வியாழன், 14 டிசம்பர், 2017

ராதாரவி வழக்கு: விஷால் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு


tamilthehindu :நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் டிசம்பர் 19-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் வெற்றிபெற்று, தலைவராக நடிகர் நாசர், செயலாளராக நடிகர் விஷால் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். பின்னர், அவர்களுக்கு முன்னதாக சங்கத்தை நிர்வகித்த தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் முடிவெடுக்கப்படும் வரை ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என செப்டம்பர் 22-ம் தேதி சங்கச் செயலாளர் என்ற முறையில் விஷால் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் ராதாரவியை நவம்பர் மாதம் நீக்கினர். இதை அடுத்து நடிகர் சங்கம் மற்றும் செயலாளர் விஷாலுக்கு எதிராக ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, நடிகர் சங்கம் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி, நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்துவிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மூலம் நீதிமன்ற அவமதிப்பு தெளிவாகியுள்ளதால், டிசம்பர் 19-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடிகர் சங்கச் செயலாளரான விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை: