புதன், 13 டிசம்பர், 2017

நீட் தேர்வுக்கு ஒரே வினாத்தாள்: சிபிஎஸ்இ!


மின்னம்பலம் ; 2018ஆம் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நேற்று (டிசம்பர் 12) அறிக்கை அளித்துள்ளது.
கடந்த மே 7ஆம் தேதி நீட் எனப்படும் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்திலிருந்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நீட் தேர்வில் மாணவியின் உள்ளாடையை அவிழ்க்கக் கூறியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மாநிலங்களில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாகத் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகத் தெரிவித்தனர். மேலும், நீட்’ தேர்வு வினாத்தாளில் நான்கு தவறான கேள்விகள் கேட்கப்பட்டதாகப் பாட நிபுணர்களும் தேர்வு எழுதிய மாணவர்களும் குற்றம்சாட்டினர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கூறி அரியலூர் மாணவி அனிதா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தள்ளுபடியானதைத் தொடர்ந்து, அனிதா விரக்தியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டது என்றும், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வினாத்தாள் மிக கடினமாக இருந்தது எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் மோகன் சாந்தநாகுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று வந்தது. அப்போது, ஆஜரான சிபிஎஸ்இ, அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின்போது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படும் என்றும், அனைத்து வினாத்தாள்களும் ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்தது.
அப்போது நீதிபதிகள், “சிபிஎஸ்இயின் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. நீட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: