வெள்ளி, 15 டிசம்பர், 2017

கோவையில் 2 ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை: வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது

கோவையில் 2 ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை: வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் கைதுதினத்தந்தி :கோவையில் 2 ஏ.டி.எம்.களில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் நாமக்கல், சேலத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் புதரில் பதுங்கியிருந்த 2 பேரை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்டுபிடித்தனர். நாமக்கல், கோவையில் கடந்த 10-ந் தேதி 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இதுதொடர்பாக கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். கொள்ளையர்களை தேடிவந்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் வந்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இந்த கும்பல் வடமாநிலத்துக்கு கார் மூலம் தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.


நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வந்த அரியானா மாநில பதிவெண் கொண்ட காரை சோதனையிட போலீசார் முயற்சித்தனர். ஆனால் சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது.

போலீசார் வாகனங்களில் விரட்டிச் சென்று சிறிது தூரத்தில் அந்த காரை சுற்றி வளைத்தனர். காரில் இருந்த 3 பேர் இறங்கி ஓடி, இருட்டில் மேற்கு பாலப்பட்டி கிராமத்திற்குள் புகுந்து விட்டனர். போலீசார் அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் பொழுது விடிந்ததும் காலை 7 மணி அளவில் கிராமத்தில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தேடும் பணியை தொடங்கினர்.

ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த வடமாநில வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபேர் (வயது 20) என்பதும், கோவையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவன் என்பதும் தெரியவந்தது.

மற்ற 2 பேரையும் கேமரா பொருத்திய ‘ஹெலிகேம்’ என்ற ஆளில்லா குட்டி விமானம் மூலமும் போலீசார் தேடினர். இதில் அங்குள்ள புதருக்குள் 2 கொள்ளையர்கள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். புதரில் அவர்கள் வீசிய நாட்டு துப்பாக்கி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இதேபோல அந்த சுங்கச்சாவடிக்கு அதிகாலையில் வந்த டெல்லி பதிவெண் கொண்ட காரை மடக்கிப்பிடித்து, அதில் இருந்த 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

கைதான மற்ற 4 பேரும் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த சால்மன் என்கிற முபாரிக் (30), அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அமீத்குமார் (35), உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாக் (32), பீகார் மாநிலத்தை சேர்ந்த சுல்பிஹீர் (25) என்பதும் தெரியவந்தது.

இந்த தகவல் அறிந்துவந்த கோவை மாவட்ட போலீசாரிடம் 5 கொள்ளையர்களையும், அவர்கள் வந்த 2 கார்கள் மற்றும் காரில் இருந்த ரூ.2 லட்சம், துப்பாக்கி ஆகியவற்றையும் நாமக்கல் போலீசார் ஒப்படைத்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரியை வழிமறித்து சோதனை நடத்தியபோது, அதில் 4 இரும்பு கம்பிகள், 2 பெரிய ஸ்குருடிரைவர் போன்ற ஆயுதங்கள் இருந்தன. லாரியில் வந்த 3 பேரையும் சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் கோவை ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த அமீன் (34), சுபேர் என்கிற சுரேஷ் (33), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோசன் (34) என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களும், ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல்லில் பிடிபட்ட 5 கொள்ளையர்களுடன் ஒன்றாக வந்தபோது, 3 பேர் மட்டும் சேலத்தை நோக்கி லாரியில் தப்பி வந்தது தெரியவந்தது.

கோவை போலீசார் கொள்ளையர்கள் 8 பேரையும் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ரகசிய இடத்தில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கும்பல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடித்து இருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: