புதன், 13 டிசம்பர், 2017

கௌசல்யா சங்கர் : விடுவிக்கப்பட்ட தாய் உட்பட 3 எதிராக மேல் முறையீடு செய்வேன்


தினமணி : உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மூவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று கொலையான சங்கரின் மனைவி கௌசல்யா அறிவித்துள்ளார்.
kowsalya
தமிழ்நாட்டையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன்  இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்தார்.
சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 8 பேர் குற்றவாளிகள் எனவும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 8 பேருக்கும், பின்னர் சிறிது நேரம் கழித்து தண்டனை விபரங்களை நீதிபதி வெளியிட்டார். தண்டனை விபரம் பின்வருமாறு:
கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன் மற்றும் மதன் ஆகிய ஆறு பேருக்கு அவர்கள் மீது தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளிலும் இரட்டை தூக்குத் தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.மீதமுள்ள இருவரில் ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவரான மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி அலமேலு நடராசன் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து சங்கரின் மனைவி கௌசல்யா தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியாதாவது:
என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்துள்ள இந்த தீர்ப்பினை வரவேற்கிறேன். நீதித்துறையின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கினை பொறுத்தவரை கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவரும், தீர்ப்பு வரும் வரை நீதிமன்றத் காவலில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் பாராட்டத்தக்கது. என்னுடைய வழக்கின் தனித்தன்மையினையும், இதற்கு உள்ள ஜாதியப்  பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். 
இந்த தீர்ப்பானது இனி வரும் ஆணவக் கொலை வழக்குகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதுவும் பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை என்பது வரவேற்கத்தக்கது. தூக்குத் தண்டனை குறித்த எனது பார்வை என்பத்து வேறாக இருந்தாலும், இத்தகைய ஜாதி வெறி கொலைகளுக்கு இது முக்கியமான ஒரு தண்டனைதான்.
இந்த தீர்ப்பானது இனி இதுபோல ஆணவக் கொலை சம்பவங்களில் ஈடுபட எண்ணுவோர்களுக்கு மனத்தடையாக அமையும். இந்தியாவிலேயே முதன்முறையாக பெரும்பாலான குற்றவாளிகளுக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை என்பதெல்லாம் நீதித்துறையின் மன  உறுதியினைக் காட்டுகிறது.
எனவே இந்த தீர்ப்பினை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். இந்த வழக்கில் மூவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நான் மேல்முறையீடு செய்வேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு வேலை உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யச் சென்றால், நானும் மேல்முறையீடு செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் சட்டப் போராட்டத்தினை தொடருவேன்.
ஜாதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நான் சளைக்கவே மாட்டேன். கடைசி வரை களத்தில் நின்று போராடுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: