முன் அருவி மூச்சுவிடாமல் பேசும் வசனத்திற்கு கைதட்டல்கள் அள்ளுகின்றன. நான் லீனியர் பாணியில்கவிதா பாரதி கச்சிதமாகப் பொருந்துகிறார். துணை இயக்குநராக நடித்திருக்கும் பிரதீப் ஆண்டனி, நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடித்திருக்கும் லஷ்மி கோபால்சுவாமி, சுபாஷாக வரும் விடலைப் பையன், தமிழைக் கடித்து துப்பும் போலீஸ் அதிகாரி என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் பொறுப்பு உணர்ந்து பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார்கள்.
ஒரு பெண் மீதான மதிப்பீடுகளை இந்தச் சமூகம் அவள் உடல் சார்ந்தே முன் வைப்பது, பாதிக்கப்பட்டவள் பெண்ணாகவே இருந்தாலும், 'அவ அப்படி இருக்கப் போய்தான் இப்படியாச்சு' என திரும்பவும் அவளையே குற்றம்சாட்டுவது எனப் புரையோடிப் போயிருக்கும் பிற்போக்கு எண்ணங்களை சுளீர் வசனங்கள் மூலம் விமர்சனத்துக்குளாக்குகிறார் இயக்குநர் அருண்பிரபு. அதுவும் இடைவேளைக்கு முன் அருவி மூச்சுவிடாமல் பேசும் வசனத்திற்கு கைதட்டல்கள் அள்ளுகின்றன. நான் லீனியர் பாணியில் முன் பின்னாக நகரும் கதை சொல்லல், இறுக்கமாக நகரும் காட்சிகளிலும்கூட இயல்பான நகைச்சுவைக்கு இடம் கொடுக்கும் காட்சியமைப்பு என ரொம்பவே மெனக்கெட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். தனிநபர் வாழ்க்கையில் மீடியாவின் தலையீடு, சாமியார்கள் மேல் கட்டப்படும் புனிதப் பிம்பம் என போகிறபோக்கில் நிறைய விஷயங்களை தொட்டுச் சென்றாலும் படத்தின் மையப்புள்ளியை விட்டுவிலகாமல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது கதை.
ஒரே ஒரு சின்ன இடத்தில் நடக்கும் கதை. ஆனாலும் அதை சலிப்புத் தட்டாமல் விறுவிறுப்பாக பரிமாறியதில் வெற்றி கண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட். ஆர்ப்பரிக்கும் நிஜ அருவியின் சாரல்கள் நம் மீது விழுவதற்கும், அழுது புழுங்கும் கதாநாயகி அருவியின் கண்ணீர்துளிகள் நம் மீது தெறிப்பதற்கும் இவரின் கேமரா வித்தை முக்கிய காரணம். பிந்துமாலினி - வேதாந்த் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே அழகு. படத்தின் பாடல்கள் அனைத்துமே கதையோடு ஒன்றிப்போவதும் கதையின் நகர்விற்கு உதவுவதுமாக அமைந்திருக்கின்றன. 

இயக்குநர், அதிதி பாலன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக வேலை எடிட்டர் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவிற்குத்தான். நான் லீனியர் பாணியில் கொஞ்சம் தவறினாலும் அயர்ச்சி தோன்றிவிடும் வாய்ப்புகள் அதிகம். போக, திரைப்பட விழாக்களுக்குச் சென்றுவந்த படங்கள் என்றாலே மெதுவாக நகருமோ என்ற தயக்கம் உண்டாவதும் இயல்பு. அந்த அயர்ச்சியும் தயக்கமும் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் இருக்கிறது ரேமண்ட்டின் வெற்றி. 
படத்தில் இப்படி எக்கச்சக்க ப்ளஸ்கள் இருந்தாலும் சிற்சில லாஜிக் உறுத்தல்கள் கண்ணுக்குத் தெரிவதையும் தவிர்க்கமுடியவில்லை. முக்கியமாக அருவி வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக இருக்கும் 'அது'. நடைமுறையில் அப்படி நிகழ வாய்ப்புகள் இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. முதல்பாதியில் யாருக்கும் பயப்படாத துணிச்சல்காரியாக வரும் அருவி இரண்டாம் பாதியில் எல்லாவற்றுக்கும் கலங்குவது ஏன்? ரியாலிட்டி ஷோவிற்கு வரும் மூன்று பேருக்கும் எந்த 'ஆபத்து'மில்லை என முன்கூட்டியே அருவிக்கு எப்படித் தெரிந்தது? குண்டுகளே தீராத அந்தத் துப்பாக்கியை அவ்வளவு சிறப்பாக அருவி கையாள்வது எப்படி என்ற கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கலாம்.

இந்த சின்னச் சின்ன உறுத்தல்களைத் தாண்டிப் படம் முடிந்து வெளியே வரும்போது உங்கள் கூடவே சில கதாபாத்திரங்களும் பயணிக்கலாம். அது 'எனக்கும் உங்களை மாதிரியெல்லாம் வாழணும்னு ஆசை' என சமூகம் ஒதுக்கிவைத்த ஆதங்கத்தில் பொருமும் அருவியாக இருக்கலாம், 'தெருவில இறங்குனா குறுகுறுன்னு பாக்குறானுக, அவ்வளவு அழகாவா இருக்கோம்?' என விரக்தியாய்ப் பேசும் எமிலியாக இருக்கலாம், இல்லை 'நாலு பேரு என்ன சொல்லுவான்?' என கண்ணுக்குத் தெரியாதவர்களைப் பற்றி கவலைப்பட்டு மகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் அருவியின் அப்பாவாக இருக்கலாம். ஆனால், படம் பார்த்த அனுபவமும், உடன் பயணிக்கும் கேரக்டர்களும் அவ்வளவு எளிதாக நம்மைவிட்டு விலகப்போவதில்லை. தமிழ் சினிமா கானகத்தில் காட்டாறாகப் பாயவிருக்கும் இந்த அருவியைக் கொண்டாடித் தீர்க்கலாம் வாருங்கள்..!

கருத்துகள் இல்லை: